Spotlightசினிமா

வீர தீர சூரன் – விமர்சனம் 4/5

ண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட இயக்குனர் எஸ் யூ அருண்குமார் அவர்களின் இயக்கத்தில் விக்ரம், துஷாரா விஜயன், சூரஜ், எஸ் ஜே சூர்யா, ப்ருத்வி ராஜ், பாலாஜி, ரமேஷ் இந்திரா, மாலா பார்வதி, ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ”வீர தீரன் சூரன் பாகம் 2”

முதலில் பாகம் 2 வெளியிட்டுவிட்டு, அதன் தொடர்ச்சியாக பாகம் ஒன்றினை வெளியிட இயக்குனர் திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறார்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் தேனி ஈஸ்வர். மேலும், இசையமைத்திருக்கிறார் ஜி வி பிரகாஷ்குமார்.

படத்தொகுப்பு செய்திருக்கிறார் பிரசன்னா. தயாரித்திருக்கிறது HR Pictures நிறுவனம்.

கதைக்குள் பயணித்துவிடலாம்…

மதுரை அருகே ஒரு கிராமம் கோவில் திருவிழாவிற்காக தயாராகி வருகிறது. திருவிழா அன்று இரவு கதை நகர ஆரம்பிக்கிறது.

”கணவனை காணவில்லை, நீங்கள் தான் ஏதோ செய்து விட்டீர்கள்” என்று ஒரு பெண் தனது மகளோடு வந்து பெரியவர் (ப்ருத்வி ராஜ்) வீட்டில் கத்தி கூச்சலிடுகிறார்.

அதன் தொடர்ச்சியாக அடுத்த காட்சியில், பெரியவர் வீட்டிற்குச் சென்ற தனது மனைவியும் குழந்தையையும் காணவில்லையென்று போலீஸ் அலுவலகத்தில் புகார் அளிக்கிறார் அப்பெண்ணின் கணவர்.

ஏற்கனவே பெரியவர் மீதும் அவர் மகன் சுராஜ் மீது கடும் கோபத்தில் இருந்த SP எஸ் ஜே சூர்யா, இருவரையும் என்கெளண்டர் செய்ய இதுவே சரியான தருணம் என்று அதற்கான வேலையில் இறங்குகிறார் எஸ் ஜே சூர்யா.

பெரியவர் எஸ் ஜே சூர்யாவிடம் பேசிபார்த்தும் எந்த முடிவும் எட்டப்படாததால், எஸ் ஜே சூர்யாவை கொலை செய்துவிட திட்டமிடுகிறார் பெரியவர்.

எஸ் ஜே சூர்யாவை கொலை செய்ய வேண்டுமென்றால், அது காளியால் (விக்ரம்) மட்டுமே முடியுமென்று அவரை தேடிச் செல்கிறார் பெரியவர்.

இரண்டு குழந்தைகள், மனைவி துஷாரா விஜயனோடு ஒரு எளிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் விக்ரம். அதே கிராமத்தில் பெட்டிக்கடை ஒன்றை நடத்தி தங்களது வாழ்வாதாரத்தைப் பார்த்து வருகின்றனர்.

பல வருடங்களுக்கு முன் அடிதடி, வெட்டு, குத்து, கொலை என்பதையே பிழைப்பாக வைத்திருந்தார் விக்ரம்.

தன் மகனைக் காப்பாற்ற எஸ் ஜே சூர்யாவை கொன்றால் மட்டுமே முடியும் என்று விக்ரமின் காலில் வந்து விழுகிறார் பெரியவர்.

தன்னை வளர்த்தவர் என்ற காரணத்திற்காகவும் தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகவும் எஸ் பி’யை கொலை செய்ய சம்மதிக்கிறார் விக்ரம்.

அதன்பின் என்ன நடந்தது என்பது படத்தின் மீதிக் கதை.

ஒட்டுமொத்த கதையையும் தனி ஒருவனாக தாங்கிச் சென்றிருக்கிறார் காளியான விக்ரம். படத்தின் ஆரம்பத்தில் அவர் இல்லாமலேயே 15 நிமிட காட்சிகள் நகர்கிறது. அவர் எப்போது வருவார் என்ற ஒரு ஆர்வத்தை அந்த 15 நிமிடம் எகிற வைக்கிறது.

