
1952ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி பிறந்த சுஷ்மா சுவராஜுக்கு 67 வயது.
வழக்கறிஞரான சுஷ்மா சுவராஜ் பா.ஜ.கவின் டெல்லி முதல்வராக 1998ஆம் ஆண்டு சிறிது காலம் பதவி வகித்து இருக்கிறார்.
1990ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினரானார்.
1996 ஆம் ஆண்டு இந்திய 11ஆவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒளிப்பரப்புத் துறை, குடும்ப நலம், வெளியுறவு என பல்வேறு துறைகளில் அமைச்சராக பணியாற்றி இருக்கிறார்.
ட்விட்டரில் தொடர்ந்து இயங்கிய இவர், ட்வீட் மூலம் தமக்கு வைக்கப்படும் கோரிக்கைகளையும் நிறைவேற்றி இருக்கிறார்.
பாஜகவை சேர்ந்த சுஷ்மா சுவராஜ் கடந்த பாஜக ஆட்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார்.
வெளியுறவுத்துறையில் சிறப்பாக பணியாற்றிய அவர் இந்த முறை அமைச்சர் பதவி வேண்டாம் என்று கூறி தேர்தலில் நிற்காமல் தவிர்த்தார்.
இன்று இரவு அவருக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
“இந்திய அரசியலின் மகத்தானதொரு அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது” என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.




