Spotlightசினிமாவிமர்சனங்கள்

ஸ்வீட் காரம் காபி – விமர்சனம் 3/5

பிஜாய் நம்பியா, கிருஷ்ணா மாரிமுத்து, ஸ்வாதி ரகுராமன் உள்ளிட்டவர்களின் இயக்கத்தில் லெட்சுமி, மது, சாந்தி, வம்சி கிருஷ்ணா, கவின் ஜெய் பாபு உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகி ப்ரைம் வீடியோவில் வெளியாகியிருக்கும் இணையத் தொடர் தான் “ஸ்வீட் காரம் காபி”.

கவின் ஜெய் பாபுவின் மனைவியாக வருகிறார் மது. இவர்களுக்கு சாந்தி மற்றும் பாலா சுரேஷ். சாந்தி கிரிக்கெட் விளையாட்டு வீரர். பாலா சுரேஷ் ஐடி’யில் பணிபுரிகிறார்.

கவின் ஜெய் பாபுவின் அம்மாவாக வருகிறார் லெட்சுமி. வயதானதால் வீட்டிற்குள்ளே பொத்தி பொத்தி தனது அம்மாவை பார்த்துக் கொள்கிறார் கவின் ஜெய்பாபு.

ஆனால், லெட்சுமிக்கோ, ஊர் சுற்றி சிறகடிக்க ஆசை. அதுமட்டுமல்லாமல், தனது இளம் வயது நட்பை நேரில் காண ஆசை.

சாந்தி தன்னோடு பயிற்சி எடுக்கும் கிரிக்கெட் வீரர் மீது காதல். இருவருக்குமான காதலில் விரிசல் விழுகிறது.

வீட்டிலேயே அடைபட்டுக் கிடக்கும் மதுவிற்கு வெளியே சென்று ஊர் சுற்ற ஆசை. இவரின் ஆசைக்கு தடை போடுகிறார் கவின் ஜெய்பாபு.

சாந்தி, லெட்சுமி, மது மூவரும் காரை எடுத்துக் கொண்டு கோவா செல்ல திட்டமிட்டு இரவோடு இரவாக வீட்டில் கவினிடம் கூறிக் கொள்ளாமல் சென்று விடுகின்றனர்.

ஆனால், பயணம் கோவாவிற்கு இல்லாமல் நீண்ட நெடு பயணமாக பூனே சென்று அங்கிருந்து வட இந்தியாவிற்கு செல்கிறது.

செல்லும் வழியில் இவர்கள் மூவரும் சந்தித்த இடங்கள், மனிதர்கள் அவர்களிடம் இருந்து இந்த மூவரும் கற்றுக் கொண்டது என்ன? மகள், அம்மா, மனைவி மூவரும் இல்லாமல் கவின் தன் வாழ்வில் கற்றுக் கொண்டது என்ன ?? என்பதே இந்த “ஸ்வீட் காரம் காபி” தொடரின் மீதிக் கதை.

தொடர் ஆரம்பித்ததுமே கதைக்குள் பயணமானது தொடருக்குள் நாம் செல்ல ஏதுவாக இருந்தது. கதாபாத்திரங்களின் தேர்வு கச்சிதமாக இருந்தது.

அழகான க்யூட்டான எக்ஸ்ப்ரஷனைக் கொடுத்து நம்மை கவர்ந்திருக்கிறார் சாந்தி பாலச்சந்திரன். காதல், எமோஷன்ஸ், பாசம், நட்பு என அந்த வயதிற்குள் ஏற்படும் குழப்பங்கள், கசப்புகள் அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதையும் கண்முன்னே கொண்டு வந்து ஒரு வாழ்வியலாக நடித்திருக்கிறார் சாந்தி.

மதுவின் கதாபாத்திரமும் பாராட்டும்படியாக இருந்தது. குடும்ப பாங்கான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் மது. குடும்பத்திற்காக தனது ஆசைகள் அனைத்தையும் மனதிற்கு அடக்கி வைத்தது, முன்பொரு காலத்தில் தனது வாழ்வின் பயணம் அப்படியே பொய்த்துபோனதை எண்ணி ஏங்கும் இடத்தில் என பல இடங்களில் தனது அனுபவ நடிப்பை கனக்கச்சிதமாகக் கொடுத்து அசத்தியிருக்கிறார் மது.

அனைவரின் நடிப்பையும் தூக்கி சாப்பிடுவது போன்று, இந்த வயதிலேயும் அவ்வளவு எனர்ஜியோடு நடித்து தனி முத்திரை பதித்துவிட்டுச் செல்கிறார் நடிகை லட்சுமி.

வம்சி கிருஷ்ணாவிற்கும் சாந்தி பாலச்சந்திரனுக்கும் நடக்கும் அறிமுக உரையாடலின் வசனங்கள் மிக அதிகமாகவே கவனம் பெறுகின்றன.

அப்பாவிற்கும் மகனுக்கும் இடையே காருக்குள் நடக்கும் உரையாடல், பாசம், ஃபீரிடம், நட்பு என பலவற்றையும் கலந்து கொண்ட பிணைப்பாக இருந்தது.

ஆடை சுதந்திரத்தையும், குடும்பத்திற்காக ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருப்பதாக தங்களின் வாழ்க்கை சந்தோஷத்தை பாதி இழந்து விடுகிறோம் என்பதையும் கூறுகிறது….

ஜோதிகா நடிப்பில் வெளிவந்த மகளிர் மட்டும் படத்தில் வந்த கதை தான் என்றாலும், இதுவும் ஒரு வாழ்வியல் தான், இதுவும் ஒரு பயணம் தான்… ரசனைக்கு ஏற்றவிதமாக நிச்சயம் இத்தொடர் இருக்கும்…

கவின் ஜெய் பாபு மற்றும் வம்சி கிருஷ்ணாவின் நடிப்பும் பாராட்டும்படியாக அமைந்தது..

கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை பல இடங்களில் கைகொடுத்தாலும், ஒரு சில இடங்களில் “96” படத்தில் த்ரிஷா என்ட்ரீக்கு வரும் இசை உள்ளே வந்து வந்து சென்றது சற்று தொய்வடைய வைத்தது.. 96 படத்திற்கும் கோவிந்த் வசந்தாவே இசையமைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது..

தொடருக்கு பக்க பலமாக இருந்தது ஒளிப்பதிவு தான். நம்மையும் மூவரோடு பயணிக்க வைத்த ஒளிப்பதிவாளருக்கு வாழ்த்துகள்.

ஸ்வீட் காரம் காபி – பயணத்தில் கிடைத்த ஓர் அழகிய வாழ்வியல்…

Cinematography: Krishnan Vasanth, Viraj Singh, Remy Dalai
Music: Govind Vasantha
Creator, Producer: Reshma Ghatala
Directed by: Krishna Marimuthu, Swathi Raghuraman, Bijoy Nambiar
OTT Platform: Amazon Prime Video 

Facebook Comments

Related Articles

Back to top button