
ஆதி, ஹன்சிகா, பலாக் லல்வானி, யோகி பாபு, ஜான் விஜய், பாண்டியராஜன், உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “பார்ட்னர்”. காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம் எனக் கூறப்பட்டு வெளிவந்திருக்கும் இப்படத்தின் காமெடி எந்த அளவிற்கு வொர்க்-அவுட் ஆகியிருக்கிறது என்பதை படத்தின் விமர்சனம் மூலம் பார்த்துவிடலாம்.
ஆதிக்கு தன் தங்கையை திருமண பிரச்சனையை முடிக்க லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது. அதற்காக தன் நண்பன் யோகிபாபுவை அழைத்துக் கொண்டு திருடுவதற்கு முயற்சிச் செய்கிறார்.
அதே சமயத்தில், இறந்தவர்களின் உடலில் இருக்கும் டி என் ஏ-வை எடுத்து உயிரோடு இருப்பவர்களின் உடலில் செலுத்தி இறந்தவர்களின் எண்ணங்களை எடுத்து வர முயற்சி செய்கிறார் ஆராய்ச்சியாளராக வரும் பாண்டியராஜன்.
இந்த ப்ளானை திருட முயற்ச்சிக்கிறார் ஜான் விஜய். அதற்காக பணம் தருவதாகவும், அந்த ப்ளானை திருடி வரச் சொல்லி ஆதியை பாண்டியராஜன் இடத்திற்கு அனுப்புகிறார்.
திருடச் சென்ற இடத்தில், தவறுதலாக கண்டுபிடிக்கப்பட்ட மருந்தானது யோகிபாபுவிற்கு செலுத்தப்பட்டு விடுகிறது. அதன்பின், யோகிபாபு ஹன்சிகாவாக மாறி விடுகிறார்.
இது தான் படத்தின் மீதிக் கதை.. யோகிபாபு மீண்டும் பழைய நிலைக்கு வருகிறாரா..?? ஆதிக்கு பணம் கிடைத்ததா?? என்பது தான் படத்தின் மீதிக் கதை.
வழக்கமான நடிப்பையே ஆதி கொடுத்திருக்கிறார். மரகத நாணயம் படத்தில் கொடுத்த அதே மீட்டரான நடிப்பைக் கொடுத்து கவர்ந்திருக்கிறார் நடிகர் ஆதி. இந்த கதைக்கு இது போதும் என்று உணர்ந்து அதை மட்டும் கொடுத்து கவனிக்க வைத்திருக்கிறார்.
யோகி பாபு மற்றும் ஆதியின் கூட்டணியில் வரும் காமெடிகள் பெரிதாக வேலைக்கு ஆகவில்லை. காமெடி களத்திற்கென்று பெரிதான இடமிருந்தும் படக்குழு அதை சரியாக பயன்படுத்தவில்லை என்று தான் தெரிகிறது.
காமெடி என்று கூறி பல இடங்களில் நம்மை எரிச்சலடைய தான் வைத்திருக்கிறார்கள்.
முனீஸ்காந்த், ரவி மரியா, தங்கதுரை என படத்தில் வரும் அனைவரும் காமெடிக்கு பெரிதாக முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், ஒன்று கூட எடுபடாமல் போனது தான் வேதனை.. படத்தை எப்படா முடிப்பீங்க என்ற அளவிற்கு படத்தில் வரும் காமெடி நம்மை ரம்பமாக அறுத்தது தான் மிச்சம்.
ஹன்சிகாவின் நடிப்பு ஒன்றே நமக்கு சற்று ஆறுதலாக இருந்தாலும், அவரும் ஆங்காங்கே நம்மை சோதனையின் உச்சத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார். தெரியாமல் வந்து சிக்கிட்டோம் போல என படம் பார்ப்பவர்களை உணர வைத்துவிட்டார்கள் படக்குழுவினர். எது காமெடி எது சீரியஸ் என்றே கண்டுபிடிக்க முடியாதபடி, கதையை நகர்த்தி நம்மை கடுப்பேற்றிருக்கிறார்கள்.
இசையும் ஒளிப்பதிவும் நமக்கு சற்று ஆறுதல்.. மொத்தத்தில் ஆள விடுங்கப்பா சாமிகளா என்று கதற வைத்துவிட்டார்கள் இந்த பார்ட்னர்கள்…





