Spotlightவிமர்சனங்கள்

கர – திரை விமர்சனம் 4/5

விக்னேஷ் ராஜா அவர்களின் இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜு, கே.எஸ். ரவிக்குமார், ஜெயராம், சுராஜ் வெஞ்சரமூடு, கருணாஸ், பிருத்வி பாண்டியராஜன், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் இந்த “கர”.

படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்தவர்கள்:

எழுத்து & இயக்கம்: விக்னேஷ் ராஜா
கூடுதல் திரைக்கதை & வசனங்கள்: ஆல்ஃபிரட் பிரகாஷ், விக்னேஷ் ராஜா
ஒளிப்பதிவு: தேனி ஈஸ்வர்
படத்தொகுப்பு: ஸ்ரீஜித் சாரங்
கலை இயக்கம்: மாயபாண்டி
ஆடை வடிவமைப்பு: காவ்யா ஸ்ரீராம்
பப்ளிசிட்டி டிசைன்: கபிலன் செல்லையா
மியூசிக் லேபிள்: வெல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல்
மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ், சதீஷ் (AIM)

கதைப்படி,

திருட்டு தொழிலில் ஈடுபட்டு வருகிறார் தனுஷ் (கரசாமி). போலீஸாக வரும் சுராஜிடம் வசமாக சிக்கி அங்கிருந்து ஓட்டம் பிடித்து வேறு ஒரு இடத்தில் தனது மனைவி மமீதாவுடன் வாழ்ந்து வருகிறார். திருடாமல், ஒரு ஹோட்டலில் தினக்கூலி வேலை பார்த்து வருகிறார் தனுஷ். பொருளாதாரத்தில் மிகவும் கஷ்டப்படுவதால், தனியாக ஹோட்டல் ஒன்றை ஆரம்பிக்க நினைக்கிறார் தனுஷ். அதற்கு பணம் வேண்டுமே என்று தனது சொந்த கிராமமான இராமநாதபுரத்திற்கு வருகிறார் தனுஷ். சுமார் 16 வருடத்திற்கு முன்பு தனது தந்தை கே எஸ் ரவிக்குமாரின் பணத்தை திருடி ஊரை விட்டு ஓடிச் சென்ற தனுஷ், மீண்டும் தனது அப்பாவை சந்திக்கிறார்.

நீரின்றி, விவசாயமின்றி கிராமமே பஞ்சத்தில் மூழ்கி கிடக்கிறது. விவசாயிகள் அனைவரும் வங்கியில் கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்த முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.

தனது மகன் தனுஷை கண்டதும் அழுதுவிடுகிறார் கே எஸ் ரவிக்குமார். தொடர்ந்து, நிலத்தை விற்று அதில் கிடைக்கும் பணத்தைப் பெறுவதற்காகத் தான் தான் வந்ததாக கே எஸ் ரவிக்குமாரிடம் கூறுகிறார் தனுஷ். இதனால், மனமுடைந்த கே எஸ் ரவிக்குமார், நான் இருக்கும் வரையிலும் விவசாய பூமியை விற்க மாட்டேன் என்று பிடிவாதமாக கூறி விடுகிறார்.

இதனால், கோபத்தில் அங்கிருந்து சென்று விடுகிறார் தனுஷ். கோபம் தணிந்து மறுநாள் சென்று பார்க்கையில் கே எஸ் ரவிக்குமார் இறந்து கிடக்கிறார். பிணத்தை தங்களது சொந்த இடத்தில் புதைப்பதற்காகச் செல்ல, அங்கிருந்து வந்த வங்கி ஊழியர்கள் நிலம் வங்கியின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், பிணத்தை அங்கு புதைக்கக் கூடாதென்றும் கூறிவிடுகின்றனர்.

இதனால், தனது அப்பா பிணத்தை தனது சொந்த நிலத்தில் புதைக்க முடியாமல் தவிக்கிறார் தனுஷ். அதன் பிறகு தனுஷ் என்ன மாதிரியான முடிவெடுத்தார்.? இதனால் அவரது வாழ்க்கையில் என்ன நடந்தது.?? உள்ளிட்ட கேள்விகளுக்கெல்லாம் இரண்டாம் பாதியில் விடை வைத்திருக்கிறார் இயக்குனர்.

போர்தொழில் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனித்துவமான இடத்தை பிடித்தவர் தான் இந்த விக்னேஷ் ராஜா. இரண்டாவது படமே தனுஷ் என்ற பெரிய நடிகரின் கால்ஷீட்டைப் பெற்று, அவரை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார். தொடர்ந்து படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சினிமா ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்திருந்தார் விக்னேஷ் ராஜா.

சில வருடங்களாக வரிசையாக எந்தவொரு தோல்வியையும் சந்திக்காத தனுஷின் சினிமா கேரியரில் இந்த படம் ஒரு முக்கியமான திரைப்படமாக இருக்கும் என்று பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறார் தனுஷ். அப்படியாக பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே இந்த படம் தற்போது திரையரங்கில் வெளியாகியுள்ளது.

