உணர்வுபூர்வமான கதையுடன் வலுவான உள்ளடக்கம் கொண்ட படங்கள் பார்வையாளர்களின் மனதையும் ஆர்வத்தையும் கவர தவறியதில்லை. தமிழ் சினிமாவில் பல இளம் தலைமுறை இயக்குநர்கள் தங்களது திறமையால் பாக்ஸ் ஆபிசிஸில் வசூலைக் குவித்துள்ளனர். ‘கிரிமினல்’ படத்தின் மூலம் இயக்குநராக களமிறங்கும் தக்ஷிணா மூர்த்தி, இப்படம் குறித்து ஏற்கனவே வர்த்தக வட்டாரங்களில் நேர்மறையான தாக்கத்தை உருவாக்கியுள்ளார். படத்தை பர்சா பிக்சர்ஸ் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐ.பி.கார்த்திகேயன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் தக்ஷிணா மூர்த்தி கூறுகையில், “எங்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு பாராட்டுகள் கிடைத்து வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் இயக்குநராக முயற்சி செய்து கொண்டிருந்த போது, ஒன்றிரண்டு கதைகளை எழுதியிருந்தேன். அவற்றை நிறைவேற்றுவதற்கு நிறைய தடைகளை கடக்க வேண்டியிருந்தது. இந்த நேரத்தில், ஒரு டீக்கடையில் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அதுதான் ‘கிரிமினல்’ ஆரம்பித்த புள்ளி. தயாரிப்பாளர்களான பர்சா பிக்சர்ஸ் மீனாட்சி சுந்தரம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயன் ஆகியோர் இந்தக் கதையைக் கேட்டபோது அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. கதைக்குள் கௌதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் வர படம் இன்னும் பெரிதாகியது. படத்தில் எந்த விதத்திலும் தலையிடாமல் எனக்கு தேவையான சுதந்திரத்தைத் தயாரிப்பாளர்கள் கொடுத்தனர். மிகப் பெரிய பொருட்ச்செலவில் படம் சிறப்பாக வந்துள்ளது” என்றார்.
அவர் தொடர்ந்து கூறும்போது, “மதுரையை களமாகக் கொண்ட பல காதல் திரைப்படங்கள் வந்துள்ளது. ஆனால் இதில் இருந்து ‘கிரிமினல்’ திரைப்படம் விதிவிலக்காக இருக்கும். நகரத்தில் நடக்கும் க்ரைம்-த்ரில்லரையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. படக்குழுவினர் அனைவரும் கொடுத்த ஆதரவும் படத்தில் பணியாற்றிய அனுபவமும் எனக்கு மறக்க முடியாத நினைவாக இருக்கும்.
இந்தப் படத்துக்காக மதுரையைச் சேர்ந்த பல உள்ளூர்வாசிகளை சொந்தக் குரலில் நடிக்கவும், டப்பிங் செய்யவும் வைத்துள்ளோம். ஒரு வயதான பெண்மணி டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது ஆச்சரியமடைந்து, ’உண்மையிலேயே மதுரையில் இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்களா?’ என்று கேட்டார். படப்பிடிப்பின் போது எனக்கு இருந்த மன அழுத்தம் முழுவதும் அவரது பாராட்டு வார்த்தைகளால் காற்றில் மறைந்தது. திரையரங்குகளில் வெளியாகும் முன்பே படம் நல்ல வரவேற்பைப் பெறத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பார்வையாளர்களுக்கும் சீக்கிரம் படத்தைக் காட்ட ஆர்வமாக உள்ளோம்” என்றார்.
படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து இருக்கிறார். பாடல்களை சினேகன் எழுதியிருக்க, ஒளிப்பதிவை பிரசன்னா எஸ் குமார் கையாண்டுள்ளார். படத்தொகுப்பை மணிகண்ட பாலாஜி கவனிக்கிறார்.
இப்படத்தின் ஆடியோ, டிரைலர் மற்றும் உலகம் முழுவதும் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்