
அறிமுக இயக்குனர் கமலக்கண்ணன் இயக்கத்தில் காளிவெங்கட், மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன், ராகவன், ஞானசேகர், , சாய் கணேஷ், ரதிஷ், பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர், தக்ஷனா, சாவித்திரி, குபேரன், செல்லா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் “குரங்கு பெடல்” திரைப்படத்தின் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.
சுமீ பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஜிப்ரான்.
சிவகார்த்திகேயன், சவிதா சண்முகம், சுமீ பாஸ்கரன் படத்தினை தயாரித்திருக்கிறார்கள்.
கதைக்குள் சென்று விடலாம்…
1980 களில் கதை நகர்கிறது. கோடை விடுமுறை வர, கிராமத்து சிறுவர்கள் நால்வர் இணைந்து கோடை விடுமுறையை நன்றாக கழிக்க திட்டமிடுகின்றனர். நால்வரில் ஒருவராக வரும் மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன், விடுமுறை தினத்தில் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ளலாம் என்கிறார்.
அதற்கு மற்ற மூவரும் சம்மதிக்க, வாடகைக்கு சைக்கிள் எடுத்து கற்றுக் கொள்ள ஆரம்பிக்கின்றனர்.
சந்தோஷ் தவிர்த்து மற்ற மூவரும், ஊரில் பணக்கார சிறுவன் புதிதாக சைக்கிள் வாங்கியதும் அங்கு சென்று விடுகின்றனர்.

காளி வெங்கட்டின் மகனாக வரும் சந்தோஷ் வசதி இல்லாததால், தினசரி வீட்டில் இருந்து காசு திருடி கொண்டு வந்து சைக்கிளை வாடகைக்கு எடுத்து கற்றுக் கொள்கிறார்.
சைக்கிள் ஓட்டத் தெரியாத காளி வெங்கட்டின் மகன் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டாரா.?? நண்பர்களுடன் போட்ட சவாலில் சந்தோஷ் வேல்முருகன் வென்றாரா .?? என்பதே படத்தின் மீதிக் கதை.
ஒரு அழகான கிராம வாழ்வியலை எடுத்துக் கொண்டு அதற்கு உயிராக சரியான திரைக்கதையையும் அமைத்து, தெளிவான ஒரு நீரோட்டம் போல ஒரு படைப்பை கொடுத்திருக்கிறார் இயக்குனர் கமலக்கண்ணன்.
மிலிட்டரி சைக்கிள் கடையில் நடக்கும் கலாட்டா,
தம்பி மீது அக்கா காட்டும் அன்பு,
மகன் கேள்வி கேட்கும் போது எதுவும் செய்ய முடியாமல் குறுகி நிற்கும் தந்தை,
ஆசிரியர் மாணவனுக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்தது,
சைக்கிள் ஓட்டும் போது சிறுவனுக்குள் எழுந்த மகிழ்ச்சி,
நண்பன்(காளி வெங்கட்) ஏன் சைக்கிள் கற்றுக் கொள்ளாமல் போனான் என்பதற்கான விளக்கம்
என படத்தில் கைதட்டும் இடங்கள் பலவற்றை வைத்திருக்கிறார் இயக்குனர் கமலக்கண்ணன்.

படத்தில் நடித்த சிறுவர்கள் அனைவரும் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்கள். வழக்கம் போல் நடிகர் காளி வெங்கட், அக்கதாபாத்திரமாகவே மாறி அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்து விட்டுச் சென்றிருக்கிறார்.
கிராமத்தில் இருப்பவர்களின் வழக்காடு மொழி நம்மை பெரிதும் கவர்கிறது.
1980 களில் வாழ்ந்த அனைவருக்கும், இப்படத்தில் ஒரு இடத்திலாவது நாமலும் இப்படி வாழ்ந்திருக்கிறோமே என்ற நினைவை தட்டி எழுப்பாமல் இருக்காது.
மிகவும் நேர்த்தியான ஒளிப்பதிவு, கனக்கச்சிதமான எடிட்டிங் என படத்திற்கு அனைத்துமே பக்கபலமாக அமைந்திருக்கிறது.
பாடல் மற்றும் பின்னணி இசை தனது முத்திரையை பதித்து வென்று காட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.
மொத்தத்தில்,
குரங்கு பெடல் – 1980 – 90 களின் வாழ்வியல்…





