
சமகால அரசியலை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘மக்கள் தலைவா’, அரசியல் அதிகாரம், பண பலம் மற்றும் மக்கள் மனநிலையை பேச முயலும் படமாக உருவாகியுள்ளது. இயக்குநர் ராம்தேவ், ஒரு சாதாரண கிராமத்து மனிதன் அரசியலின் உச்சிக்கு எப்படி கொண்டு செல்லப்படுகிறார் என்பதையும், அதன் பின்னால் இருக்கும் மறைமுக நோக்கங்களையும் திரைக்கதையாக வடிவமைத்துள்ளார்.
கதையின் தொடக்கத்தில் வெளிநாட்டில் மிகப்பெரிய தொழிலதிபராக வாழும் ராதாரவி இந்தியா திரும்புகிறார். தனது சொந்த கிராமத்துக்குச் சென்று பழைய நண்பரை சந்திக்கும் அவர், ரவிமரியா குறித்து விசாரிக்கிறார். அதன்பின் கதை ரவிமரியாவை நோக்கி நகர்கிறது.
கிராமத்தில் மதுபானம் குடிப்பவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவது, கல்குவாரிகளுக்கு எதிராக குரல் கொடுப்பது, தொடர்ந்து ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் செயல்களில் ஈடுபடுவது என தமிழ்குடிமகனாக வாழும் ரவிமரியா, மக்களிடையே தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியிருக்கிறார்.
எந்த அரசியல் கட்சியிலும் சேராமல் இருக்கும் ரவிமரியாவை சந்திக்கும் ராதாரவி, அவரை அரசியலுக்குள் இழுக்கிறார். புதிய கட்சியை தொடங்கச் சொல்லி, அதற்கான அனைத்து செலவுகளையும் தானே ஏற்றுக்கொள்வதாக உறுதியளிக்கிறார். தேர்தல் நெருங்கும் நிலையில், ரவிமரியாவை வெற்றி பெறச் செய்ய கோடிக்கணக்கான பணத்தை செலவிடுகிறார்.
ஆனால் ராதாரவி ஏன் இதனை செய்கிறார்? அவரது உண்மையான நோக்கம் என்ன? ரவிமரியாவை அரசியலின் உச்சிக்கு கொண்டு செல்லும் பின்னணியில் என்ன மர்மம் இருக்கிறது? என்ற கேள்விகளுக்கான பதில்களை இரண்டாம் பாதி வெளிப்படுத்துகிறது.
கதாநாயகனாக நடித்துள்ள ரவிமரியா, படத்தின் மிகப்பெரிய பலமாக திகழ்கிறார். நீண்ட அரசியல் வசனங்களையும் எளிதாக கையாளும் அவர், கதாபாத்திரத்தின் நம்பகத்தன்மையை திரையில் உயிர்ப்பித்திருக்கிறார். ஒரு அரசியல் தலைவருக்குத் தேவையான உடல்மொழி மற்றும் பேச்சுத் திறனை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.
ராதாரவி, தனது அனுபவம் மிக்க நடிப்பால் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். அவரது கதாபாத்திரம் கதையின் முக்கிய திருப்பங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது. அதேபோல் பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத், கஞ்சா கருப்பு, பேரரசு உள்ளிட்டோர் தங்களுக்கான பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளனர்.
துளசிராமனின் இசையும், கார்த்திக் எஸ். நாயரின் ஒளிப்பதிவும் படத்தின் உணர்வுகளை துல்லியமாக பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்க உதவியிருக்கின்றன. குறிப்பாக அரசியல் சூழல்களை காட்சிப்படுத்திய விதம் கவனிக்கத்தக்கதாக உள்ளது.
இயக்குநர் ராம்தேவ், தற்போதைய அரசியல் சூழ்நிலைகளை தைரியமாக அணுகியிருக்கிறார். அரசியலின் மறுபக்கத்தையும், அதிகார விளையாட்டுகளையும் நேரடியாக பேச முயன்றிருப்பது பாராட்டுக்குரியது. இருப்பினும், படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் பலருக்கும் அதிர்ச்சியையும் நெருடலையும் ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக அரசியல் சார்ந்த எதிர்பார்ப்புகளுடன் படத்தை அணுகும் ரசிகர்களுக்கு அந்த முடிவு கலவையான உணர்வை தர வாய்ப்புள்ளது.
இருப்பினும், ஒரு அரசியல் நாடகமாகவும், சிந்திக்க வைக்கும் சமூகப் படைப்பாகவும் ‘மக்கள் தலைவா’ தனது நோக்கத்தை நிறைவேற்றுகிறது. சில குறைகள் இருந்தாலும், தற்போதைய அரசியல் சூழலை வேறொரு கோணத்தில் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு முறை பார்க்கத்தக்க அனுபவத்தை வழங்குகிறது.
அரசியல் பின்னணியில் நகரும் சுவாரஸ்யமான திரைக்கதை, வலுவான நடிப்புகள், எதிர்பாராத கிளைமாக்ஸ் – ‘மக்கள் தலைவா’ ஒரு முறை பார்க்கக்கூடிய அரசியல் நாடகம்.





