
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் திட்டம் இரண்டு.
கதைப்படி,
சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார் ஆதிரா (ஐஸ்வர்யா ராஜேஷ்). பேருந்து பயணத்தில் அர்ஜுனின் (சுபாஷ்) நட்பு கிடைக்கிறது ஆதிராவிற்கு.
இந்நிலையில், சிறுவயதிலிருந்தே தோழியான சூர்யா (அனன்யா) காணவில்லை என சூர்யாவின் கணவர் கிஷோர்(கோகுல் ஆனந்த்) ஆதிராவிற்கு போன் செய்கிறார்.
வழக்கை கையில் எடுத்து மிகவும் தீவிரமாக விசாரணை மேற்கொள்கிறார் ஆதிரா. இரு தினங்களுக்குப் பிறகு, சூர்யா எரிந்த நிலையில் அவரது காரை கண்டுபிடிக்கின்றனர் .
அது சூர்யாதான் என உறுதி செய்து கொண்டு, யார் கொலை செய்திருப்பார் என விசாரணை மேற்கொள்கிறார் ஆதிரா. இந்நிலையில், மற்றொரு ஊரில் ஒரு பெண் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். இரு கொலையையும் ஒப்பிட்டு கொலை குற்றவாளியை நெருங்கி அவனை (பாவல் நவகீதன்) கைது செய்கின்றனர்.
இச்சமயத்தில் பாவல் நவகீதன் சூர்யாவை கொலை செய்யவில்லை என தெரிய வருகிறது. மீண்டும் விசாரணை தீவிரமாகிறது. இறுதியாக இந்த வழக்கு என்னவானது என்பதே படத்தின் மீதிக் கதை.
போலீஸ் இன்ஸ்பெக்டர்ஆதிரா கதாபாத்திரத்தில் மிடுக்காக இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். காதல் காட்சிகள், இன்வஸ்டிகேஷன் காட்சிகள் என அனைத்திலும் அனல் பறக்கும் நடிப்பை கொடுத்திருக்கிறார் .
ஏனைய கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் அவர்களுக்கு ஏற்ற நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
பாவல் நவகீதன், கோகுல் ஆனந்த், அனன்யா, சுபாஷ், முரளி ராமகிருஷ்ணன் என அனைவருக்கும் ஏற்ற கதாபாத்திரம் தான்.
க்ளைமாக்ஸில் வைக்கப்பட்ட ட்விஸ்ட் படத்தினை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. கடைசி பத்து நிமிடங்களில் கதைக்களம் சூடு பிடிக்கிறது.
படத்தின் இடைவேளையில் வைத்த காட்சிகளும் அதிர வைத்துள்ளது. கதைக்களத்தில் இன்னும் மெனக்கெடலை இயக்குனர் கொடுத்திருக்கலாம். இன்னும் சற்று கூடுதல் த்ரிலிங்கை இயக்குனர் தந்திருக்கலாம்.
கோகுல் பினாய் ஒளிப்பதிவில் இன்னும் சற்று மிரட்டலை கொடுத்திருக்கலாம்.
சதீஷ் ரகுநாதனின் பின்னனி இசை கதையின் ஓட்டத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறது.
க்ளைமாக்ஸ் காட்சியில் வருகிற ஒரு உயிரோட்டமான பதிவிற்காக இப்படத்தை நிச்சயம் காணலாம்.
திட்டம் இரண்டு – உடல் வேறு உயிர் வேறு… உயிரோட்டமான பதிவு …
படக்குழுவினருக்கு வாழ்த்துகள்