Spotlightவிமர்சனங்கள்

யானை – விமர்சனம் 3.5/5

ருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் யானை. அருண்விஜய் கேரியரில் அதிக பொருட்செலவில் அதிக எதிர்பார்ப்பில் வெளியாகியிருக்கும் படம் தான் இந்த யானை. உலகம் முழுவதும் சுமார் 1500 ஸ்கிரீன்களில் இப்படம் திரையிடப்பட்டிருக்கிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை அருண்விஜய் பூர்த்தி செய்தாரா இல்லையா என்பதை விமர்சனம் மூலம் பார்த்துவிடலாம்.

கதைப்படி

ராமேஸ்வரம் பகுதியில் இரண்டு குரூப்பிற்கு இடையே பல வருடங்களாக மோதல் இருந்து வருகிறது. ஒன்று ராஜேஷ் குடும்பம் மற்றொன்று ஆடுகளம் ஜெயபாலன் குடும்பம்.

ராஜேஷின் மூத்த மனைவியின் மகன்களாக வருகின்றனர் சமுத்திரக்கனி போஸ் வெங்கட் மற்றும் சஞ்சீவ்… ராஜேஷின் இரண்டாவது மனைவி ராதிகாவிற்கு மகனாக இருக்கிறார் அருண்விஜய். ஜெயபாலனின் மகன்களாக ட்வின்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் வில்லன் ராமச்சந்திர ராஜூ.

கடல் சார்ந்த மீன்கள், இறால்களை ஏற்றுமதி செய்வதில் இவர்கள் இரு குடும்பத்திற்கு இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில், பிரச்சனை ஒன்றில் ஜெயபாலனின் இரண்டு மகன்களில் ஒருவரை போலீஸ் கொன்று விடுகிறது. இதற்கு காரணமான அருண் விஜய்யின் குடும்பத்தை பழி வாங்க முயல்கிறார் ஜெயபாலனின் மற்றொரு மகன்.

வில்லன் ராமச்சந்திர ராஜூவிடம் இருந்து எப்படி அருண் விஜய் தனது குடும்பத்தை காப்பாற்றினார்.? வீட்டிற்குள் நடந்த பிரச்சனை ஒன்றை எப்படி கையாண்டார் என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் அருண் விஜய் அதகளம் செய்திருக்கிறார். மிடுக்கான தோற்றத்தில் தனக்கே உரித்தான உடல் மொழியில் மற்ற படங்களை விட பல மடங்கு உழைப்புக் கொண்டு இப்படத்தில் தன்னை செதுக்கியிருக்கிறார். முழு படத்தையும் தனி ஒருவனாக தன் தோள் மீது சுமந்து சென்றிருக்கிறார். எமோஷ்னல், காதல், ஆக்‌ஷன், காமெடி என பல இடத்தில் தன் திறமையை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். டாஸ்மாக் பாரில் நடக்கும் ஆக்‌ஷன் மற்றும் ரைஸ்மில்லில் நடக்கும் ஆக்‌ஷன் என இரண்டு சண்டைக் காட்சிகளும் படத்தின் ஓட்டத்திற்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது.

ஜாதி வெறி பிடித்தவராக வரும் சமுத்திரக்கனி, தன் தம்பி அருண் விஜய்யை எப்போதுமே மற்றொரு தாயின் மகன் என்பதில் கருத்தாக இருக்கிறார். தனது கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், போஸ் வெங்கட், சஞ்சய், ராதிகா, ஐஸ்வர்யா, ராஜேஷ், ஆடுகளம் தனபாலன் உள்ளிட்ட ஏனைய கதாபாத்திரங்களும் சரியான தேர்வு தான்.

சில படங்களில் அப்பப்போ எட்டிப் பார்க்கும் அம்மு அபிராமி, எப்போதும் இவரை வைத்து தான் கதையில் ஏதோ திருப்பம் நடக்கப் போகிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டுச் செல்கிறார். அம்மு அபிராமியின் கதாபாத்திரத்தின் தேர்வை இயக்குனர்கள் சற்று மாற்ற வேண்டும். ஏற்கும் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து முடிக்கிறார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

வில்லனாக வந்த ராமச்சந்திர ராஜூவிற்கு பதிலாக வேறொரு வில்லனை இயக்குனர் ஹரி முயற்சித்திருக்கலாமோ என்ற எண்ணம் ஏற்பட்டது. நடிப்பில் சிறப்பு என்றாலும் மண் சார்ந்த வில்லனாக அவர் கண்ணில் படவில்லை.

நாயகி ப்ரியா பவானி சங்கர் அழகு தேவதையாக காட்சியளித்திருந்தார். நடிப்பிலும் டாப் ஸ்கோர் செய்திருக்கிறார். படம் முழுவதும் யோகிபாபு வலம் வந்திருக்கிறார். படத்தில் ஒரே ஒரு காமெடி காட்சியைத் தவிர வேறு எந்த இடத்திலும் இவரது காமெடி வொர்க்-அவுட் ஆகவில்லை என்பதே நிதர்சனம்.

இயக்குனர் ஹரி, காமெடி காட்சிகளில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தலாம். ஜி வி பிரகாஷின் இசையில் பின்னணி இசை மிரட்டல் தான். பாடல்கள் ரகம் தான்.

கோபிநாத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு வேகம் கொடுத்திருக்கிறது. படத்தின் நீளத்தை சற்று குறைத்திருந்தால் இன்னும் படுவேகம் கொண்டிருக்கும் இந்த யானை.

வழக்கமான ஹரி படம் என்பதால் பெரிதான ட்விஸ்ட் காட்சிகள் ஏதுமின்ற நிதான ஆட்டம் கொண்டிருக்கிறது இந்த யானை.

குடும்பம், செண்டிமெண்ட், ஆக்‌ஷன், என வழக்கமான ஹரி படங்களின் வரிசையில் இப்படமும் இணைந்திருப்பது மகிழ்ச்சி. மண் சார்ந்து கதை எடுப்பதில் நானும் முன்னோடி தான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் ஹரி. ஒரு சண்டைக் காட்சியில் நெல்லின் மீது அருண் விஜய் ஓடும் போது, தனது செருப்பைக் கழட்டிக் கொண்டு தான் ஓடுவார். அப்படியாக ஒவ்வொரு காட்சியையும் பக்தி கொண்டு அமைத்திருக்கிறார் ஹரி.

யானை – பலம் கொண்டவன்..

Facebook Comments

Related Articles

Back to top button