Spotlightவிமர்சனங்கள்

ஜீவி ; விமர்சனம் 4/5

8 தோட்டாக்கள் படத்திற்கு பிறகு நாயகன் வெற்றி நடித்த அடுத்த படம் தான் இந்த ‘ஜீவி’. கிராமத்தில் ஊதாரித்தனமாக சுற்றிக் கொண்டிருக்கும் வெற்றி, தனது தந்தையின் அறிவுரையை கேட்டு, சென்னைக்கு வேலைக்கு வருகிறார்.

அங்கு, இவரது நண்பர் கருணாகரன், வெற்றிக்கு தான் வேலை பார்க்கும் டீ கடையில் வேலை வாங்கி கொடுக்கிறார். இருவரும் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருக்கின்றனர்.

அந்த வீட்டின் ஓனராக வரும் ரோஹினிக்கு கண் தெரியாத மகள் மோனிகா, பக்கவாதம் வந்த கணவர் என அமைதியான ஒரு குடும்பம். தன் மகளின் திருமணத்திற்காக சிறுக சிறுக நகை சேர்த்து வைத்திருக்கிறார் ரோகிணி.

நாயகன் வெற்றி, தனது வறுமையின் காரணமாக நண்பன் கருணாகரனோடு இணைந்து ரோகிணியின் வீட்டில் இருக்கும் நகையை திருடி விடுகிறார்.

அந்த நகையை மறைத்து வைக்க திட்டம் தீட்டுகிறார் வெற்றி. அவரின் திட்டங்கள் ஜெயித்ததா..?? இல்லையா..??? என்பதே படத்தின் மீதிக் கதை.

ஒரே மாதிரியான நிகழ்வுகள் அடுத்த இரு வெவ்வேறு இடங்களிலும் நடக்கும், அது நம்மையே சுற்றியும் கூட நடக்கலாம் என்ற முக்கோண விதியை மையமாக வைத்து ‘தொடர்பியல்’ என்ற ஒன்றை மையமாக வைத்து நடக்கும் கதையே இந்த ‘ஜீவி’.

8 தோட்டாக்கள் படத்திற்கு பிறகு நல்ல ஒரு கதையம்சம் நிறைந்த, படத்தை கொடுத்திருக்கிறார் நாயகன் வெற்றி. கதைக்காக அவர் எடுத்த மெனக்கெடல், உழைப்பு எல்லாம் இப்படத்தில் நன்றாகவே தெரிகிறது. படத்தின் கதை, அதை கொண்டு சென்ற விதம் என எல்லாவற்றிலும் மிகத் தெளிவான போக்கை கையாண்டுள்ளனர்.

கருணாகரன், மைம் கோபி, நாயகிகள் மோனிகா, அஷ்வினி, தங்க துரை, ரமா என அனைவரும் படத்திற்கு தேவையான கதாபாத்திரங்கள் தான்.

படத்தின் வசனகர்த்தா, எழுத்தாளர் பாபு தமிழினின் மிகவும் நேர்த்தியான கதையில் உருவாகியுள்ள ‘ஜீவி’ இந்த வருடத்தின் சிறந்த தமிழ் படமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

இயக்குனர் வி. ஜெ. கோபிநாத்திற்கு முதல் படம் என்றாலும், அனுபவ இயக்குனரின் பார்வையை கொண்டு படத்தை மிகச்சிறப்பாக இயக்கியுள்ளார்.

சுந்தரமூர்த்தியின் இசையில் பின்னனி இசை படத்தின் ஓட்டத்திற்கு நன்கு ஈடு கொடுத்திருக்கிறது. தேவையான இடங்களில் தனது கத்திரியை உபயோகப்படுத்தியிருக்கிறார் எடிட்டர் ப்ரவீன் கே எல்.

படத்தை பற்றி மேலும் கூறினால், அதன் மீதான் சுவார்ஸ்யம் தொய்ந்து விடும் . ஆகையால், திரையரங்குகளில் சென்று படத்தை பார்த்து அதன் விறுவிறுப்பை அனுபவிக்கவும்.

நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு படைப்பாக தான் உருவாகியுள்ளது ‘ஜீவி’.

ஜீவி – தமிழ் சினிமா கொண்டாடப்பட வேண்டிய ஒரு படைப்பு.

Facebook Comments

Related Articles

Back to top button