
‘மாநகரம்’, ‘கைதி’ ஆகிய வெற்றிப் படங்களின் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 64வது படத்தில் நடித்து வருகிறார்.
அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தை XB Film creators நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். மேலும், சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், சேத்தன், ஸ்ரீமன், ரம்யா என பல முன்னனி நட்சத்திரங்கள் பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.
படத்தின் முதற்கட்ட படபிடிப்புகள் சென்னையில் முடிந்துவிட்ட நிலையில், தற்போது டெல்லியில் ஷூட்டிங் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது படத்தின் கதை இணையத்தில் கசிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதை மையமாக வைத்து தற்போதைய கல்வி முறையை சாடும் வகையில் படத்தின் கதை அமைந்துள்ளதாக தகவல் உலா வருகிறது. சர்ச்சைக்குரிய கதையாக இருப்பதால் படம் ரிலீஸ் ஆகுமா என்ற செய்தியும் வந்து கொண்டிருக்கிறது.





