
இயக்கம்: ஹரி மகாதேவன்
நடிகர்கள்: பூர்ணிமா ரவி, வைபவ் முருகேசன், சாய் பிரசன்னா, லீலா சாம்சன், விநோதினி வைத்யநாதன், பிரபு சாலமன், நமிதா கிருஷ்ணமூர்த்தி, விக்னேஷ்வர், லோகி, அஜய்
தயாரிப்பு: பிரசாந்த் ரங்கசாமி
இசை: Cliffy Chris
பின்னணி இசை: ஆனந்த் காஷிநாத்
ஒளிப்பதிவு: அபி ஆத்விக்
தனது குடும்ப சூழல், காதல் தோல்வி, வேலைப் பளு என தன் வாழ்க்கையை வேண்டா வெறுப்பாக வாழ்ந்து வருகிறார் பூர்ணிமா ரவி. ஒருநாள், தனது கவலைகளை தனது தந்தை டெல்லி கணேஷிடம் கூற, உனக்கு பிடித்ததை நீ செய் என்று அவர் கூற, அன்று இரவே யாரிடமும் கூறாமல் தனியாக கேரளா புறப்பட்டுச் செல்கிறார் பூர்ணிமா.
தனது சிறுவயதில் தன்னோடு படித்த மூன்று நண்பர்களை தேடிச் செல்கிறார் பூர்ணிமா. செல்லும் இடத்தில் புதிதாக ஒருவர் நண்பராக அறிமுகமாகிறார். அவர் தான் வைபவ் முருகேசன்.
ஒருகட்டத்தில் இருவரும் இணைந்தே பூர்ணிமாவின் நண்பர்களை தேடிச் செல்கின்றனர். இந்த பயணத்தில் இயற்கையை மீது ஒரு காதலை ஏற்படுத்திக் கொண்டே செல்கிறார் பூர்ணிமா.
இதனால் பூர்ணிமாவிற்கு என்ன நடந்தது.? வைபவ் மற்றும் பூர்ணிமா இருவருக்குமிடையே இருந்த நட்பு எதுவரை நீண்டது.??என்பதை இரண்டாம் பாதியில் ஒரு அழகிய படைப்பாக வைத்திருக்கிறார் இயக்குனர் ஹரி மகாதேவன்.
இந்த கதைக்கு பூர்ணிமா ரவி தான் சரியாக இருப்பார் என்று தேர்ந்தெடுத்து நடிக்க வைத்த இயக்குனருக்கு முதலில் வாழ்த்துகளை சொல்லிக் கொள்ளலாம். இவரை விட்டால் இந்த கதாபாத்திரத்தில் வேறு யாரையும் யோசித்துக் கூட பார்க்க முடியவில்லை.
மிக கச்சிதமாக தனது கதாபாத்திரத்தோடு ஒன்றி, தனது ஆதிரை கேரக்டரை நேர்த்தியாக செய்து முடித்திருக்கிருக்கிறார் பூர்ணிமா ரவி. இயற்கையை ரசிப்பதா அல்லது ஆதிரையை ரசிப்பதா என்று படம் பார்ப்பவர்களை ஏங்க வைத்துவிட்டார் பூர்ணிமா ரவி.
துறுதுறுவென தனது நடிப்பாலும், ரசிகர்களை கட்டிப்போடும் தனது சிரிப்பாலும் படத்தின் கதாபாத்திரத்தை மிக அழகாக நகர்த்திச் சென்றிருக்கிறார் பூர்ணிமா. நமீதா கிருஷ்ணமூர்த்தியுடன் பேசும் காட்சி, இரவில் வானில் அழகிய நிலாவை ரசித்துக் கொண்டே பூர்ணிமா பேசும் காட்சி, கல்யாணியின் தோள் மீது சாயும் காட்சி, வைபவோடு உரையாடும் காட்சி என பல இடங்களில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் பூர்ணிமா.
சாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்த வைபவ் முருகேசன், வாழ்க்கையின் யதார்த்தத்தை மிக எளிதாக போகிற போக்கில் சொல்லிச் சென்றது க்யூட். ஒரு பயணம் ஒருவனின் வாழ்க்கையில் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கும் என்பதை இவரது கதாபாத்திரம் மிக அழகாக கூறிவிடும்.
இருப்பது ஒரு வாழ்க்கை அதை தனக்காக வாழ்ந்துவிட்டுச் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்ந்து வரும் நமீதா கிருஷ்ணமூர்த்தியின் நடிப்பு பிரமாதம்.
மற்றபடி படத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்துச் சென்ற சாய் பிரசன்னா, லீலா சாம்சன், விநோதினி வைத்யநாதன், பிரபு சாலமன், விக்னேஷ்வர், லோகி, அஜய் உள்ளிட்ட நடிகர்களும் தங்களது நடிப்பை அழகாகவே கொடுத்திருக்கின்றனர்.
புதிய மனிதர்கள், புதிய இடம், இயற்கை சூழல், எழில் கொஞ்சும் நீர்வீழ்ச்சி, இறக்கை இல்லாமல் பறப்பது, வானவில்லை ரசிப்பது என அழுத்தத்தில் இருக்கும் மனிதர்களுக்கு ஒரு மருத்துவம் கொடுக்கும் ஃபீலை இப்படம் கொடுத்துவிட்டது.
இந்த ஒரு ட்ராவலை இயக்குனர் எப்படி எழுதினார் என்பதை கூட யோசிக்க முடியவில்லை. காட்சிகளை மிகவும் உயிரோட்டமாக கடத்திவிட்டுச் சென்றிருக்கிறார் இயக்குனர்.
ஒரு தேடல், ஒரு பயணம், புதிய உறவு, பயணத்தில் கிடைத்த மாற்றம், பயணத்தால் கிடைத்த தெளிவு என வாழ்க்கையை ரசிக்க வைக்கும் ஒரு படைப்பாக இப்படத்தை நிச்சயமாக பார்க்கலாம்.

ஒரு அழகிய காவியத்தை எடுத்த இயக்குனருக்கு பெரும் வாழ்த்துகளை சொல்லிக் கொள்ளலாம்.
Cliffy Chris இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இருந்தது. ஆனந்த் காஷிநாத்தின் பின்னணி இசை பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது.,
இப்படியான ஒரு படத்திற்கு ஒளிப்பதிவாளர் தான் இன்னொரு இயக்குனர் என்று கூறலாம். அப்படியான ஒரு ஒளிப்பதிவைக் கொடுத்து அனைவரையும் ரசிக்க வைத்த ஒளிப்பதிவாளர் அபி ஆத்விக் அவர்களுக்கு வாழ்த்துகள்.
ஒரு சில இடத்தில் காட்சிகள் சற்று நீளமாக தென்பட்டாலும் பெரிதான குறையாக பார்க்க வேண்டியதில்லை.
இப்படத்தில் இயற்கையும் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பது கூடுதல் சிறப்பு தான்
யெல்லோ – அழகு காவியம்..





