Spotlightவிமர்சனங்கள்

2.O விமர்சனம் 4.25/5

ரஜினி – ஷங்கர் கூட்டணி என்றால் சொல்லவே வேண்டாம், அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறிஅடிக்கும். எந்திரன் என்ற மாபெரும் வெற்றியை கொடுத்த இக்கூட்டணி 2.O என்ற படைப்பை படைத்திருக்கிறார்கள். அதுவும், 3டி டெக்னாலஜி முறையில்.

படத்தின் முதல் காட்சியில், ஒரு செல்போன் டவரில் அக்‌ஷய்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். அதற்கு அடுத்த நாள் முதல் சிட்டியில் உள்ள செல்போன்கள் அனைத்தும் குருவி போல் பறந்து செல்கின்றன.

இதனால், மக்கள் மிகவும் திண்டாட, எப்படி, ஏன் என அதிகாரிகள் அனைவரும் கலங்கிக் கொண்டு இருக்கின்றனர். அதே வேளையில், டெலிகாம் அமைச்சர், செல்போன் நிறுவன அதிகாரி, ஒரு தனியார் நெட்வொர்க் நிர்வாக அதிகாரி என அனைவரும் கொல்லப்படுகின்றனர்.

இந்த அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க சிட்டி(ரோபோ)யை வசீகரன் களத்தில் இறக்குகிறார். அக்‌ஷய்குமாரை எப்படி ரஜினி சமாளிக்கிறார் என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தின் கேரக்டர் ஒவ்வொன்றிலும் தனி ரகமாக தனித்து நிற்கிறார் ரஜினி. ஒரு ரஜினி என்றாலே ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள், இதில் நான்கு கேரக்டர்களில் மிரட்டியிருக்கிறார். ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக போகும் கதைக்களத்தில் 2.O(ரோபோ) வந்ததும் அதிரடி ஆட்டத்திற்கு ஆரம்பமாகிறது படம். அதிலும் நான்காவது கேரக்டரில் ரஜினி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்.

அக்‌ஷய்குமார் தனது கதாபாத்திரத்தில் தனித்து நிற்கிறார். வயதான தோற்றத்தில் வந்த காட்சிகளாக இருக்கட்டும், பறவை போல் வந்த காட்சியாக இருக்கட்டும் நம்மை மிரள வைக்கிறார். எமி அழகான ரோபோவாக வந்து நம்மை பரவசப்படுத்துகிறார்.

நம்மை அறியாமல் பறவை இனத்திற்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கிறோம் என்பதை பார்க்கும் போது நமக்கே இதயம் சில நொடிகள் கனக்கிறது.

ஏ ஆர் ரகுமானின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னனி இசை என இரண்டையும் தனக்கே உரித்தான பாணியில் அசர வைத்திருக்கிறார். நிரவ்ஷாவின் ஒளிப்பதிவு காட்சிகள் ஒவ்வொன்றையும் ரசிக்க வைத்துள்ளது.

நான்கு வருடங்களாக உழைத்து இப்படியொரு கதை, படைப்பை உருவாக்கியதற்காக இயக்குனர் ஷங்கருக்கு முதலில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளலாம். இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்பட்டு வந்த இயக்குனர் ஷங்கர் இனி உலக சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்றும் அழைக்கலாம்.

காட்சியமைப்பு, 3டி தொழில் நுட்பம் என அனைத்திலும் அவ்வளவு மெனக்கெடல் உள்ளதை ஒவ்வொரு காட்சியிலும் காண முடிகிறது.

2.O – இந்திய சினிமாவின் பெருமை..

Facebook Comments

Related Articles

Back to top button