
எழுத்து & இயக்கம்: ரா கார்த்திக்
நடிகர்கள்: Priyanka Arul Mohan, Park Hye‑jin, No Ho‑jin, Rishikanth, Jang Jaehyeon
தயாரிப்பாளர்: ஸ்ரீநிதி சாகர்.
இசை: ஹேஷாம் அப்துல் வாஹாப்
ஒளிப்பதிவு: பிரசன்னா குமார்
படத்தொகுப்பு: ஆண்டனி
தமிழ்நாட்டில் எல்லையோர மலைப்பகுதி அது. செல்போனில் சிக்னல் இல்லாத, பச்சைப் பசேல் என்று இயற்கையே படுத்துறங்க எண்ணும் பசுமை நிறைந்த கிராமம் அது. இது தான் நமக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் என்று ஒளிப்பதிவாளர் தனது மாயாஜாலத்தை தனது கேமராவில் பதிவு செய்து விட்டார் போலும்..
அந்த கிராமத்தில் பெற்றோருக்கு ஒரே மகளாக பிறக்கிறார் ப்ரியங்கா அருள் மோகன். சிறுவயதிலிருந்தே கொரியாவிற்கு செல்ல வேண்டும் என்ற ஆசையை தனக்குள் வைத்துக் கொண்டே வளர்ந்து வருகிறார். கொரிய மக்கள் சாப்பிடும் பழக்கம், அவர்கள் பேசும் மொழி, என அனைத்தையும் கற்றுக் கொண்டு வருகிறார். அந்த கிராமத்தில் உள்ள பலருக்கும் தெரியும் ப்ரியங்காவின் உட்சபட்ச ஆசையே அதுதான் என்று.
அதேகிராமத்தைச் சேர்ந்த ரிஷிகாந்தை காதலித்து வருகிறார் ப்ரியங்கா. தனது தந்தை வாங்கிய கடனுக்காக கிடைத்த வேலையை செய்து கொண்டு அடுத்தகட்டத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார் ரிஷிகாந்த். இதனாலேயே ப்ரியங்காவை திருமணம் செய்ய தயங்கி நிற்கிறார் ரிஷிகாந்த்.

ஒருகட்டத்தில், இருவரின் காதல் கதை ப்ரியங்காவின் தந்தைக்கு தெரிய வர, கோபமடைந்து சென்று விடுகிறார். வேறு வழியின்றி ப்ரியங்காவை அழைத்துச் சென்னை வருகிறார் ரிஷிகாந்த். இருவரும் கொரியா சென்று வேலை பார்த்து நமது வாழ்க்கையை தொடங்கலாம் என்று ப்ரியங்காவிடம் கூறுகிறார் ரிஷிகாந்த்.
அப்போது நடக்கும் ஒரு சம்பவத்தால், ப்ரியங்கா மட்டுமே கொரியா செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. யாரையுமே தெரியாத ஒரு நாட்டிற்குள் சென்று அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருக்கிறார் ப்ரியங்கா. கண்ணில் படும் சிலரை கண்டு, அவர்களிடம் தனது அன்பை மட்டுமே விதைத்து வருகிறார். கொடுத்த அன்பு அவருக்கு எப்படியாக திரும்பி வந்தது.? மீண்டும் இந்தியா வந்தாரா.?? மீண்டும் ப்ரியங்காவை அப்பா ஏற்றுக் கொண்டாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

