
இயக்குனர் விவி கதிரேசன் இயக்கத்தில் ஆர்யன் ஷ்யாம், ஆத்யா பிரசாத், லிமா பாபு, கிஷோர் ராஜ்குமார், ராஜ்குமார், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ”அந்த நாள்”.
சதீஷ் கதிர்வேல் ஒளிப்பதிவு செய்ய ராபர்ட் சற்குணம் இசையமைத்திருக்கிறார். படத்தின் ஹீரோவான ஆர்யன் ஷ்யாம் படத்தினை தயாரித்திருக்கிறார். பிரபல படத் தயாரிப்பு நிறுவனமான ஏ வி எம் நிறுவனத்தின் குடும்பத்தின் உறுப்பினர் தான் இந்த ஆர்யன் ஷ்யாம்.
மனித நரபலி என்ற சர்ச்சையான ஒரு கதையை தான் படத்தின் ஒன்லைனாக இருக்கிறது. படம் எதை கூற வருகிறது என்பதை விமர்சனம் மூலம் பார்த்து விடலாம்.
நாயகன் ஆர்யன் ஷ்யாம், திரைப்படம் எடுக்கவிருக்கிறார். அதற்கான கதைகளத்தில் இருந்து வருகிறார். ஆத்யா பிரசாத் மற்றும் லிமா பாபு இருவரும் உதவி இயக்குனர்களாக இருக்கின்றனர்.
பயங்கரமான ஹாரர் கதையை படமாக எடுக்கும் முடிவில் இருக்கிறார் நாயகன். அதற்கான கதை விவாதத்திற்காக தனியார் ரெசார்ட் ஒன்றிற்கு அனைவரும் செல்கின்றனர். ஆர்யன் ஷ்யாமோடு அவரது நண்பரும் இருக்கிறார். மேலும், உதவிகரமாக இமான் அண்ணாச்சியும் இவர்களோடு அங்கே இருக்கிறார்.
கதை விவாதம் செய்யும் போது ஓஜோ போர்ட் வைத்து விளையாடும் விளையாட்டை விளையாடுகின்றனர். அப்போது, அதில் ஒரு அமானுஷ்யத்தோடு உரையாடுகின்றனர். அந்த விளையாட்டை பாதியில் நிறுத்தி விடுகின்றனர்.
இரவில் அனைவரும் தூங்கிய பிறகு, அமானுஷ்யம் அனைவரையும் பயமுறுத்துகிறது. மேலும், அங்கிருக்கும் கேமராவில் உள்ள வீடியோவை பார்க்குமாறும் கூறுகிறது அந்த அமானுஷ்யம். அந்த வீடியோவில், ஒரு குடும்பம் அதே ரெசார்டில் சந்தோஷமாக இருக்கிறார்கள். மர்ம நபர் ஒருவர் முகத்தில் மாஸ்க் அணிந்து அவர்களை கொடூரமாக தாக்குகிறான்.
வீடியோ முடியும் சமயத்தில் அதே மர்ம நபர் இவர்களை தாக்க முற்படுகிறான். இதனால் அனைவரும் அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்கள்.
அவர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பித்தார்களா.? யார் அந்த மர்ம நபர்.?? நரபலி கொடுப்பது யார்.,??? என்ற கேள்விக்கெல்லாம் விடை இரண்டாம் பாதியில் இருக்கிறது.
நாயகன் ஆர்யன் ஷ்யாம் புதுமுக நடிகர் என்பது போல் இல்லாமல், ஒரு அனுபவ நடிகரின் நடிப்பைக் கொடுத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் கதாபாத்திரத்திற்கான மெனக்கெடல் நன்றாகவே தெரிந்தது. தமிழ் சினிமாவில் நிச்சயம் ஒரு ரெளண்ட் அடிப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. முதல் பாதியில் சற்று அமைதியாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் தனது கேரக்டரை வலுவாக புரிந்து கொண்டு வேகம் காட்டியிருக்கிறார் ஆர்யன் ஷ்யாம்.
நாயகி ஆத்யா, காட்சிகளில் தேவதையாக காட்சியளித்திருந்தார். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை விரைவில் பிடிப்பார் இந்த ஆத்யா. இமான் அண்ணாச்சியின் காமெடிகள் ஆங்காங்கே ரசிக்க வைத்தன.
படத்தின் மிகப்பெரும் பலமே திரைக்கதையின் வேகம் தான். ஒவ்வொரு காட்சியையும் அதிவேகமாக செல்வதால் படத்தினை சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்கும்படி ஆக்கியிருக்கிறார் இயக்குனர். மனித நரபலி குறித்து பேசியிருப்பதால், படத்தின் மீதான சுவாரஸ்யம் பல மடங்கு அதிகரித்திருக்கிறது.
பின்னணி இசை படத்தின் கதையோடு பயணிக்கிறது. இரவு நேர காட்சிகளை அழகாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். அதுமட்டுமல்லாமல், அந்த கேமராவில் பதிவாகியிருக்கும் காட்சியை காட்சிப்படுத்திய விதம் அருமை.
முதல் படத்திலேயே நரபலி குறித்த பல மர்மங்களை வெளிக்கொண்டு வந்து அனைவரையும் வியப்படைய வைத்திருக்கிறார் ஆர்யன் ஷ்யாம்.
ஹாரர் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு தரமான விருந்து தான் இந்த “அந்த நாள்”