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், அந்த கதாபாத்திரமாகவே மாறி அந்த கதாபாத்திரமாகவே படம் முழுவதும் பயணிப்பவராக வருபவர் தான் தனுஷ். இதுவரை அவர் நடித்த படங்கள் அனைத்திலுமே, எவரும் குறை கூற முடியாத அளவிற்கு தான் அவரது நடிப்பு இருக்கும் என்பதில் எவருக்கும் எந்த மாற்றுக் கருத்து இருந்ததில்லை. இந்த படத்திலும் அதேதான் நடந்துள்ளது. அவரது நடிப்பை எந்த இடத்திலும் நாம் குறை சொல்லவே முடியாது. கரசாமி என்ற கதாபாத்திரத்தை படம் முழுவதும் தனது தோளில் சுமந்து சென்றிருக்கிறார் தனுஷ். நாளுக்கு நாள் தனுஷின் கதை கேட்கும் திறனும் நடிப்பாற்றலும் கூடிக் கொண்டே சென்று கொண்டிருக்கிறது என்பதை இந்த படம் மூலமே தெரிந்து கொள்ளலாம்.. இந்த படத்திற்காக மீண்டும் ஒருமுறை தேசிய விருது கிடைத்தால் கூட ஆச்சர்யப்படுவதிற்கில்லை.

மமிதா பைஜுவுடனான தனது காதலை வெளிப்படுத்தும் காட்சியாக இருக்கட்டும், செண்டிமெண்ட் காட்சியாக இருக்கட்டும், ஆக்‌ஷன் காட்சியாக இருக்கட்டும் என பல கோணங்களில் தனது நடிப்பின் உட்சத்தை இந்த படத்தில் தனுஷ் காட்டியிருக்கிறார்.

டியூட் படத்தில் கலகலவென சிரித்து பேசும் பெண்ணாக நடித்து அனைவரையும் ரசிக்க வைத்த நாயகி மமிதா, இந்த படத்தில் சீரியஸான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார். தன்னால் எந்தவொரு கதாபாத்திரம் கொடுத்தாலும், அதனை அழகாக செய்து முடிக்க முடியும் என்று இந்த படத்தின் மூலம் அவர் நிரூபித்திருக்கிறார்.

கே எஸ் ரவிக்குமாரின் நடிப்பு இந்த படத்தில் அனைவராலும் பெரிதாக பேசப்படும். எப்போதும் கலகலப்பாக சிரித்து பேசி வந்த கே எஸ் ரவிக்குமாரின் சினிமா கேரியரில் இப்படம் நடிப்பிற்கென்று ஒரு சரியான தீணி தான் இந்த படம்.

இதுவரை யாரும் பாத்திராத ஒரு கதாபாத்திரத்தில் தன்னை நிலைநிறுத்தி தனது கேரக்டரை பேச வைத்திருக்கிறார் சுராஜ். தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், ஒவ்வொரு படத்திலும் தனித்துவமான நடிப்பினைக் கொடுத்திருந்த சுராஜ், இந்த படத்திலும் அப்படியொரு நடிப்பைக் கொடுத்து நம்மை மிரள வைத்திருக்கிறார். அதிலும், அவரது கண்கள் அப்படியொரு நடிப்பைக் காட்டியிருக்கிறது.

கருணாஸ், பிருத்வி பாண்டியராஜன், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டத்தை அளவாக நடித்து முடித்திருக்கின்றனர்.

படத்தின் மிகப்பெரும் பலமே திரைக்கதை தான். எந்தவொரு இடத்திலும் கதை தொய்வடையாமல் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பிலேயே மொத்த படத்தையும் நகர்த்திச் சென்று, படம் பார்ப்பவர்களை சீட்டின் நுனிக்கே கொண்டு வந்துவிட்டார் இயக்குனர். வங்கிக்குள் ஆடுகளம் நரேன் வரும் காட்சியில் தனுஷ் சிக்கிவிடுவாரோ என்ற படபடப்பை கொண்டு வந்த காட்சியாக இருக்கட்டும், படத்தின் ஆரம்பத்தில் வீட்டிற்கு புகுந்து கொள்ளையடிக்கும் காட்சியாக இருக்கட்டும் என பல இடங்களில் இதயத்துடிப்பை அதிகப்படுத்துவதற்கான காட்சிகளை நன்றாகவே வைத்திருக்கிறார் இயக்குனர்.

தனுஷின் படம் என்றாலே ஜி வி பிரகாஷ்குமாருக்கு எங்கிருந்து தான் வருமோ அந்த எனர்ஜி. அப்படியொரு இசையைக் கொடுத்து படத்தினை அடுத்தத் தளத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறார் ஜி வி பிரகாஷ் குமார். பாடல்களாக இருக்கட்டும், பின்னணி இசையாக இருக்கட்டும் என இரண்டிலும் தனது உட்சபட்ச இசையைக் கொடுத்து ரசிக்க வைத்துவிட்டார்.

தமிழ் சினிமாவில் இவரின் ஒளிப்பதிவு என்றாலே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அந்த ரசிகர்கள் எந்த விதத்திலும் ஏமாறவிடாதபடி, நச்சென்று ஒரு ஒளிப்பதிவைக் கொடுத்து ரசிக்க வைத்துவிட்டார் தேனி ஈஸ்வர். கிடைக்கும் வெளிச்சத்தில் நமக்குள் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த முடியுமோ அப்படியொரு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டார் ஒளிப்பதிவாளர். சின்ன சின்ன இடங்களில் கூட, தனது தனித்திறமையை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார் தேனி ஈஸ்வர்.

திருட்டு வேட்டை மட்டுமல்லாமல், விவசாயிகள் பட்ட துன்பம், அவர்களின் முக்கியத்துவம், வங்கிகள் விவசாயிகளின் இரத்தத்தை குடிக்கும் அட்டைப் பூச்சிகள் என்பதையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியதற்காக இயக்குனர் விக்னேஷ் ராஜாவை வெகுவாக பாராட்டலாம்…

எந்த எதிர்பார்ப்பும் இன்றி சென்றால், இந்த கரசாமி எந்த விதத்திலும் உங்களை ஏமாற்றமாட்டார்.

மொத்தத்தில்,

கர – தரம்..

Facebook Comments

Related Articles

Back to top button