
ஒரு மனிதனின் உடலில் வேறொருவரின் உறுப்பு பொருத்தப்பட்ட பிறகு, அந்த உறுப்பு அவனது கட்டுப்பாட்டை மீறி செயல்பட ஆரம்பித்தால் என்ன நடக்கும்? அதுவும் அந்த கை ஒருவரை கொலை செய்யத் துடித்தால்? இப்படியொரு வித்தியாசமான ஐடியாவை ஆக்ஷன், மிஸ்டரி மற்றும் ரிவெஞ்ச் பின்னணியில் சொல்ல முயன்றிருக்கும் படம்தான் ‘I Am Game’.
நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ள இப்படத்தில் துல்கர் சல்மான் நாயகனாக நடித்துள்ளார். கயாடு லோஹர், மிஷ்கின், ஆண்டனி வர்கீஸ், சம்யுக்தா விஸ்வநாதன், வினய் ஃபோர்ட், கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து படத்தை தயாரித்துள்ளனர்.
ஒரு தவறான முடிவு… மொத்த வாழ்க்கையும் மாறுகிறது!
தனது தந்தையின் உதவியுடன் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார் டான் ஜான் (துல்கர் சல்மான்). ஆனால், தொழிலில் ஏற்படும் நஷ்டத்தால் கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்.
கடன் கொடுத்தவர்களின் நெருக்கடி அதிகரிக்க, தனது பெற்றோரிடம் சண்டையிட்டு பணத்தை வாங்குகிறார். அந்தப் பணத்தைக் கொண்டு கடனை அடைத்து பிரச்சனையிலிருந்து வெளியே வருவதற்கு பதிலாக, கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுகிறார்.
ஆரம்பத்தில் அவருக்கு சாதகமாக செல்லும் சூதாட்டம், இறுதியில் மொத்த பணத்தையும் இழக்க வைக்கிறது. இதனால் ஆத்திரமடையும் துல்கர், சூதாட்ட கிளப்பில் தகராறு செய்து பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிக்கிறார்.
அவரை கிளப்பைச் சேர்ந்தவர்கள் விரட்டிச் செல்லும்போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்குகிறார் துல்கர். அந்த விபத்தில் அவரது இடது கை கடுமையாக சேதமடைகிறது.
அதே நேரத்தில் வேறொரு விபத்தில் சிக்கிய இளைஞரின் கை துல்கருக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படுகிறது.
இதுவரை ஒரு விதமாக பயணித்த துல்கரின் வாழ்க்கை, அந்தக் கை பொருத்தப்பட்ட பிறகு முற்றிலுமாக மாறுகிறது.

புதிதாக பொருத்தப்பட்ட கை கொஞ்சம் கொஞ்சமாக துல்கரின் கட்டுப்பாட்டை மீறி தன்னிச்சையாக செயல்பட ஆரம்பிக்கிறது.
அவர் நினைப்பதை கை செய்வதில்லை; மாறாக அந்த கை என்ன செய்ய நினைக்கிறதோ, அதை துல்கர் எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகிறது.
ஒரு கட்டத்தில் மிகப்பெரிய தொழிலதிபரான டேவிட் ஆபிரகாமை (மிஷ்கின்) கொலை செய்யவும் அந்த கை முயற்சிக்கிறது.
அப்போதுதான் படத்தின் பிரதான மர்மம் ஆரம்பமாகிறது.
துல்கருக்கு பொருத்தப்பட்ட கை யாருடையது? அந்த கைக்கும் மிஷ்கினுக்கும் என்ன தொடர்பு? அவரை கொலை செய்ய அது ஏன் துடிக்கிறது? அந்த கையின் பின்னால் இருக்கும் கடந்தகாலம் என்ன? என்பதற்கான விடைகளை ரிவெஞ்ச் பின்னணியில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் நஹாஸ் ஹிதாயத்.
டான் ஜான் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் தனது வழக்கமான ஸ்டைலான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
பொறுப்பற்ற வாழ்க்கையை வாழும் இளைஞராக ஆரம்பித்து, தனது கட்டுப்பாட்டிலேயே இல்லாத ஒரு கையுடன் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் மனிதராக மாறும் இடங்களில் கவனம் ஈர்க்கிறார்.
குறிப்பாக கை தன்னிச்சையாக செயல்படும்போது அதை கட்டுப்படுத்த முடியாமல் அவர் தவிக்கும் காட்சிகளில் உடல்மொழியால் கதாபாத்திரத்தை நம்ப வைக்க முயற்சி செய்திருக்கிறார்.

ஆக்ஷன் காட்சிகளிலும் துல்கரின் ஸ்கிரீன் பிரசென்ஸ் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.
மிஷ்கின் முதல் கயாடு லோஹர் வரை…
டேவிட் ஆபிரகாம் கதாபாத்திரத்தில் மிஷ்கின் நடித்துள்ளார். தனக்கே உரிய உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்புடன் வழக்கமான பாணியில் கதாபாத்திரத்தை கையாண்டிருக்கிறார்.
கயாடு லோஹர் ஈஷாவாக தனது கதாபாத்திரத்திற்கு தேவையான பங்களிப்பை கொடுத்துள்ளார். அவருடைய ஸ்கிரீன் பிரசென்ஸும் கவனம் பெறுகிறது.
ஆண்டனி வர்கீஸ், சம்யுக்தா விஸ்வநாதன், வினய் ஃபோர்ட், கதிர் உள்ளிட்டோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை நிறைவாக செய்துள்ளனர்.
