
ஒரு மருத்துவக் கல்லூரி ஹாஸ்டல்… பல ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கும் 418-வது அறை… அந்த அறைக்குள் நுழையும் பெண்களை வேட்டையாடும் அமானுஷ்ய சக்தி… இப்படி ஒரு மர்மமான கதைக்களத்துடன் உருவாகியிருக்கும் ஹாரர் த்ரில்லர் திரைப்படம்தான் ‘418’.
கேஜிஎஃப் பட இயக்குநர் பிரசாந்த் நீல் வழங்கியிருக்கும் இப்படத்தை கிர்டன் நடகவுடா இயக்கியுள்ளார்.
தனது ஒரே மகனை எப்படியாவது டாக்டராக்க வேண்டும் என்ற கனவுடன் பெற்றோர் தங்களது சொத்துக்களை விற்று வேதகிரி மருத்துவக் கல்லூரியில் சேர்க்கின்றனர். அங்குள்ள ஆண்கள் விடுதியில் தங்கிப் படிக்கத் தொடங்கும் மாணவனுக்கு, பக்கத்து அறையான 418 குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிய வருகின்றன.
எப்போதும் பூட்டியே கிடக்கும் அந்த அறைக்குள் ஒரு கொடூரமான பேய் இருப்பதாகவும், குறிப்பாக பெண்கள் அந்த அறைக்குள் நுழைந்தால் உயிருடன் திரும்ப முடியாது என்றும் கூறப்படுகிறது.
இதன் பின்னணியில் இருக்கும் மர்மத்தை அறிய முயற்சிக்கும் மாணவனுக்கு அடுத்தடுத்து பல திகிலூட்டும் சம்பவங்கள் நடக்கின்றன.
இதற்கிடையே மாணவி ஒருவர் 418-வது அறைக்குள் நுழைந்தே தீருவேன் என்று சவால் விடுகிறார். அந்தச் சவால் என்ன ஆனது? அறைக்குள் இருக்கும் அமானுஷ்ய சக்தியின் பின்னணி என்ன? அந்த அறைக்கும் புராணக் கதைக்கும் என்ன தொடர்பு? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சைத்ரா ஜே ஆச்சார், பேயாக மாறும் காட்சிகளில் தனது நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். அவரது கதாபாத்திரத்திற்குப் பின்னால் இருக்கும் மர்மத்தை இயக்குநர் இடைவேளைக்குப் பிறகு வெளிப்படுத்தியிருப்பது கதைக்கு கூடுதல் வலு சேர்க்கிறது.
ரமேஷ் இந்திரா, சூரியராஜ் வீரபத்ணி, சரண் லக்க ராஜு, ப்ரீத்தி பகடாலா, ஸ்ரீ வைஷ்ணவ், ஷஷாங் பட்டேல் உள்ளிட்டோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களைச் சிறப்பாகக் கையாண்டுள்ளனர்.
பொதுவாக பேய்ப் படங்களில் பாழடைந்த பங்களா, அடர்ந்த காடு போன்ற இடங்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால் இந்தப் படத்தில் நான்கு மாடிகள் கொண்ட மருத்துவக் கல்லூரி விடுதியையே திகிலூட்டும் இடமாக மாற்றியிருக்கிறார் இயக்குநர்.
மங்கலான விளக்குகள், இருள் சூழ்ந்த நடைபாதைகள், மர்மமான அறைகள் என ஒவ்வொரு காட்சியிலும் பயத்தை உருவாக்க முயற்சித்திருக்கிறார்கள்.
குறிப்பாக 418-வது அறைக்குள் ஒரு பெண் நுழைய முயற்சிக்கும் காட்சியும், அதைத் தொடர்ந்து நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களும் படத்தின் முக்கியமான திகில் தருணங்களாக அமைந்துள்ளன.
கிளைமாக்ஸில் வரும் கடைசி 20 நிமிடங்கள் படத்தின் மிகப்பெரிய பலம். அடுத்த நொடி என்ன நடக்கும் என்ற பதற்றத்துடன் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஹாரர் திரைப்படங்களுக்கு பின்னணி இசையும் ஒளிப்பதிவும் மிகவும் முக்கியம். அந்த வகையில் வெங்கி ஜி ஜியின் பின்னணி இசை திகில் காட்சிகளுக்குக் கூடுதல் பலம் சேர்க்கிறது.
ஒளிப்பதிவாளர் தினேஷ் திவாகரன் இருள், வெளிச்சம் இரண்டையும் பயன்படுத்தி விடுதியின் மர்மமான சூழலைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
நவீன் எர்ணேணி, ரவிசங்கர் எளமஞ்சலி ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை பிரசாந்த் நீல் வழங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் கிர்டன் நடகவுடா வழக்கமான பழிவாங்கும் பேய்க் கதையாக மட்டும் இப்படத்தை உருவாக்காமல், புராணக் கதையுடன் இணைத்து வித்தியாசமான திரைக்கதையை அமைத்திருக்கிறார்.
குறிப்பாக கம்சன் தொடர்பான புராணப் பின்னணியைப் பேயின் கதையுடன் இணைத்திருப்பது எதிர்பாராத திருப்பமாக அமைந்துள்ளது.
முதல் பாதியில் மர்மமான சம்பவங்களுடன் நகரும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் பேயின் பின்னணியை வெளிப்படுத்தி கிளைமாக்ஸை நோக்கி நகர்கிறது.
சில இடங்களில் வழக்கமான பேய்ப் படங்களுக்கே உரிய காட்சிகள் இடம்பெற்றாலும், புராணப் பின்னணியும் இறுதிக்கட்டத் திருப்பங்களும் படத்திற்கு தனித்துவம் கொடுக்கின்றன.
‘418’ திரைப்படம் வெறும் பேய்ப் படமாக மட்டுமில்லாமல், மர்மம், அமானுஷ்யம், புராணப் பின்னணி என மூன்றையும் இணைத்து ரசிகர்களை பயமுறுத்த முயற்சித்திருக்கும் ஹாரர் த்ரில்லர்.
திகிலூட்டும் பின்னணி இசை, இருள் சூழ்ந்த ஒளிப்பதிவு, சைத்ரா ஜே ஆச்சாரின் நடிப்பு, எதிர்பாராத கிளைமாக்ஸ் ஆகியவை படத்தின் பலம்.
418 – பேய்ப் பட ரசிகர்களுக்கு ஒரு திகில் விருந்து!





