Spotlightவிமர்சனங்கள்

Signal at 11:30 – விமர்சனம்

ஒரு நள்ளிரவுப் பயணம், காட்டுப்பகுதியில் கேட்கும் பெண்ணின் அலறல் சத்தம், அடுத்தடுத்து நிகழும் மர்மமான சம்பவங்கள் என ஆரம்பத்திலேயே ரசிகர்களைக் கதைக்குள் இழுத்துச் செல்கிறது ‘Signal at 11:30’.

Alar Studios சார்பில் மலர்விழி நடேசன் மற்றும் ஷிவானி சுப்பிரமணி தயாரித்துள்ள இப்படத்தை மலர்விழி நடேசன் எழுதி இயக்கியுள்ளார். சந்தோஷ் பிரதாப், பவ்யா ட்ரிக்கா, புஜிதா பொன்னாடா, ஜெயப்பிரகாஷ், முனீஸ்காந்த், ஆர்யன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஐடி நிறுவனம் நடத்தி வரும் சந்தோஷ் பிரதாப், இரவு நேரத்தில் காரில் பயணிக்கும்போது காட்டுப்பகுதியில் விபத்துக்குள்ளான ஸ்கூட்டி ஒன்றைப் பார்க்கிறார். அப்போது கேட்கும் பெண்ணின் அலறல் சத்தத்தைத் தொடர்ந்து காட்டுக்குள் செல்கிறார்.

அங்கு ஒரு பெண்ணை நான்கு பேர் துரத்திச் செல்வதைப் பார்க்கும் அவர், அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முயற்சிக்கிறார். ஆனால், அவரது முயற்சி தோல்வியில் முடிகிறது.

இதற்கிடையே சந்தோஷ் பிரதாப்பின் கடந்தகால வாழ்க்கை ஃப்ளாஷ்பேக் காட்சிகளாக விரிகிறது. மருத்துவரான புஜிதா பொன்னாடாவுடன் காதல், திருமணம் என மகிழ்ச்சியாக நகரும் அவரது வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது.

மனைவியின் இழப்பு சந்தோஷ் பிரதாப்பிற்குள் ஏற்படுத்திய மாற்றம் என்ன? காட்டுக்குள் நடந்த சம்பவத்திற்கும் அவரது வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு? என ரசிகர்களின் மனதில் எழும் கேள்விகளுக்கு அடுத்தடுத்த திருப்பங்களுடன் பதிலளிக்கிறது படம்.

சந்தோஷ் பிரதாப்பை இதுவரை பார்த்த விதத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு நடிப்பு அனுபவத்தை இப்படம் கொடுக்கிறது. தோற்றத்தில் அமைதியான மனிதராக இருந்தாலும், தனது கதாபாத்திரத்திற்குள் இருக்கும் வெவ்வேறு உணர்வுகளை வெளிக்கொண்டு வந்திருக்கும் விதம் அபாரம்.

தனக்குக் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, தனது திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க ஒரு கதாபாத்திரத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

பவ்யா ட்ரிக்காவின் நடிப்பு படத்தின் சுவாரஸ்யத்தை மேலும் அதிகரிக்கிறது. தனிமையான பங்களாவில் பயத்துடன் தவிக்கும் அவரது முகபாவனைகளும், பின்னர் மருத்துவர் தோற்றத்தில் வந்து நிற்கும் காட்சியும் ரசிகர்களை யோசிக்க வைக்கின்றன.

புஜிதா பொன்னாடா காதல் காட்சிகளில் அழகாகத் தோன்றுவதோடு, கதையின் முக்கியமான மர்மத்திற்கும் காரணமாக அமைந்துள்ளார்.

ஜெயப்பிரகாஷ் தனது அனுபவமிக்க நடிப்பால் தந்தை கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். பரபரப்பான கதையோட்டத்திற்கு இடையே முனீஸ்காந்தின் நகைச்சுவை சற்று இளைப்பாற வைக்கிறது.

ஒரு கதையைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, ரசிகர்களின் யூகங்களை மாற்றிக்கொண்டே இருப்பது திரில்லர் திரைப்படங்களுக்கான முக்கியமான அம்சம். அந்த வகையில் மலர்விழி நடேசனின் திரைக்கதை கவனம் ஈர்க்கிறது.

காதல் கதையாக நகரும் சில காட்சிகள், திடீரென கடத்தல் சம்பவங்களாகவும், சைக்கோ திரில்லராகவும், போலீஸ் விசாரணையாகவும் மாறுகின்றன.

கதாபாத்திரங்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ரகசியங்களை ஒவ்வொன்றாக வெளிப்படுத்தி, ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தொடர்ந்து தக்கவைத்திருக்கிறார் இயக்குநர்.

படம் முடிந்து வெளியே வரும்போது நிச்சயம் நினைவில் நிற்கும் பெயர்களில் ஒன்று ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி.

இரவு நேரக் காட்சிகளில் வெளிச்சத்தைக் கையாண்ட விதம் அசத்தல். காட்டுப்பகுதிகளின் மர்மத்தையும், காதல் காட்சிகளின் அழகையும், சண்டைக் காட்சிகளின் தீவிரத்தையும் தனது கேமரா வழியாகச் சிறப்பாகக் கடத்தியிருக்கிறார்.

டி. இமானின் இசை படத்தின் உணர்வுகளுக்குக் கூடுதல் பலம் சேர்க்கிறது. குறிப்பாக, பின்னணி இசையும் ஒலி வடிவமைப்பும் இணைந்து சில காட்சிகளில் ரசிகர்களைப் பதற வைக்கின்றன. பாடல்களும் ரசிக்கும்படியாக அமைந்துள்ளன.

படத்தொகுப்பாளர் ஆர். கலைவாணன், கலை இயக்குநர் முனி கிருஷ்ணன் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினரின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.

ஒரு நல்ல திரில்லர் திரைப்படத்திற்குத் தேவையான மர்மம், பதற்றம், எதிர்பார்ப்பு, திருப்பங்கள் என அனைத்தையும் ஒருங்கிணைத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் மலர்விழி நடேசன்.

சந்தோஷ் பிரதாப்பின் நடிப்பிற்காகவும், தொழில்நுட்ப நேர்த்திக்காகவும், வித்தியாசமான திரைக்கதை அனுபவத்திற்காகவும் இப்படத்தைத் திரையரங்கில் பார்க்கலாம்.

Signal at 11:30 – நேரம் நகர நகர… மர்மம் அதிகரிக்கும்!

Facebook Comments

Related Articles

Back to top button