
கடந்த 14 ஆண்டுகளாக நண்பர்களாகவும், வாழ்க்கைத் துணைகளாகவும், பெற்றோர்களாகவும் இணைந்து பயணித்த தாங்கள், தற்போது பரஸ்பர புரிதலுடன் கணவன் – மனைவி உறவிலிருந்து பிரிந்து தனித்தனிப் பாதையில் பயணிக்க முடிவு செய்துள்ளதாக டெய்சி மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
இந்த முடிவு இருவரும் கலந்து ஆலோசித்து எடுத்ததாகவும், தங்களது குழந்தையின் மகிழ்ச்சி மற்றும் நலனுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், குழந்தைக்காக இருவரும் இணைந்து பெற்றோர்களாகத் தொடர்ந்து செயல்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆதவ் அர்ஜுனா மீது எப்போதும் மரியாதை இருக்கும் என்றும், அவரது எதிர்கால வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வெற்றி கிடைக்க வாழ்த்துவதாகவும் டெய்சி மார்ட்டின் கூறியுள்ளார்.
மேலும், இந்தத் தனிப்பட்ட முடிவை அனைவரும் புரிதலுடனும் மரியாதையுடனும் அணுக வேண்டும் என்றும், தங்களது தனிமைக்கு மதிப்பளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.





