Spotlightசினிமா

‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆடியோ லாஞ்சில் ரசிகர்களை உற்சாகப்படுத்திய சூர்யா – ஆகஸ்ட் 14 முதல் உலகம் முழுவதும் ரிலீஸ்!

சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்களின் தயாரிப்பில், இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் மாணவர்களின் உற்சாக வரவேற்புடன் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த திரைப்படம் குடும்பம் முழுவதும் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ள ஃபீல்-குட் ஃபேமிலி என்டர்டெய்னராகும்.

இப்படத்தில் சூர்யாவுடன் மமீதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், யோகி பாபு, நாசர், காளி வெங்கட், ஜார்ஜ் மரியான், ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில், நிமிஷ் ரவி ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.

கோவையில் திருவிழா போல் ஆடியோ லாஞ்ச்

கோவையில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சூர்யதேவர நாக வம்ஷி, இயக்குநர் வெங்கி அட்லூரி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், நடிகர் சூர்யா, நடிகை மமீதா பைஜூ, பாடலாசிரியர் அருண் ராஜா காமராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

“இது குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்” – ஜி.வி.பிரகாஷ்

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் பேசுகையில், ‘சூரரைப் போற்று’ படத்திற்குப் பிறகு சூர்யாவுடன் மீண்டும் இணைந்திருப்பது மகிழ்ச்சி. ‘விஸ்வநாத் & சன்ஸ்’ அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கில் பார்த்து ரசிக்க வேண்டிய உணர்வுபூர்வமான திரைப்படமாக இருக்கும். ரசிகர்களுக்காக ‘தி ஒன்’ பாடலை வெளியிடுகிறோம்‘ என்றார்.

“இது சூர்யாவுக்கு புதிய அடையாளம்” – வெங்கி அட்லூரி

இயக்குநர் வெங்கி அட்லூரி பேசுகையில், ‘இந்தக் கதையை கேட்டவுடன் சூர்யா உடனடியாக ஒப்புக்கொண்டார். உறவுகள், குடும்பம், காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுகள் அனைத்தும் கலந்த ஒரு முழுமையான திரைப்படமாக இது இருக்கும். ரசிகர்கள் மட்டும் அல்ல, அவர்களது குடும்பத்தினரும் இந்தப் படத்தை கொண்டாடுவார்கள்’ என்றார்.

“குடும்பத்திற்கான நேரத்தை ஒதுக்குங்கள்” – சூர்யா

நிகழ்ச்சியின் முக்கிய தருணமாக நடிகர் சூர்யாவின் உரை அமைந்தது.

ரசிகர்களின் அன்பிற்கு நன்றி தெரிவித்த அவர்,

“குடும்பத்தினருடன் செலவிடும் நேரம் குறைந்து வருகிறது. டிஜிட்டல் உலகத்தை விட உறவுகளோடு செலவிடும் தருணங்களே வாழ்க்கையின் உண்மையான நினைவுகள். அனைவரும் குடும்பத்திற்காக நேரம் ஒதுக்க வேண்டும்,” என்றார்.

மேலும், தனது பிறந்த மண் கோவையை நினைவுகூர்ந்த சூர்யா, சிறுவயது நினைவுகள், கிராம வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்வுபூர்வமாக பகிர்ந்து கொண்டார்.

‘கருப்பு’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் அளித்த ஆதரவிற்கும் நன்றி தெரிவித்த அவர், ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் தனது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், அவர்களது குடும்பத்தினருக்கும் பிடிக்கும் வகையில் உருவாகியிருப்பதாக கூறினார்.

படத்தில் ரொமான்ஸ், நகைச்சுவை, குடும்ப உறவுகள், உணர்வுகள் மற்றும் ஹீரோயிசம் என அனைத்து அம்சங்களும் இடம்பெற்றுள்ளதாகவும், ரசிகர்கள் குடும்பத்துடன் திரையரங்கிற்கு வந்து படத்தை ரசிக்குமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம், இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button