
GM Morgan Films தயாரிப்பில், ‘பன் பட்டர் ஜாம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஆர். ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘டிரோன்ஸ்’ (Drones). ஹாரர், ஃபேண்டஸி, சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் நகைச்சுவை அம்சங்கள் கலந்த இப்படம் அக்டோபர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் ஜி.எம். மோர்கன், நடிகைகள் சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், நடிகர்கள் டிராவிட் செல்வம், சினிமாவாலா சதீஷ், ஆர்.ஜே. தீபக் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகை சித்தி இத்னானி, “ரஜினிகாந்த் படத்துடன் எங்களுடைய சிறிய படம் வெளியாவதே எங்களுக்குப் பெருமை. சிறிய படங்களுக்கும் ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். மேலும், தயாரிப்பாளர் முதலீடு செய்த பணத்தைத் திரும்பப் பெறுவதுடன் லாபமும் ஈட்ட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் தெரிவித்தார்.
நடிகை அஞ்சலி நாயர் பேசுகையில், இப்படம் ஃபேண்டஸி, ஹாரர், சர்வைவல் அம்சங்களுடன் நிற அரசியல், நிறவெறி மற்றும் காதல் தொடர்பான கருத்துகளையும் பொழுதுபோக்குப் பாணியில் பேசுவதாகக் குறிப்பிட்டார்.
நடிகர் டிராவிட் செல்வம், வழக்கமான திரைப்படங்களிலிருந்து மாறுபட்ட கதைக்களத்துடன் ‘டிரோன்ஸ்’ உருவாகியுள்ளதாகத் தெரிவித்தார். தயாரிப்பாளர் ஜி.எம். மோர்கன், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கக்கூடிய படமாக இது இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
கனவுகளில் மட்டுமே நிகழக்கூடிய விசித்திரமான சம்பவங்கள் நிஜத்தில் நடந்தால் என்னவாகும் என்ற சுவாரஸ்யமான கற்பனையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ், ஆர்.ஜே. தீபக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஹரி எஸ்.ஆர். இசையமைத்துள்ளார். சதீஷ் சூர்யா படத்தொகுப்பையும், ஆர். கிஷோர் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர்.
ஃபைவ் ஸ்டார் செந்தில் வெளியிடும் ‘டிரோன்ஸ்’ திரைப்படம் அக்டோபர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.





