
துள்ளாத மனமும் துள்ளும், மனம் கொத்தி பறவை, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், தேசிங்கு ராஜா என பல ஹிட் படங்களை தொடர்ச்சியாக கொடுத்துக் கொண்டிருப்பவர் இயக்குனர் எழில்.
இவர் அடுத்ததாக தேசிங்கு ராஜா 2 என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில், விமல், ஜனா, பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா, ஜூஹி, ஆர் வி உதயகுமார், ரவிமரியா, சிங்கம்புலி, புகழ், லொள்ளு சபா சாமிநாதன், மதுமிதா, மதுரை முத்து, வினோத், சாம்ஸ், வையாபுரி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.
செல்வா ஒளிப்பதிவு செய்ய வித்யாசாகர் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
கதைக்குள் சென்று விடலாம்..
ஏரியாவின் இன்ஸ்பெக்டராக வரும் விமலுக்கும் மற்றொரு ஏரியாவின் இன்ஸ்பெக்டராக வரும் KPY புகழுக்கு அடிக்கடி மோதல் நிலவுகிறது.
இந்நிலையில், மிகப்பெரும் ரவுடியின் மகனை யாரோ மர்மமான முறையில் கொன்று விட, கொன்றது ரவிமரியா தான் என்று தெரிந்து கொண்டு, அவரது மகனை கொல்ல திட்டம் தீட்டுகிறது ரவுடி டீம்.
ரவிமரியாவின் மகனை காப்பாற்ற முயற்சி செய்கிறது விமல் & டீம். அதுமட்டுமல்லாமல், கூவத்தூர் ரெசார்ட்டில் அரசியல்வாதிகள் அடிக்கும் லூட்டிகள் அடங்கிய டெக்கை மீட்கவும் போராடுகிறார் விமல்.
இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த விமல், மீண்டும் பழைய பார்முக்கு சென்று விட்டார் என்று கூறுவது போல, பரமசிவன் பாத்திமா, தேசிங்கு ராஜா 2 என அடுத்தடுத்து விமலின் கதை தேர்வு மிகவும் மோசமாக இருக்கிறது என்று தான் கூற வேண்டும். நாயகன் எண்ட்ரீ ஆரம்பித்து படம் முழுவதிலுமே விமலின் கதாபாத்திரத்தை என்னவென்று சொல்வது என்று தலையில் அடித்துக் கொண்ட ரசிகர்கள் தான் ஏராளம்.
KPY புகழின் கதாபாத்திரம் வரும் காட்சிகள் அனைத்துமே தலைவலி தான் ஏற்படுகிறது. கத்தி கத்தி பேசி அனைவரையும் எரிச்சலடைய வைத்திருக்கிறார். எதற்காக இவரை பெண் வேடத்தில் நடிக்க வைத்தார்கள் என்று இறுதி வரை தெரியவில்லை.
கதைக்கு சம்மந்தமில்லாத காமெடிகள், காட்சிகள் எந்த இடத்திலும் சீரியஸ்னஸ் இல்லை, கதாபாத்திரங்கள் ஒருவர் கூட கதைக்கு ஒட்டாமல் போனது என படத்தில் ஆயிரத்தெட்டு குறைகள் சொல்லிக் கொண்டே போகலாம்.
வித்யாசாகரின் இசை மட்டுமே படத்தில் சற்று ஆறுதல் என்று கூறலாம். ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிதாக கைகொடுத்திருக்கிறது.
மொத்தத்தில்,
தேசிங்குராஜா 2 – எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த இயக்குனர்





