மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “டெவில்”. சவரக்கத்தி திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆதித்யா இப்படத்தை இயக்கியுள்ளார். விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ ராயகுரு மற்றும் மிஷ்கின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இயக்குநர் வெற்றிமாறன் பேசும் போது, “மிஷ்கின் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த அரிய பொக்கிஷம். அவரோட பெரும்பாலான திரைப்படங்கள், மனிதர்களின் இருண்மை சூழ்ந்த மனதிற்குள் ஆழ்ந்து சென்று அதில் ஒளியை தேடுவதற்கான பயணமாகத் தான் இருக்கும். அதைப் போலத் தான் அவரின் இசையும் இருக்கிறது. “Journey into the darkness in the search of light” என்பது போலத்தான் எனக்குத் தோன்றுகிறது. இசையமைப்பாளரும் இசைக் கலைஞர்களும் ஒரு மேடையின் மையத்தில் செண்டர் ஸ்டேஜ் எடுத்துக் கொண்டு நடத்தப்பட்ட முதல் ஆடியோ வெளியீடு இதுவாகத்தான் இருக்கும். அந்த வகையில் இந்த ஆடியோ வெளியீடு சிறப்பு வாய்ந்தது. மிஷ்கின் பாடல்கள் பாடி அவை எந்த அளவிற்கு வைரல் ஆகியிருக்கிறது என்பதை நாம் அனைவருமே பார்த்து இருக்கிறோம். அது போல் அவருக்கு இசை மீது இருக்கும் ஆர்வமும் எல்லோரும் அறிந்ததே. வின்சென்ட் செல்வா கூறியது போல் விஜயின் யூத் படத்தின் பின்னணி இசையில் கூட அவர் உதவி புரிந்திருக்கிறார். இவ்வளவு காலத்திற்குப் பிறகு இசையை முழுமையாகக் கற்றுக் கொண்டு அதை நம் அனைவர் முன்னால் மேடையில் அரங்கேற்றுவதற்கு ஒரு Courage, Confident and Commitment தேவை. இந்த மூன்றுமே மிஷ்கினுக்கு இருக்கிறது. இதனால் தான் அவர் இதை சாதித்து இருக்கிறார். எனவே இந்த இசை பயணத்திலும் அவர் வெற்றியடைய வாழ்த்துகிறேன். அது போல் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக இருந்து, அவர் ஸ்டைலிலேயே ஒரு படத்தை இயக்கி இருக்கும் இயக்குநர் ஆதித்யா அவர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பேசினார்.