
விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரிப்பில், யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹைக்கூ’ (Haiku). ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் அக்டோபர் 23ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு படத்தின் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, இயக்குநர்கள் சசி, பொன்ராம், தயாரிப்பாளர் தனஞ்செயன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
விழாவில் பேசிய இயக்குநர் பொன்ராம், “மகளிர் கல்லூரியில் ஒரே ஒரு ஆண் மாணவன் என்ற வித்தியாசமான கதைக்களம் சுவாரஸ்யமாக உள்ளது. ஏகன் ஒரு கருப்பு வைரம். தமிழ் சினிமாவில் நிச்சயம் நல்ல இடத்தை அடைவார்” என்று பாராட்டினார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன், படத்தை ஏற்கெனவே பார்த்துவிட்டதாகவும், காதலை முற்றிலும் புதிய கோணத்தில் சொல்லும் கவிதையான படைப்பாக ‘ஹைக்கூ’ அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார். இயக்குநர் சசியும் இரண்டு விதமான காதலை நுணுக்கமாகக் கையாளும் படமாக இது இருக்கும் என்று பாராட்டினார்.
இசையமைப்பாளர் சித்துகுமார் பேசுகையில், “ஹைக்கூ என்னுடைய 15ஆவது திரைப்படம். இப்படத்தின் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. ஏகன் தமிழ் சினிமாவில் பெரிய இடத்தை அடைவார்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
தயாரிப்பாளர் டி. அருளானந்து, விஷன் சினிமா ஹவுஸின் மூன்றாவது தயாரிப்பு ‘ஹைக்கூ’ என்றும், நடிகர் ஏகனின் 18 ஆண்டுகால உழைப்புக்கு இப்படம் நல்ல அங்கீகாரமாக அமையும் என்றும் தெரிவித்தார். மேலும், தங்களது அடுத்த ஐந்து படங்களுக்கும் சித்துகுமார் இசையமைப்பார் என அறிவித்தார்.
நடிகர் ஏகன், இயக்குநர் யுவராஜ் சின்னசாமி, நடிகைகள் ஃபெமினா ஜார்ஜ், ஸ்ரீதேவி, நடிகர் அதிர்ச்சி அருண் உள்ளிட்டோர் படப்பிடிப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு ரசிகர்களின் ஆதரவைக் கேட்டுக்கொண்டனர்.
காதல், நகைச்சுவை மற்றும் இளமை கொண்டாட்டங்கள் நிறைந்த ‘ஹைக்கூ’ திரைப்படம் அக்டோபர் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.





