Spotlightசினிமா

“மனைவி செய்யும் வேலையை கணவன் ஏன் செய்யக்கூடாது?” – ‘கட்டா குஸ்தி 2’ மூலம் புதிய பார்வை சொல்கிறார் விஷ்ணு விஷால்!

செல்லா அய்யாவு இயக்கத்தில், விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, கருணாஸ், காளி வெங்கட், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள “கட்டா குஸ்தி 2’ திரைப்படம் ஜூலை 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

முதல் பாகம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், அதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்த படத்தை ஐசரி கணேஷ் மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து தயாரித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

அப்போது பேசிய நடிகர் விஷ்ணு விஷால், “இந்தப் படத்தில் நான் ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். தேசிய அளவிலான விளையாட்டு வீராங்கனையாக இருக்கும் மனைவியின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக வீட்டுப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் கணவரின் வாழ்க்கையை இந்தப் படம் பேசுகிறது.

என் குடும்பத்தில் பெண்களின் உழைப்பு மற்றும் சாதனைகளை நெருக்கமாக பார்த்து வளர்ந்தவன் நான். என் அக்கா தனது கல்வி மற்றும் உழைப்பால் உயர்ந்த பதவியை அடைந்துள்ளார். என் அம்மாவும் குடும்பத்திற்காக அதிகம் உழைத்திருக்கிறார். அதனால் பெண்கள் செய்யும் பொறுப்புகளை ஆண்கள் ஏன் ஏற்கக் கூடாது என்ற எண்ணமே இந்த கதாபாத்திரத்தை ஏற்க தூண்டியது.

இயக்குநர் செல்லா அய்யாவுடன் இது எனக்கு மூன்றாவது படம். எனது சினிமா பயணத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நல்ல காமெடி திரைப்படம் செய்ய வேண்டும் என்ற ஆசை எப்போதும் உண்டு. குடும்பத்துடன் அமர்ந்து சிரித்து ரசிக்கக்கூடிய படங்களை உருவாக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்.

முதல் பாகத்தில் ரசிகர்கள் ரசித்த அம்சங்கள் அனைத்தும் இரண்டாம் பாகத்திலும் இடம்பெற்றுள்ளன. முதல் பாகத்தின் முடிவிலிருந்தே இரண்டாம் பாகத்தின் கதை தொடங்குகிறது. முதல் பாகத்தை பார்க்காதவர்களும் இந்தப் படத்தை ரசிக்க முடியும். ஆனால் முதல் பாகத்தை பார்த்து வந்தால் கூடுதல் அனுபவமாக இருக்கும்.

முதல் பாகத்தைப் போல இல்லாமல் வித்தியாசமான அனுபவத்தை வழங்குவதற்காக தொழில்நுட்பக் கலைஞர்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தென் தமிழகத்தைச் சேர்ந்த உண்மையான குஸ்தி வீரர்களை அழைத்து பயிற்சி அளித்து பல காட்சிகளை படமாக்கியுள்ளோம்.

காமெடி திரைப்படம் உருவாக்குவது எளிதல்ல. அது கத்தி மேல் நடப்பது போன்றது. அதே நேரத்தில் கருத்துக்களை சொல்லும் படங்களும், முழுமையான பொழுதுபோக்கு படங்களும் அவசியம். இந்தப் படம் குடும்பங்கள் ஒன்றாக ரசிக்கும் வகையில் உருவாகியுள்ளது” என்றார்.

மேலும், தனது எதிர்கால திட்டங்கள் குறித்து பேசிய அவர், “முண்டாசுப்பட்டி, ராட்சசன், எஃப்.ஐ.ஆர் உள்ளிட்ட எனது சில படங்களின் இரண்டாம் பாகங்களை உருவாக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதற்கான சூழ்நிலைகள் அமைய வேண்டும். ‘இரண்டாம் வானம்’ திரைப்படத்தின் பணிகளும் இறுதிக்கட்டத்தில் உள்ளன. விரைவில் அது வெளியாகும்” என்று தெரிவித்தார்.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பேசுகையில், “என் வாழ்க்கையில் செய்த புண்ணியத்தால்தான் ‘கட்டா குஸ்தி’ போன்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்று நினைக்கிறேன். அதேபோல் இரண்டாம் பாகத்திலும் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

கதாபாத்திரத்திற்காக சில சிறப்பு பயிற்சிகளையும் எடுத்துக்கொண்டேன். இது முழுமையான விளையாட்டு திரைப்படமாக இல்லாமல், குடும்ப உறவுகளையும் உணர்வுகளையும் பேசும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக மட்டுமல்லாமல், அனைவரும் இணைந்து ரசிக்கும் குடும்பப் படமாக இது இருக்கும்” என்றார்.

முதல் பாகத்தைப் போலவே நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் உறவுகளின் அழகை பேசும் ‘கட்டா குஸ்தி 2’, ஜூலை 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button