Spotlightவிமர்சனங்கள்

ஆறாம் நிலம் – விமர்சனம்

மிழர்களின் நெஞ்சில் ஆறா வடுவாக இன்னமும் இருந்து கொண்டியிருப்பது ஈழத்துப் போர். லட்சக்கணக்கான மக்களின் கண்ணீர் துளிகள் மற்றும் இரத்த துளிகள் இன்னமும் ஈழத்து மண்ணில் வரலாறு சொல்லிக் கொண்டு தான் இருக்கிறது.

ஈழத்துக்குப் பிறகும் அங்குள்ள மக்கள் இன்னமும் பல இன்னல்களை அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை உலக நாடுகள் அறிய வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட படம் தான் இந்த “ஆறாம் நிலம்”.

2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஈழத்து போர் முடிவுக்கு வந்தபிறகு, ஆயிரக்கணக்கான மக்கள் சிங்கள் இராணுவத்திடம் சரணடைந்தனர். அவர்கள் அதன் பிறகு என்ன ஆனார்கள் என்பது ஆண்டவனுக்கு தான் வெளிச்சம் என்பது போல தான் இன்னமும் இருக்கிறது.

அப்படியாக சரணடைந்தவர்களின் உண்மை நிலையை சிங்கள அரசு இதுவரை தெரிவிக்கவில்லை. அதே சமயம், சரணடைந்தவர்கள் பலரை காணாமல் போனவர்கள் என்றும் அறிவித்துள்ளது.

சிங்கள் இராணுவத்திடம் சரணடைந்து போனவர்களின் குடும்பங்கள் எப்படிப்பட்ட இன்னல்களை சந்திக்கின்றனர்.? அவர்களின் வாழ்வாதாரங்கள் எப்படியாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதையே இப்படம் உணர்த்தியுள்ளது.

சிங்கள ராணுவத்திடம் சரணடைந்த கணவர் திரும்ப வருவார் என்ற நம்பிக்கையில் அவரை தேடும் மனைவி, அப்பா எப்போது வருவார்? என்ற கேள்வியுடன் இருக்கும் மகள். இந்த இரண்டு கதாப்பாத்திரங்களை வைத்துக் கொண்டு ஒட்டு மொத்த தமிழ் ஈழ மக்களின் இதய வலியை நமக்கு புரிய வைத்திருக்கிறார் இயக்குநர் அனந்த ரமணன்.

இலங்கையில் போர் முடிவுக்கு பிறகு, ஈழத்தமிழர்களை பல்வேறு வசதிகளோடு அவர்களை நன்றாக கவனித்துக் கொள்வதாகவும், அவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கி வருவதாகவும் சிங்கள அரசு தொடர்ந்து கூறிக் கொண்டு தான் இருக்கிறது.

ஆனால், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை எதுவென்றால், போரில் பதுக்கி வைக்கப்பட்ட கன்னி வெடிகளை எடுப்பது தான் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலை. எந்நேரமும் மரணத்தை காலில் வைத்து சுற்றிக் கொண்டிருக்கும்படியான ஒரு வேலை. இன்னுமும் பலருக்கு அப்படியான வேலை கொடுக்கப்படுவதாகவும் தகவல்.

இன்னும் சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டில் தான் ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களும் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை இப்படம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் நவயுகா மற்றும் அவரது மகளாக நடித்திருக்கும் தமிழரசி, இருவரும் நடிகைகளாக நடிக்காமல் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

படத்தில் நடித்திருக்கும் மற்ற கதாப்பாத்திரங்களையும் நடிகர்களாக பார்க்க முடியாதபடி இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

கன்னிவெடிகளை தேடி எடுக்கும் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் சிவ சாந்தகுமார் அனைவரையும் சீட்டின் நுனியில் அமர வைத்துவிடுகிறார். பின்னனி இசையில் சிந்தக்கா ஜெயக்கொடி கதையோடு பயணம் செய்ய வைத்துள்ளார்.

கதையின் நகர்வு சற்று மெதுவாக செல்வதால், கொஞ்சம் பொறுமை இழக்க வைக்கிறது.

தமிழ் ஈழ மக்களின் வலிகளை உணர வைத்ததற்காகவே இயக்குநர் அனந்த ரமணனும் பெரும் நன்றிகளை கூறலாம்.

‘ஆறாம் நிலம்’ படம் வரும் அக்டோபர் 24 ஆம் தேதி ஐபிசி தமிழ் (IBC Tamil) யூடியுப் சேனலில் ஒளிபரப்பாகிறது.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close