இத்தனை நடிகர்கள் இருப்பதால் performance ரீதியாக படம் குறை வைக்கவில்லை. ஆனால் அவர்களது கதாபாத்திரங்களை திரைக்கதை இன்னும் அழுத்தமாக பயன்படுத்தியிருக்கலாம் என்ற எண்ணமும் சில இடங்களில் ஏற்படுகிறது.
வேறொருவரின் கை பொருத்தப்பட்ட பிறகு அந்த கை தன்னிச்சையாக செயல்பட்டு பழிவாங்க முயற்சிப்பது என்பது படத்தின் சுவாரஸ்யமான அடிப்படை ஐடியா.
இந்த ஐடியாவை மையமாக வைத்து முதல் பகுதியில் மர்மத்தை உருவாக்கியிருப்பது படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக அந்த கை யாருடையது? மிஷ்கினை மட்டும் ஏன் குறிவைக்கிறது? என்ற கேள்விகள் கதையை முன்னோக்கி நகர்த்துகின்றன.
ஆனால் அந்த மர்மத்திற்குப் பின்னால் இருக்கும் காரணங்கள் வெளிவந்து படம் முழுமையான ரிவெஞ்ச் கதையாக மாறும்போது, திரைக்கதையில் இன்னும் அதிகமான அழுத்தம் தேவைப்படுகிறது.
பழிவாங்குவதற்கான காரணமும் அதற்கான உணர்வுப்பூர்வமான பின்னணியும் இன்னும் வலுவாக எழுதப்பட்டிருந்தால், கிளைமாக்ஸை நோக்கிய பயணம் பார்வையாளர்களுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.
கத்திரிக்கு இன்னும் வேலை கொடுத்திருக்கலாம்!
படத்தின் முக்கியமான குறைகளில் ஒன்று அதன் நீளம்.
கதைக்கு தேவையானதைவிட சில காட்சிகள் நீளமாக பயணிப்பதால் ஆங்காங்கே வேகம் குறைகிறது. குறிப்பாக மையக்கதை என்ன என்பது பார்வையாளர்களுக்கு புரிந்த பிறகும் சில காட்சிகள் நீளுவது அயர்ச்சியை ஏற்படுத்துகிறது.
சாமன் சாக்கோவின் படத்தொகுப்பில் இன்னும் கொஞ்சம் கத்திரியை பயன்படுத்தியிருந்தால் படம் கிரிஸ்ப்பாக இருந்திருக்கலாம்.
சில காட்சிகளை தாராளமாக குறைத்து, ரிவெஞ்ச் பகுதிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருந்தால் ‘I Am Game’ இன்னும் விறுவிறுப்பான அனுபவமாக மாறியிருக்கும்.
ஜேக்ஸ் பிஜாய் இசை – ஜிம்ஷி காலித் ஒளிப்பதிவு
டெக்னிக்கல் விஷயங்களில் படத்திற்கு பெரிய பலமாக இருப்பது இசையும் ஒளிப்பதிவும்.
ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை ஆக்ஷன் மற்றும் மர்ம காட்சிகளுக்கு தேவையான வேகத்தை கொடுக்கிறது. குறிப்பாக சில காட்சிகளில் திரைக்கதையை விட பின்னணி இசை அதிகமான பரபரப்பை உருவாக்குகிறது.
ஜிம்ஷி காலித்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு மற்றொரு பலம். ஆக்ஷன் காட்சிகள் மற்றும் கதையின் டார்க் சூழலை விஷுவலாக சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்.
படத்தின் அடிப்படை கான்செப்ட் நிச்சயம் கவனம் ஈர்க்கக்கூடியது.
தனது கட்டுப்பாட்டை மீறி செயல்படும் ஒரு கை, அந்த கைக்குள் புதைந்திருக்கும் கடந்தகாலம், அதன் மூலம் நடைபெறும் பழிவாங்கல் என ஒரு விறுவிறுப்பான ஆக்ஷன் த்ரில்லருக்கு தேவையான விஷயங்கள் கதையில் இருக்கின்றன.
ஆனால் அந்த ஐடியாவுக்கு ஏற்ற அளவுக்கு திரைக்கதை தொடர்ந்து விறுவிறுப்பை தக்கவைத்துக் கொள்ளவில்லை.
குறிப்பாக ரிவெஞ்ச் கதையின் எமோஷனல் கனெக்டை இன்னும் வலுவாக உருவாக்கியிருக்கலாம். படத்தின் நீளத்தையும் குறைத்திருந்தால் கதையின் தாக்கம் அதிகரித்திருக்கும்.
துல்கர் சல்மானின் ஸ்கிரீன் பிரசென்ஸ், வித்தியாசமான அடிப்படை கதை, மிஷ்கின் உள்ளிட்ட நடிகர்களின் பங்களிப்பு, ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை மற்றும் ஜிம்ஷி காலித்தின் ஒளிப்பதிவு ஆகியவை ‘I Am Game’ படத்தின் முக்கிய பலங்கள்.
அதேநேரத்தில் நீளமான திரைக்கதை, சில தேவையற்ற காட்சிகள் மற்றும் இன்னும் வலுவாக அமைந்திருக்க வேண்டிய ரிவெஞ்ச் எமோஷன் ஆகியவை படத்தின் தாக்கத்தை குறைக்கின்றன.
கான்செப்ட்டில் இருக்கும் சுவாரஸ்யத்தை இன்னும் இறுக்கமான திரைக்கதையுடன் கொண்டு வந்திருந்தால், ‘I Am Game’ ஒரு விறுவிறுப்பான ரிவெஞ்ச் ஆக்ஷன் த்ரில்லராக இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.





