
நடிப்பு: முகேன் ராவ், ப்ரீத்தி அஸ்ராணி, தான்யா ஹோப், நிதின் சத்யா, சுரேகா வாணி, ஸ்ரீஜித் ரவி, அன்பு மயில்சாமி, கஜராஜ்
இயக்கம்: பலராம் கிருஷ்ணா
தயாரிப்பு: கே. பிந்து மாதவி
இணை தயாரிப்பு: பி. ராஜேஷ்
இசை: டி. இமான்
ஒளிப்பதிவு: சான்டோனியோ டெர்சியோ
படத்தொகுப்பு: சாபு ஜோசப்
பி.ஆர்.ஓ: AIM சதீஷ்
மருத்துவராகப் பணியாற்றி வரும் முகேன் ராவும், மருத்துவக் கல்லூரி மாணவியான ப்ரீத்தி அஸ்ராணியும் காதலித்து வருகின்றனர். சமூகத்தில் நடைபெறும் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதுடன், அதுகுறித்த வீடியோக்களைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் ப்ரீத்தி.
ஒருநாள் இருவருக்கும் இடையே ஏற்படும் கருத்து வேறுபாட்டால் பிரிகின்றனர். அன்றிரவே மர்மமான முறையில் ப்ரீத்தி காணாமல் போகிறார்.

மறுபுறம், பிரபல மருத்துவமனை ஒன்றை நடத்தி வரும் சுரேகா வாணியின் மகள் தான்யா ஹோப்பும் அடுத்த நாளே காணாமல் போகிறார்.
அடுத்தடுத்து இரண்டு பெண்கள் காணாமல் போனதற்கான காரணம் என்ன? இந்தக் கடத்தல்களுக்குப் பின்னால் இருப்பது யார்? மருத்துவமனைக்கும் இந்தச் சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு? என்பதற்கான விடைகளை சஸ்பென்ஸ் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் பலராம் கிருஷ்ணா.
மருத்துவராக வரும் முகேன் ராவ் தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். சமூக அக்கறை கொண்ட பெண்ணாக வரும் ப்ரீத்தி அஸ்ராணியின் நடிப்பு இயல்பாக அமைந்துள்ளது.
தான்யா ஹோப், நிதின் சத்யா, சுரேகா வாணி, ஸ்ரீஜித் ரவி, கஜராஜ் உள்ளிட்ட அனைவரும் கதையின் தேவையை உணர்ந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இரண்டு பெண்களின் கடத்தலை மையமாக வைத்து மர்மங்கள் நிறைந்த திரைக்கதையை உருவாக்க முயன்றிருக்கிறார் இயக்குநர். குறிப்பாக, இரண்டாம் பாதியில் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பின்னணியையும் வெளிப்படுத்தும் விதம் கவனம் ஈர்க்கிறது.

ஆங்காங்கே இடம்பெறும் சஸ்பென்ஸ் காட்சிகள் படத்தின் மீதான ஆர்வத்தைத் தக்கவைக்கின்றன. இருப்பினும், சில காட்சிகளை இன்னும் அழுத்தமாக வடிவமைத்திருக்கலாம்.
டி. இமானின் இசையும், சான்டோனியோ டெர்சியோவின் ஒளிப்பதிவும் படத்திற்கு ஆறுதல் அளிக்கின்றன.
படத்தின் பிளஸ்:
கதாபாத்திரங்களின் அளவான நடிப்பு.
ஆங்காங்கே இடம்பெறும் சஸ்பென்ஸ் காட்சிகள்.
இரண்டாம் பாதியில் வெளிப்படும் மர்மங்கள்.
இசை மற்றும் ஒளிப்பதிவு.
படத்தின் மைனஸ்:
முகேன் ராவின் கதாபாத்திர வடிவமைப்பில் இருக்கும் செயற்கைத்தனம்.
நிதின் சத்யாவின் சில நடவடிக்கைகளுக்கான போதிய விளக்கமின்மை.
அடுத்தடுத்து நடைபெறும் சம்பவங்களை முன்கூட்டியே கணிக்க முடிவது.
திரைக்கதையில் ஆங்காங்கே ஏற்படும் தொய்வு.
விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லராக உருவாக வேண்டிய ‘நிறம்’, திரைக்கதையில் ஏற்பட்ட சில சறுக்கல்களால் முழுமையான தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுகிறது. இருப்பினும், மர்மங்களும் எதிர்பாராத திருப்பங்களும் நிறைந்த திரைப்படங்களை விரும்புபவர்கள் ஒருமுறை பார்க்கலாம்.
நிறம் – சஸ்பென்ஸ் உண்டு… அழுத்தம் குறைவு!





