
தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடும் இவ்வேளையில், பல சமூக நல தொண்டு நிறுவனங்கள், மக்களின் தாகத்தை தீர்த்து வருகின்றன.
ஆளுங்கட்சியினர் ஆலயங்களில் சிறப்பு பூஜை செய்து வருகிறது, எதிர்கட்சியோ போராட்டம் செய்து வருகிறது. ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை எடுக்காதவர்களை என்னவென்று சொல்வது என மக்கள் புலம்பிக் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தினர் சார்பாக பல இடங்களில் மக்களுக்கு இலவசமாக குடிநீரை வழங்கி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை, பல பகுதிகளுக்கு ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட தலைவர் சோளிங்கர் ரவி மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
நேற்று, வேலூர் மாவட்டமே அதிரும் வகையில் நீர் சேமிப்பின் முக்கியத்துவத்தையும், தலைகவசம் அணிவதின் முக்கியத்துவத்தையும், நதிகள் இணைப்பு, மரங்கள் நடுதல் ஆகியவற்றின் அவசியத்தையும் உணர்த்தும் விதமாக பிரம்மாண்ட பேரணியை நடத்திருக்கின்றனர் ரஜினி மக்கள் மன்றத்தினர்.. இது, பல கட்சிகளை ஆட்டம் காண வைத்திருக்கிறது.
இது குறித்து பேசிய வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் தலைவர் சோளிங்கர் ரவி, ‘ இதுபோன்ற உதவிகள் தற்காலிகமானதுதான். ஏனெனில் தனிமனிதர் அல்லது ஒரு இயக்கத்தினரால் சில மாதங்களுக்கு மட்டுமே உதவிசெய்ய முடியும். ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்துவதால் எந்தப் பயனும் இல்லை. ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். தண்ணீர் பிரச்னையைத் தீர்ப்பதற்கான செயல் திட்டங்களைத் தீட்ட வேண்டும். அதே சமயம், ஒவ்வொருவரும் தங்களது வீடுகளில் மழைநீரைச் சேகரிக்க வேண்டும். குடிநீரை வீணாக்குவதை போதுமான அளவு தடுக்க வேண்டும்.
நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சுவதைத் தவிர்த்து தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வீட்டுக்கு வீடு மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்க வேண்டும். பிளாஸ்டிக் கழிவுகளை நிலத்தில் வீசுவதைத் தவிர்க்க வேண்டும். இதையெல்லாம் பின்பற்றுவதை தவிர்த்தால் அடுத்த தலைமுறையினருக்கு நாம் மிகப்பெரிய துரோகம் செய்வதாக அமைந்துவிடும். அடுத்த தலைமுறை என்பது குப்பனோ, சுப்பனோ இல்லை. நம் குழந்தைகள்தான் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். வரும்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டிலிருந்து மீள வேண்டும் என்றால் சிந்தித்துச் செயல்படுங்கள்.’ என்றார்.




