Spotlightவிமர்சனங்கள்

இட்லி கடை – விமர்சனம் 4/5

தனுஷ் எழுதி இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் தான் இந்த “இட்லி கடை”. பவர் பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மூன்று படங்களின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து நான்காவதாக இட்லி கடை படத்தை இயக்கியிருக்கிறார் தனுஷ்.

இப்படத்தில், தனுஷ், ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, பார்த்திபன், சமுத்திரக்கனி, இளவரசு, சத்யராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

கிரண் கெளஷிக் ஒளிப்பதிவில் ஜி வி பிரகாஷ்குமார் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தனுஷ் தயாரித்துள்ளனர்.

ஜாக்கி படத்தின் கலை இயக்குனராகவும் ஜி கே பிரசன்னா படத்தின் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்திருக்கின்றனர்.

தேனி அருகே ஒரு அழகிய கிராமத்தில் கதை ஆரம்பிக்கிறது. ராஜ்கிரண் மற்றும் கீதா கைலாசம் இவர்களின் மகனாக வருகிறார் தனுஷ்(சிறுவயது கதாபாத்திரம்). அந்த ஊரில் சிவநேசன் என்ற பெயரில் ஒரு சிறிய இட்லி கடை ஒன்றை நடத்தி தனது வாழ்க்கையை பார்த்து வருகிறார் ராஜ்கிரண்.

அந்த கடையில் வரும் வருமானத்தை விட, அங்கு சாப்பிடுபவர்களின் மகிழ்ச்சியை மட்டுமே பார்த்து ரசிக்கக் கூடியவர் ராஜ்கிரண். ஆட்டு உரலில் மாவரைத்து, அதை சமைத்து அதனை பரிமாறுவதை ஒரு காதலாக செய்து வருகிறார் ராஜ்கிரண்.

தனது அப்பாவின் இந்த காதலை ரசித்துக் கொண்டே வளர்கிறார் தனுஷ். அந்த ஊருக்கு ஒரு அடையாளமாக திகழ்கிறது அந்த இட்லி கடை. கேட்ரிங் படிப்பை முடித்து, சென்னைக்குச் சென்று, அங்கிருந்து பாங்காங் செல்கிறார்.

அங்கு பெரும் முதலாளியாக வரும் சத்யராஜிடம் பணிபுரிகிறார் தனுஷ். சத்யராஜுக்கு அருண் விஜய் மற்றும் ஷாலினி பாண்டே இருவரும் மகன் மற்றும் மகளாக வருகின்றனர். சத்யராஜ் எப்போதும் தனுஷை கம்பேர் செய்து தன்னை பேசுவதால் தனுஷைக் கண்டால் ஆகாமல் போய்விடுகிறது அருண் விஜய்க்கு.

பெரும் கோடீஸ்வரரான சத்யராஜின் மகளான ஷாலினி பாண்டே தனுஷை காதலிக்கிறார். இவரின் காதலுக்கு சத்யராஜ் சம்மதம் தெரிவிக்க, இருவருக்கும் இன்னும் பத்து நாட்களில் திருமணம் நடைபெறவுள்ளது.

தனது கிராமத்து வாழ்க்கையையும், தனது அம்மா, அப்பாவையும், தனது இட்லி கடையையும் அவ்வப்போது நினைத்து ஃபீல் செய்து கொண்டிருக்கிறார் தனுஷ்.

இந்நிலையில், தனுஷின் அப்பாவான ராஜ்கிரண் இறந்துவிட்டதாக தனுஷுக்கு செய்தி வர, திருமண வேலைகளை விட்டுவிட்டு தனது கிராமத்திற்கு வந்துவிடுகிறார் தனுஷ்.

ராஜ்கிரணின் இறுதி சடங்கு வேலைகளை செய்து முடித்த தனுஷ், அன்றிரவு அப்பா ராஜ்கிரண் இல்லாமல் அம்மா கீதா கைலாசம் புலம்புவதை நினைத்து கண்கலங்குகிறார்.

அடுத்தநாள் கீதா கைலாசமும் இறந்து விடுகிறார். இதனால், தனிமரமாக நிற்கிறார் தனுஷ். பக்கத்துவீட்டுப் பெண்ணும் தனது பள்ளி தோழியுமான நித்யாமேனன் தான் தனுஷிற்கு அனைத்து வேலைகளையும் செய்கிறார்.

இந்நிலையில், திருமணத்தின் தேதி நெருங்க கிளம்பி வருமாறு ஷாலினி பாண்டே, தனுஷை அழைக்க, தனது அப்பாவின் நினைவுகளோடு, இட்லி கடையை பார்த்துக் கொண்டு தனது கிராமத்திலேயே தங்க இருப்பதாக கூறிவிடுகிறார் தனுஷ்.

இதனால், தனது தங்கையை ஏமாற்றிய தனுஷை அழிப்பதற்காக தனுஷின் கிராமத்திற்கு வருகிறார் அருண் விஜய். அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், தனக்கே உரித்தான உடல் மொழியில் அசத்தி விடுவார் தனுஷ். அதுவும் அவர் இயக்கும் படம் என்றால் சும்மா விடுவாரா. ? முருகன் என்ற கதாபாத்திரத்தில் அக்கதாபாத்திரமாகவே மாறி அதகளம் செய்திருக்கிறார் தனுஷ்.

