
அறிமுக இயக்குனர் ரங்கராஜ் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் தான் இந்த “கட்ஸ்”. இப்படத்தில், நான்ஸி, டெல்லி கணேஷ், ஸ்ருதி நாராயணன், சாய் தீனா, பிர்லா போஸ், ஸ்ரீ லேகா, அரந்தாங்கி நிஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் மனோஜ் மற்றும் இசையமைத்திருக்கிறார் ஜோஸ் ப்ராங்க்ளின்.
ஜெயபாரதி ரங்கராஜ் படத்தினை தயாரித்திருக்கிறார்.
கதைப்படி,
போலீஸ் அதிகாரியாக வரும் ரங்கராஜ், தனது குழந்தை மற்றும் மனைவியோடு மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். ரங்கராஜ் சிறு வயது இருக்கும் போதே தனது தாய் மற்றும் தந்தையை இழந்துவிடுகிறார்.
ஆசிரமம் ஒன்றில் வாழ்ந்து, படித்து இன்ஸ்பெக்டராக ஆகிறார். அதே, ஆசிரமத்தில் வளர்ந்த நான்ஸியை திருமணம் செய்து கொள்கிறார்.
சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் ரங்கராஜ். காட்டுப்பகுதியில், அடையாளம் தெரியாத திருநங்கை ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்.
யார் அவர்.? எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று தனது விசாரணையை தொடங்குகிறார் ரங்கராஜ்.
கொலை செய்யப்பட்ட திருநங்கை ஒரு விஏஓ என்று கண்டுபிடித்த ரங்கராஜ், இவரை கொலை செய்த தொழிலதிபரையும் கண்டுபிடித்து அவரை கைது செய்து சிறையில் அடைக்கிறார்.

தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஒரே நாளில் சிறையில் இருந்து வெளியே வந்துவிடுகிறார் அந்த தொழிலதிபர்.
தன்னை சிறைக்கு அனுப்பிய ரங்கராஜை பழி வாங்க, அடுத்தகட்ட ப்ளானில் இறங்குகிறார் தொழிலதிபர்.
அதன்பிறகு, ரங்கராஜின் வாழ்க்கையில் என்ன நடந்தது.?? ரங்கராஜின் தந்தை யார்.??? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் விடை வைத்திருக்கிறார் இயக்குனர்.
நாயகன் ரங்கராஜ், தமிழ் சினிமாவிற்கு இவர் புதுமுகம் என்றாலும், எந்த இடத்திலும் தான் ஒரு புதுமுகம் என்று கண்டுபிடிக்காத வண்ணம் தனது நடிப்பால் அனைவரையும் வெகுவாகவே கவர்ந்திருக்கிறார்.
படத்தின் முதல் காட்சியிலேயே கதாபாத்திரத்திற்குள் முழுதாகவே இறங்கி, அசத்தியிருக்கிறார். முறுக்கு மீசையோடும் கையில் கத்தியோடும் வேஷ்டியை எடுத்து கட்டும் போதும் என காட்சிகளில் நம்மை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார். மிகவும் கம்பீரமான தோற்றத்தில் தோன்றும் போதாக இருக்கட்டும், அடக்கி வாசிக்கும் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரமாக இருக்கட்டும், தாடியோடு வெறுப்பு வாழ்க்கை வாழும் காட்சியாக இருக்கட்டும், வாலிபனாக வாழ்ந்திருக்கும் கதாபாத்திரமாக இருக்கட்டும் அந்த கதாபாத்திரத்திற்கான மெனெக்கடல் அதிகமாகவே இருந்தது.
சண்டைக் காட்சியிலும் மிரட்டியிருக்கிறார் ரங்கராஜ்.

நாயகியாக நான்ஸி, கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கேரள மொழியில் கொஞ்சி பேசும் வசனங்கள், தனது கணவன் மீது வைத்திருக்கும் காதல் என பல இடங்களில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்.
சிறிது காட்சிகள் என்றாலும், தனது நடிப்பின் உச்சத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார் ஸ்ருதி நாராயணன். மீன் மார்கெட்டில் போலீஸிடம் பேசும் போதாக இருக்கட்டும், அதிகாரத்தைப் பற்றி தனது மகனிடம் பேசும் இடமாக இருக்கட்டும் என பல இடங்களில் நன்றாகவே தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
தன் தங்கை இறந்ததைக் கண்டு கண்ணீர் விட்டு கதறி அழும் காட்சியில் நம்மையும் சேர்த்து அழ வைக்கும்படியான ஒரு நடிப்பைக் கொடுத்துவிட்டார் சாய்தீனா.
வில்லன் கதாபாத்திரத்தை இன்னும் சற்று வலுவானதாக ஏற்றியிருந்திருக்கலாம். அறந்தாங்கி நிஷா தனக்குக் கொடுக்கப்பட்டதை அழகாக செய்து முடித்திருக்கிறார். திருநங்கையாக நடித்தவர் கச்சிதமாக பொருந்தியிருந்தார்.
திருநங்கைகளுக்கான முக்கியத்துவம், விவசாயத்தைப் போற்றுதல், பெண்ணின் வீரம், ஆணின் கம்பீரம், தாயின் பாசம் என பல முக்கிய பார்வை கொண்ட படமாக இப்படம் உருவாகி, தனது கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆரம்பத்தில், இன்வஸ்டிகேஷனில் கதை ஆரம்பித்து பின் முழுக்க காதலாக மாறி, பின் பழிவாங்குதலாக தொடர்ந்து, க்ளைமாஸில் மீண்டும் பழிவாங்குதல் என முடிவடையும் கதையில் ஆங்காங்கே விட்டுவிட்டு கதை நகர்வது சற்று சோர்வடைய வைத்ததே தவிர எடுத்த நோக்கம் என்னவோ பாராட்டுக்குறியது.
பின்னணி இசை மற்றும் பாடல்கள் இரண்டுமே படத்தின் ஓட்டத்திற்கு பெரிதாக கைகொடுத்திருக்கிறது. அதிலும் அம்மா பாடல் கண்கலங்க வைக்கிறது.
ஆரம்பத்தில் சண்டைக் காட்சி, க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி இரண்டையும் சிறப்பாக காட்சிப்படுத்தியதில் ஒளிப்பதிவாளரின் பங்கு அளப்பறியது.
சின்ன சின்ன குறைகள் ஆங்காங்கே எட்டிப் பார்த்தாலும், படம் எடுத்த நோக்கத்திற்காகவும் எடுத்த அதீத முயற்சிக்காகவும் படக்குழுவினரை வெகுவாகவே பாராட்டலாம்.
கட்ஸ் – வீரத்தோடு விவசாயத்தையும் போற்றுவோம்…