தொடர்ந்து, அவர் வந்த பிறகும் எப்போது தனது அவதாரத்தை காட்டுவார் என்ற ஆர்வத்தையும் காட்டிக் கொண்டே இருந்தது படத்தில் ஒரு ஈர்ப்பைக் கொடுத்துக் கொண்டே இருந்தது.

பல வருடங்களுக்குப் பிறகு சீயான் ரசிகர்களுக்கென்றே ஒரு தரமான படமாக இப்படம் உருவாகியிருக்கிறது. ஜி வி பிரகாஷ்குமாரின் BGMற்கும் விக்ரமின் லுக்கிற்கும் திரையரங்கில் விசில் சத்தம் விண்ணைப் பிளக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

விக்ரம் – துஷாரா விஜயன் இருவருக்குமிடையேயான காதல் காட்சிகள் அனைவரையும் மனைவியுடன் கூடுதல் காதல் செய்யத் தூண்டும் அளவிற்கான தரமான ஜோடியாக காட்சிகளில் பிரதிபலித்தனர்.

க்ளைமாக்ஸ் காட்சியில் துஷாரா விஜயனின் நடிப்பு மிரட்டல் தான். வில்லனுக்கே அளவெடுத்து இருப்பது போல், தனது பார்வையாலும் உடல் மொழியாலும் தனி ராஜாங்கத்தை நடத்தி வரும் எஸ் ஜே சூர்யா, இப்படத்திற்கு மிகப்பெரும் பலம் என்றே கூறலாம்.

தரமான அக்மார்க் வில்லனாக காட்சிகள் காட்சியளிக்கிறார். பிரபல மலையாள நடிகரான சுராஜ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அடியெடுத்து வைத்திருக்கிறார். மிரள வைக்கும் நடிப்பைக் கொடுத்து ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார் சுராஜ்.

அக்கதைக்களத்தோட முகமாக இருந்தவர் நடிகர் பாலாஜி. வெங்கட் என்ற கதாபாத்திரத்தில் தோன்றி மிகவும் எதார்த்தமான நடிப்பைக் கொடுத்திருந்தார் பாலாஜி.

மேலும், படத்தில் நடித்த ப்ருத்வி ராஜ், ரமேஷ் இந்திரா உள்ளிட்ட சீனியர் நடிகர்களும் தங்களின் கதாபாத்திரங்களுக்கு வலு சேர்க்கும் அளவிற்கான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

தரமான கதையை உருவாக்கி, அதைத் தரமான திரைக்கதைக்குக் கொண்டு சென்று தரமான ஒரு படைப்பைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் அருண்குமார்.

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்திய சினிமாவிலேயே இல்லாத மாதிரியான ஒரு வித்தியாசமான படைப்பாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர்.

சிங்கிள் ஷாட்டாக செல்லும் காட்சி பிரம்மிப்பாக இருந்தது. கதாபாத்திரங்களை காட்சிப்படுத்திய விதம், பெண்களை படத்தில் முக்கியமான காரணியாக பயன்படுத்தியது என பாசிடிவ் விஷயங்கள் அநேகம் இப்படத்தில் உண்டு.

திருமணத்திற்கு முன் இருந்த காளி எப்படி இருந்தார்.? காளிக்கும் திலீப்பிற்கும் இடையேயான நட்பு எந்த எல்லை வரையானது.?? உள்ளிட்ட கேள்விகளுக்கு முதல் பாகத்தில் விடை வைத்திருக்கிறார் இயக்குனர்.

ஜி வி பிரகாஷ்குமார் பி ஜி எம் படத்தினை பார்க்கும் நம்மை மெய் சிலிர்க்க வைத்துவிடுகிறது. அப்படியொரு மிரட்டலான இசையை கொடுத்திருக்கிறார் ஜிவி.

தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம் என்றே கூறலாம். அப்படியொரு ஒளிப்பதிவை மிகவும் நேர்த்தியாக கையாண்டு படைப்பிற்கு கூடுதல் பலமாக நின்றிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

பிரசன்னாவின் படத்தொகுப்பு அப்ளாஷ் செய்யும் அளவிற்கு இருந்தாலும் கொஞ்சம் கத்தியை போட்டிருக்கலாமோ என்று தோன்றியது.

வீர தீர சூரன் – மிரட்டல்..

Facebook Comments

Related Articles

Back to top button