Spotlightவிமர்சனங்கள்

ரைட் – விமர்சனம் 3/5

இயக்கம்: சுப்ரமணியன் ரமேஷ் குமார்

நடிகர்கள்: நட்டி, அருண்பாண்டியன், மூணாறு ரமேஷ், அக்ஷரா ரெட்டி, வினோதினி, ஆதித்யா, யுவினா

தயாரிப்பாளர்: திருமால் லக்‌ஷ்மணன் & ஷியாமளா

இசை: குணா சுப்ரமணியன்

ஒளிப்பதிவு: எம் பத்மேஷ்

பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு பணிக்காக சென்று விடுகிறார் இன்ஸ்பெக்டர் நட்டி. தனது மகனை காணவில்லை என்று போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்க வருகிறார் அருண் பாண்டியன்.

அங்கிருக்கும் போலீஸ் ரைட்டர் மூணாறு ரமேஷ், அருண் பாண்டியனை கீழ்த்தரமாக நடத்தி, புகாரை தூக்கியெறிகிறார்.

இந்த நிலையில், போலீஸ் நிலையத்திற்கு மர்ம போன் ஒன்று வருகிறது. அதில், போலீஸ் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், யாராவது அங்கிருந்து வெளியே சென்றால் தானாக வெடிக்கும் என்றும் கூறுகிறார்.

இதனால், போலீஸ் நிலையத்திற்குள் சிக்கிக் கொண்ட அனைவரும் அதிர்ச்சியாகின்றனர். போலீஸ் நிலையத்தை மொத்தமாக தன் கண்ட்ரோலில் எடுத்துக் கொள்கிறார் அந்த மர்ம நபர்.

காவல் நிலையத்திலிருந்து தப்பிக்க நினைத்து எடுத்து வைக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைய, அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் அனைவரும் இருக்கின்றனர்.

இறுதியில், இந்த சம்பவத்தை செய்கின்ற அந்த மர்ம நபர் யார்.? இதையெல்லா எதற்காக செய்கிறார்.?? என்பதே படத்தின் மீதிக் கதை.

போலீஸ் நிலையத்தை மட்டுமே வைத்து நடக்கும் படங்கள் ஏராளமாக வந்தாலும், அந்த படத்திலிருந்து ரைட் படம் முற்றிலும் மாறுபட்ட ஒரு கோணத்தில் சென்றது படத்திற்கு மிகப்பெரும் பலம் என்றே கூறலாம்.

பரபரப்பாக சென்ற திரைக்கதை, நம்மை சீட்டின் நுணிக்கே எடுத்துச் சென்று விட்டது. மர்ம நபர் காவல் நிலையத்திற்கு போன் செய்வதில் இருந்து ஆரம்பித்து, க்ளைமாக்ஸ் வரையிலும் அடுத்து என்ன நடக்கும் அடுத்து என்ன நடக்கும் என நம்மை எதிர்பார்ப்பிலேயே கதையை நகர்த்தியது இயக்குனரின் சாமர்த்தியம்.

அடுத்து நடக்க இருப்பதை நம்மால் யூகிக்கக் கூட முடியாத வண்ணம் கதையை நகர்த்தி இயக்குனர் தன் திறமையை எழுத்தில் நிரூபித்திருக்கிறார்.

ஆரம்பத்தில் வந்து செல்லும் நட்டி, படத்தின் இரண்டாம் பாதியில் தான் மீண்டும் கதைக்குள் வருகிறார். அதன் பிறகு நடக்கும், சம்பவங்களில் தான் ஒரு நடிப்பின் அரக்கன் என்பதை தன் நடிப்பில் காண்பித்திருக்கிறார்.

படத்தில் நடித்திருந்த மூணாறு ரமேஷ், அக்ஷரா ரெட்டி, வினோதினி, ஆதித்யா, யுவினா உள்ளிட்ட அனைவருமே இயக்குனர் சொன்னதை அப்படியே செய்திருக்கிறார்கள். அவர்கள் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

அருண்பாண்டியனின் நடிப்பு சற்று செயற்கைத் தனமாக இருந்ததை தவிர்த்திருந்திருக்கலாம்.

பாடல்களில் மெனக்கெடல் காட்டவில்லை என்றாலும், பின்னணி இசையில் நல்லதொரு முயற்சியைக் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர்.

படம் முழுவதும் போலீஸ் ஸ்டேஷன் என்றாலும், ஒளிப்பதிவில் தன்னால் என்ன மாதிரியான காட்சிகளை அழகாகக் கொடுக்க முடியுமோ அதை அப்படியாக கொடுத்து அசத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

ரைட் – முயற்சி

Facebook Comments

Related Articles

Back to top button