கல்லூரி வாழ்க்கை, சிட்டி வாழ்க்கை, கிராமத்து வாழ்க்கை என மூன்று அவதாரமாக படத்தில் தோன்றி அனைவரையும் வியப்படைய வைத்திருக்கிறார்.

தாய் தந்தையை விட்டு பிரிந்து அவர் வாடும் காட்சியில் அவர் பேசும் வசனங்கள் கண்களில் ஈரத்தை எட்டிப் பார்க்க வைத்துவிடுகிறது. ஆக்‌ஷனிலும் அதிரடியாக விளையாடியிருக்கிறார்.

மண் சார்ந்த் நாயகியாக தனது நடிப்பின் திறமையை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார் நித்யா மேனன். தனுஷ் – நித்யா மேனன் இருவருக்குமான கெமிஸ்ட்ரி படத்தில் நன்றாகவே வொர்க் அவுட் ஆகியுள்ளது.

சின்ன சின்ன க்யூட் ரியாக்‌ஷனில் நம் மனதை நன்றாகவே கவர்ந்து வென்றெடுத்திருக்கிறார் நித்யா மேனன். வில்லனாக என்று சொல்ல முடியாது, கதையின் போக்கிற்கு ஏற்றவாறு தனது கதாபாத்திரத்தை நன்றாகவே நகர்த்திக் கொண்டு சென்றிருக்கிறார் அருண் விஜய்.,.

நாயகனாக நடித்து வரும் அருண் விஜய், இப்படத்தில் இப்படியான கேரக்டர் ஏற்று நடித்ததற்காக அவரை பெருமளவில் பாராட்டியே ஆக வேண்டும். ஒரு சில இடங்களில் தனது கதாபாத்திரத்தை அளவாகவே கொடுத்து அசத்தியிருக்கிறார் அருண் விஜய்.

சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் வலுவான கதாபாத்திரமாக இருக்கிறது ராஜ்கிரணின் கதாபாத்திரம். அவரை சுற்றியே கதை நகர்வதால், படம் முழுக்க அவர் இருப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது.

சத்யராஜ், பார்த்திபன், சமுத்திரக்கனி உள்ளிட்ட நடிகர்களின் கதாபாத்திரங்களுக்கு இவர்கள் தான் வேண்டும் என்றில்லை. சரியாக பயன்படுத்தவில்லையோ என்று உணர வைத்துவிட்டார்கள்.

ஜி வி பிரகாஷ்குமார் படத்தினை ஒரு தளம் தூக்கி நிறுத்தியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். தனுஷுக்கு ஜி வி பிரகாஷ்குமாருக்கும் அப்படி என்ன தான் கனெக்டோ… இவர் படம் என்றாலே ஒரு அதிரடி கொடுத்துவிடுகிறார் ஜி வி.

பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டுமே படத்திற்கு மிகப்பெரும் பலமாக இருக்கிறது.

கிரண் கெளஷிக் ஒளிப்பதிவு கனக்கச்சிதம். இரவு நேரக் காட்சி, அருண் விஜய் – தனுஷ் இருவருக்குமான சண்டைக் காட்சி என ஒளிப்பதிவில் கவனம் ஈர்த்திருக்கிறார் கிரண்.

இதற்கு முன் இயக்கிய படங்களைப் போலவே, இயக்கத்தில் தனது திறமையை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார் தனுஷ். படத்தின் ஆரம்பத்தில் கிராமத்து மண்வாசனையை நம்மை உணர வைத்து, கதாபாத்திரங்கள் அனைத்தையும் நம் இதயத்திற்குள் ஏற்றி, நம்மையும் அக்கிராமத்தில் பயணம் செய்ய வைத்துவிட்டார் தனுஷ். முதல் பாதியின் ஒரு இடத்தில் ரசிகர்கள் தங்களை மறந்து கண்களில் ஈரத்தை வரவைக்கும் ஒரு காட்சியை படத்தில் வைத்திருக்கிறார் இயக்குனர்.

தாய், தந்தையை கைவிட்டுவிடக் கூடாது, எங்கு சென்றாலும் நாம் பிறந்த மண்ணை நாம் விட்டுவிடக் கூடாது என்ற கூற்றை முன்னிறுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தினை நிச்சயம் அனைவரும் கொண்டாடுவார்கள். முதல் பாதியில் கொடுத்த ஒரு ஈர்ப்பை சற்று இரண்டாம் பாதியிலும் கொடுத்திருந்திருக்கலாம்.

பெரிதான அடிதடியோ, ஆபாசமோ என முகம் சுழிக்கும்படியான காட்சிகள் எதுவுமின்றி குடும்பத்தோடு கண்டுகளிக்கும்படியான ஒரு படைப்பைப் படைத்திருக்கிறார் இயக்குனர் தனுஷ்.

இட்லி கடை – கடைக்குச் செல்லலாம்..

Facebook Comments

Related Articles

Back to top button