Spotlightவிமர்சனங்கள்

விருமன் – விமர்சனம் 3.5/5

குட்டிப்புலி, கொம்பன், மருது உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா இப்படத்தை இயக்கியிருக்கிறார். கார்த்தி இப்படத்தின் நாயகனாகவும் அதிதி ஷங்கர் இப்படத்தின் நாயகியாகவும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

கதைப்படி,

பிரகாஷ்ராஜ் , சரண்யா தம்பதியினருக்கு நான்கு பிள்ளைகள். இதில் கடைக்குட்டி கார்த்தி (பத்து வயது) மீது அலாதிய பிரியம் உண்டு சரண்யாவிற்கு.. வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணை பிரகாஷ்ராஜ் தொட்ட விஷயம் சரண்யாவிற்கு தெரியவர, தற்கொலை செய்து கொள்கிறார் சரண்யா.

தன் அப்பா பிரகாஷ்ராஜ் மீது கொலைவெறி கோபம் தொற்றிக் கொள்கிறது கார்த்திக்கு.

அதன்பிறகு பத்து வயதிலிருந்து கார்த்தியை வளர்க்கிறார் ராஜ்கிரண்.

பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு சுற்றிவரும் பிரகாஷ் ராஜை கார்த்தி எப்படி நல்லவராக மாற்றினார்.? என்பதே படத்தின் மீதிக் கதை..

நாயகனாக கார்த்தி, மொத்த கதையையும் தாங்கி நிற்கும் தூணாக வருகிறார். விருமனாக சும்மா பட்டையை கிளப்பி சண்டைக் காட்சிகளில் அதகளம் செய்திருக்கிறார்.

நாயகியாக அதிதி ஷங்கர், தேன்மொழி கதாபாத்திரத்தில் கிராமத்துப் பெண்ணாகவே மாறி தனக்கென ஒரு முத்திரையை முத்தாக பதிவு செய்திருக்கிறார். சின்ன சின்ன எக்ஸ்ப்ரஷனில் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொள்கிறார்.

பல படங்களுக்குப் பிறகு சூரி மற்றும் சிங்கம்புலியின் காமெடி 100% இப்படத்தில் கைகொடுத்திருக்கிறது. அடிக்கும் கெளண்டர்களில் திரையரங்குகளில் சிரிப்பலை விண்ணை பிளக்கிறது.

சீனியர் நடிகரான பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் தனது அனுபவ நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். அதிலும், ராஜ்கிரணின் பைட் காட்சிகள் ரசிக்கும்படியாக இருந்தது.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் ஏற்கனவே சூப்பர் டூப்பர் ஹிட். ஆனால், அவருக்கென இருந்த ஒரு பின்னணி இசை தீம், இப்படத்தில் கைகொடுக்கவில்லை.

ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம் தான். ஆர் கே சுரேஷின் வித்தியாசமான கெட்-அப் படத்திற்கு கைகொடுத்திருக்கிறது.

வழக்கமான முத்தையா படம் என்றாலும், எந்த குறையும் இல்லாமல் மக்களுக்கு குடும்ப விருந்து ஒன்றை படைத்து முத்திரை குத்தியிருக்கிறார் முத்தையா.

குடும்பத்தோடு பார்க்கும் படமாக கொடுத்து, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார் முத்தையா. கதையில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் அந்த விமர்சனங்களையும் முத்தையா கடந்து சென்றிருந்திருக்கலாம்.

மொத்தத்தில் விருமன் கொண்டாடப்ப வேண்டியவன்…

Facebook Comments

Related Articles

Back to top button