விளையாட்டு

”தல இருந்தும் மிஸ் ஆகிடுச்சே”… சென்னையை வீழ்த்தியது பஞ்சாப்!

மொஹாலி: சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய லோகேஷ் ராகுல், கிறிஸ் கெயில் ஜோடி அதிரடியாக விளையாடியது. இதனால் 8-வது ஓவரில் எளிதாக 96 ரன்களை கடந்தது.

37 ரன்கள் எடுத்து லோகேஷ் ராகுல் அவுட் ஆனார். அதிரடியாக விளையாடிய கெயில் 33 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன் பின்னர் களமிறங்கிய மன்யங் அகர்வால் சற்றே அதிரடி காட்ட பஞ்சாப் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

எதிர்பார்ப்புடன் களமிறங்கிய யுவராஜ் சிங் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கருண் நாயர் அதிரடியாக விளையாடி 29 ரன் எடுத்து வெளியேறினார். இறுதியில், பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்களை எடுத்தது.

சென்னை அணி தரப்பில் தாகூர், இம்ரான் தாஹீர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து, 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேன் வாட்சன், முரளி விஜய் ஆடினர். வாட்சன் 11 ரன்னிலும், முரளி விஜய் 12 ரன்னிலும் அவுட்டாகினர்.

அவர்களை தொடர்ந்து ஆடிய அம்பதி ராயுடு ஓரளவு தாக்குப்பிடித்து 35 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து இறங்கிய சாம் பில்லிங்ஸ் 9 ரன்னில் அவுட்டானார். அப்போது சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து களமிறங்கிய கேப்டன் தோனியும் , ரவீந்திர ஜடேஜாவும் ஒன்றிரண்டாக ரன்கள் சேர்த்தனர். கடைசி 5 ஓவர்களில் 76 ரன்கள் தேவைப்பட்டது. இருவரும் இணைந்து 50 ரன்கள் சேர்த்த நிலையில் ஜடேஜா 19 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக ஆடிய தோனி அரை சதமடித்தார். அடுத்து பிராவோ இறங்கினார். தோனி தனது அதிரடியை தொடர்ந்தார். இதனால் கடைசி ஓவரில் சென்னை அணி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.

ஆனால் இறுதி ஓவரில் 12 ரன்கள் மட்டுமே எடுத்து சென்னை அணி தோல்வி அடைந்தது. தோனி 44 பந்துகளில் 5 சிக்சர், 6 பவுண்டரியுடன் 79ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது. சற்றும் எதிர்பாராத விதமாக சென்னையை வீழ்த்தியது பஞ்சாப்.

Facebook Comments

Related Articles

Back to top button