
அறிமுக இயக்குனர் எழில் பெரியவேடி இயக்கத்தில் ஹரி சங்கர், சங்கீதா கல்யாண், குரு, ராஜேந்திரன், மகேந்திரன், ப்ரேம்நாத் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகி வெள்ளியன்று திரைக்கு வரும் படம் தான் பராரி.
இப்படத்தினை, கலா பிலிம்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட் சார்பில் ஹரி சங்கர் தயாரித்திருக்கிறர். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.
கதைக்குள் பயணித்து விடலாம்….
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு கிராமம். சாலைக்கு இந்த பக்கம் ஒரு சாதியை சேர்ந்தவர்களும் சாலைக்கு அந்த பக்கம் மற்றொரு சாதியை சார்ந்தவர்களும் வாழ்ந்து வருகின்றனர்.
இதில் ஹீரோ ஹரி சங்கர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக வருகிறார். தன் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். மற்றொரு சாதியைச் சார்ந்த வகுப்பினர் தொடர்ச்சியாக ஹரி சங்கருக்கும் அவரது நண்பர்களுக்கும் இன்னல்கள் கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர்.
இந்த சூழலில், ஹரி சங்கரை கொலை செய்ய திட்டமிடுகின்றனர் சாலையின் அந்த பக்கம் இருக்கும் சாதியினர். அதற்காக நாள் பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள ஒரு தனியார் பேக்டரிக்கு இரு சாதியினை சார்ந்த மக்களும் 3 மாத பணிக்காக செல்கின்றனர்.
அங்கு வைத்து ஹரி சங்கரை கொலை செய்ய நினைக்கின்றனர். அதேசமயம், அந்த பேக்டரியில் கன்னட வெறியர்கள் சிலர் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு தமிழர்களை கண்டாலே கோபமடைகின்றனர்.
அதன்பிறகு கதையில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் ஹரி சங்கர், இப்படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் உணர முடிகிறது. கோபம், ஆக்ரோஷம் என ஒவ்வொரு இடத்திலும் தனக்கான தனி முத்திரை நடிப்பை அழகாக கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்.
மேலும், நாயகி சங்கீதாவின் நடிப்பும் பெரிதாக பாராட்டும்படியாக இருந்தது. அதிலும் க்ளைமாக்ஸ் காட்சியின் ஹரி சங்கர் மற்றும் சங்கீதாவின் நடிப்பு கண்களில் நீரை எட்டிப் பார்க்க வைத்துவிட்டது.
படத்தில் நடித்த குரு, ராஜேந்திரன், மகேந்திரன், ப்ரேம்நாத் உள்ளிட்ட நடிகர்களும் தங்களுக்கான நடிப்பை மிக அழகாக கொடுத்திருக்கிறார்கள். ஊர் தலைவர்களாக நடித்தவர்கள், ஹீரோவின் அப்பா, ஹீரோயின் அப்பா, கம்யூனிஸ்ட் கட்சிக்காரர் என படத்தில் தோன்றிய அனைவரும் அனுபவ நடிகர்கள் போன்ற நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்..
ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் தனி ரகம் தான். பின்னணி இசையும் பெரும் பலமாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் ஒளிப்பதிவை தெளிவாக கொடுத்திருக்கிறார்.

கதையும் திரைக்கதையும் நன்றாக இருந்தாலும், இவ்வளவு ஆக்ரோஷம் தேவையா என்று பல இடங்களில் கேட்க தோன்றுகிறது. எதற்காக இப்படியான வெறியோடு திரைக்கதையை நகர்த்த வேண்டும்.?
சாதி வெறியை எதற்காக இப்படியான கோபம் கொண்டு கொப்பளிக்க வேண்டும். அதை சினிமா மொழியில் கொடுக்கலாமே.? க்ளைமாக்ஸ் காட்சியில் ஆடையை உருவ வேண்டும், செருப்பு மாலை என்பது என்ன மாதிரியான காட்சியமைப்பு.? அந்த காட்சியெல்லாம் ஏதோ திணித்தது போன்று இருந்தது.
அனைவரின் சாதி சண்டைக்கும் யார் காரணம் என்று கூறியது மட்டுமே படத்தின் ஒரே ஆறுதல்.
பராரி – முக சுழிவு