இப்படியொரு கதாபாத்திரத்தில் ப்ரியங்கா மோகன் இதுவரை நடித்ததில்லை என்று தான் கூற வேண்டும். அப்படியொரு அழகான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் ப்ரியங்கா. அவரின் இந்த கதை தேர்வுக்காகவே அவரை நிச்சயம் பாராட்ட வேண்டும். இந்த கதையை எப்படி ப்ரியங்காவிடம் கூறி ஓகே வாங்கினார் இயக்குனர் என்று தான் தெரியவில்லை. அப்படியொரு அழகான கவிதையாக இந்த படத்தின் கதை நகர்ந்து கொண்டிருந்தது.
இதுவரை கண்டிராத ஒரு அழகோவியமாய் ப்ரியங்கா அருள் மோகன் இப்படத்தில் காட்சிதந்திருந்தார். அதீத மேக்கப் எதுவுமின்றி இயற்கையான ஒரு அழகோடு, படம் முழுவதும் வந்து அனைவரையும் கவர்ந்திருந்தார். சின்ன சின்ன ரியாக்ஷன்களில் குழந்தைத்தனத்தை கொடுத்ததோடு மட்டுமல்லாமல், நடிப்பில் ஒரு முதிர்ச்சியான(matured) நடிப்பைக் கொடுத்து அசத்தியிருந்தார் ப்ரியங்கா.
பல படங்களில் ஒரு சில இடங்களில் மட்டுமே எட்டிப் பார்த்த அம்மாதிரியான நடிப்பை, இப்படத்தில் முழுக்க முழுக்க கொண்டு வந்து நம்மை அதிகமாகவே ரசிக்க வைத்திருக்கிறார் ப்ரியங்கா. படம் முழுவதுமே இவர் மீது பயணப்படுவதால், காட்சிகள் ஒவ்வொன்றையும் கவனமாக கையாண்டிருக்கிறார்.
கத்தி, துப்பாக்கி, சண்டை, இரத்தம், வெறியாட்டம், என எந்தவொரு பேயாட்டமும் இல்லாமல், அன்பாலே கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். 96 பட இயக்குனர் பிரேம்குமாரின் ஒரு பாய்ச்சல் இந்த படத்தின் இயக்குனரிடத்தில் இருந்ததை பார்க்க முடிந்தது. நாடு விட்டு நாடு சென்றாலும் அன்பு ஒன்று இருந்தாலே போதுமானது அனைவரையும் கவர்ந்து விட முடியும் என்பதற்கு ஒரு சான்றாக இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ரா கார்த்திக்.

நித்தம் ஒரு வானம் என்ற படத்தில் முக்கோண காதல் கதையை வித்தியாசமான முறையில் படமாக்கி தமிழ் ரசிகர்களை தன் வசப்படுத்திய இயக்குனர் தான் இந்த ரா கார்த்திக். அந்த படத்தினைத் தொடர்ந்து இந்த படத்திலும் வித்தியாசமான ஒரு படைப்பைக் கொடுத்து, அனைவரையும் அன்பாலே வென்றிருக்கிறார்.
பூங்காற்றிலேயே உன் சுவாசத்தை என்ற பாடலை வாசிக்கும் போது நம்மை நாமே மெய் மறந்து பறந்து செல்ல வைத்துவிட்டனர். ஹேஷாம் அப்துல் வாஹாப் அவர்களின் இசை படத்திற்கு பெரும் உயிரோட்டமாக இருந்தது.
பிரசன்னா குமார் அவர்களின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம் என்றே கூறலாம். ஹீரோ மற்றும் ஹீரோயின் இருவரும் சந்தித்து Sorry & Thanks சொல்லும் காட்சியினை படமாக்கிய விதம் வேற லெவல் ஒளிப்பதிவு தான்… அப்போது இசைக்கப்பட்ட பின்னணி இசையும் நம்மை வேறு ஒரு உலகிற்கு அழைத்துச் சென்று விட்டது.
படத்தில் நடித்திருந்த பாட்டி, ரிஷிகாந்த், கொரிய நண்பர்கள், ரெஸ்டாரண்டில் வேலை பார்த்த பெண், ரூம் மேட், கொரியா போலீஸ், ப்ரியங்காவின் அப்பா, யானை, ப்ரியங்காவின் வீட்டில் வேலை பார்க்கும் ஜான்சன், பாட்டியின் மகன் மற்றும் மருமகள் என அனைவருமே படத்தின் கதாபாத்திரங்களாகவே நம் மனதிற்கு நீங்கா இடத்தை பிடித்துவிடுகின்றனர்.
பாட்டியின் மகன் அவரிடம் சண்டையிடும் போதாக இருக்கட்டும், பணத்தைக் கொண்டு வந்து தனது நண்பர்களிடம் ப்ரியங்கா கொடுக்கும் தருணமாக இருக்கட்டும் என பல இடங்களில் நம் மனதை இலகுவாக்கும் காட்சிகள் உள்ளன.
மொத்தத்தில்,
மேட் இன் கொரியா – அன்பால் நிறைந்தது இவ்வுலகு…





