Spotlightவிமர்சனங்கள்

பாலன் – தி பாய் விமர்சனம் 3.5/5

இயக்கம்: சிதம்பரம்
எழுத்து: ஜித்து மாதவன்
தயாரிப்பாளர்கள்: வெங்கட் கே. நாராயணா (K.V.N. புரொடக்ஷன்ஸ்) & ஷைலஜா தேசாய் ஃபென் (தெஸ்பியன் ஃபிலிம்ஸ்)
ஒளிப்பதிவு: ஷைஜூ காலித்
இசை: சுஷின் ஷியாம்
படத்தொகுப்பு: விவேக் ஹர்ஷன்
கலை இயக்கம்: அஜயன் சாலிசேரி

சில திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கை மட்டுமல்லாமல், மனதை உலுக்கும் உணர்வுகளையும் பார்வையாளர்களுக்கு கடத்துகின்றன. அந்த வகையில், இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ள “பாலன் – தி பாய்”, தாய்மை, குற்றவுணர்வு, உயிர் பிழைப்புக்கான போராட்டம் மற்றும் மனித உறவுகளின் ஆழத்தை பேசும் உணர்வுப்பூர்வமான திரைப்படமாக உருவாகியுள்ளது.

தனது கணவனை கொலை செய்த குற்றத்திற்காக சிறைவாசம் செல்கிறார் ஃபர்ஸானா. சிறையிலேயே ஒரு மகனை பெற்றெடுக்கிறார். மகனும் சிறையிலேயே வளர்கிறார். 5 வருடங்களுக்குப் பிறகு, பாலியல் தொழில் செய்து ரெளடியான ஒருவரின் உதவியோடு சிறையிலிருந்து வெளியே வருகிறார் ஃபர்ஸானா.

தனது ஐந்து வயது மகனை அழைத்துக் கொண்டு, தனது அடையாளத்தையும் அழித்துக் கொண்டு பல இடங்களுக்குச் செல்கிறார். கூலி வேலை செய்து தனது மகனை கவனித்துக் கொள்கிறார். வேலை பார்க்கும் இடத்தில் தங்களது உண்மையான அடையாளத்தை மறைத்துவிடுகிறார். யாருக்காவது சந்தேகம் வந்தால், உடனே அங்கிருந்து கிளம்பிவிடுகிறார்.

இப்படியாக பல இடங்களில் வேலை பார்த்து வருகிறார் ஃபர்ஸானா. இந்நிலையில், பேருந்து நிலையத்தில் மன நலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் அடையாளத்தை பயன்படுத்தி, வயதான பாட்டி ஒருவரை பார்த்துக் கொள்ளும் கேர் டேக்கர் பணிக்காக அங்கு செல்கிறார். பெரிய வீட்டில், பாட்டி ஒருவர் மட்டுமே இருப்பதால், தனது மகனோடு அங்கேயே செட்டிலாக நினைக்கிறார்.

இந்நிலையில், சிறையில் இருந்து தன்னை வெளியே கொண்டு வந்த பாலியல் ரெளடி ஃபர்ஸானாவை வீட்டிற்கு வந்து கண்டுபிடித்து விட,
பாட்டியின் மகனும் வெளிநாட்டில் இருந்து வீட்டிற்கு வர, பரபரப்பின் உச்சத்திற்கு கதை சென்று இடைவேளை விடப்படுகிறது… அதன் பிறகு ஃபர்ஸானாவிற்கு என்ன நடந்தது.? அம்மா அழைக்க வருவார் என்று பஸ் ஸ்டாப்பிலேயெ காத்திருந்த சிறுவனின் கதை என்னவானது.?? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் மிகப்பெரும் ட்விஸ்ட் காட்சிகளை வைத்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் சிதம்பரம்..

ஃபர்ஸானா பலத்திங்கல், தாயாகவும், ஓடிக்கொண்டே வாழும் பெண்ணாகவும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பயம், பதற்றம், அன்பு, வேதனை என பல உணர்வுகளை மிக இயல்பாக வெளிப்படுத்தி கதையின் உணர்ச்சி மையமாக திகழ்கிறார். பல இடங்களில் இவரது கண்கள் நம் கண்களிலிருந்து ஈரத்தை எட்டிப் பார்க்க வைக்கும் நடிப்பைக் கொடுத்திருக்கிறது. கண்களே பல இடங்களில் ஆகப்பெரும் நடிப்பைக் கொடுத்திருக்கிறது.

இளம் பாலனாக நடித்துள்ள ஆதிஷேஷன் K.R., தனது அப்பாவித்தனமான நடிப்பால் மனதை கவர்கிறார். குறிப்பாக தாயை நம்பி காத்திருக்கும் காட்சிகள் பார்வையாளர்களின் மனதை தொடுகின்றன.

வயது வந்த பாலனாக வரும் சினானும், ஜீன் பால் லாலும் தங்களது கதாபாத்திரங்களுக்கு தேவையான பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளனர். மேலும், படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்த டோவினோ தாமஸ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். கதையின் ஓட்டத்திற்கு நன்றாகவே கைகொடுத்தது.

ஷைஜூ காலித்தின் ஒளிப்பதிவு, கதையின் இருண்ட உணர்வுகளையும், கதாபாத்திரங்களின் தனிமையையும் அழகாக பதிவு செய்துள்ளது.

சுஷின் ஷியாமின் இசை மற்றும் பின்னணி இசை படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. உணர்ச்சி மிக்க காட்சிகளிலும், பதற்றமான தருணங்களிலும் இசை கதையின் தாக்கத்தை பல மடங்கு உயர்த்துகிறது. விவேக் ஹர்ஷனின் படத்தொகுப்பு படத்தின் ஓட்டத்தை சீராக வைத்திருக்கிறது.

ஒரு தாயின் உயிர் பிழைப்புக்கான போராட்டத்தை வெறும் மெலோடிராமாவாக இல்லாமல், சஸ்பென்ஸ் மற்றும் உணர்வுகளுடன் கலந்த மனிதநேய கதையாக சொல்லியிருக்கிறார். முதல் பாதி கதாபாத்திரங்களின் வாழ்க்கைப் போராட்டங்களை அமைதியாக பதிவு செய்ய, இரண்டாம் பாதி எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் உணர்ச்சி மிகுந்த தருணங்களால் பார்வையாளர்களை ஈர்க்கிறது. குறிப்பாக க்ளைமாக்ஸ் நோக்கி நகரும் விதம் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் வைக்கப்பட்ட ட்விஸ்ட் காட்சி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி விட்டது.

“பாலன் – தி பாய்” என்பது ஒரு குற்றவாளி தாயின் கதை அல்ல; தனது மகனுக்காக உலகத்தையே எதிர்த்து நிற்கும் ஒரு பெண்ணின் கதை.

மொத்தத்தில், “பாலன் – தி பாய்” உணர்வுகளும், திருப்பங்களும் நிறைந்த ஒரு தரமான மனிதநேய நாடகம். மனதை தொடும் திரைப்படங்களை விரும்புபவர்கள் தவறவிடக்கூடாத படைப்பு.

Facebook Comments

Related Articles

Back to top button