
நாயகன் ராகுல் மற்றும் செல்வா இருவரும் நண்பர்கள். நாயகன் ராகுல், தனது சொந்த பந்தங்களை ஏமாற்றி பணம் பறித்து அதில் ஊர் சுற்றி வருகிறார். அதனைத் தொடர்ந்து பக்கத்து ஊருக்கு சென்று ஸ்டூடியோ ஆரம்பித்து சம்பாதிக்கலாம் என்று செல்கின்றனர்.
அங்கு இருக்கும் நண்பன் கொட்டாச்சியோடு சேர்ந்து ஸ்டூடியோவும் ஆரம்பிக்கின்றனர் ராகுலும் செல்வாவும்.
அந்த ஏரியாவில், மூன்று முறை தொடர்ந்து எம் எல் ஏ-வாக இருக்கிறார் செளந்தர்ராஜன். இம்முறை அவர் நிற்காததால், அவருக்கு எதிராக அவரின் சகோதரரான வையாபுரியை நிறுத்த முயற்சி செய்கிறார் வில்லனாக வரும் கராத்தே ராஜா.
இது ஒரு சூழ்ச்சி வலை என தெரியாமல் இருக்கும் பணத்தை வீணடிக்கிறார் வையாபுரி. ஒரு கட்டத்தில் வையாபுரியை தூக்கியெறிந்து, வஞ்சகமாக எம் எல் ஏ-வாகி விடுகிறார் கராத்தே ராஜா.
தொடர்ந்து அமைச்சர் பதவிக்காக சென்னை செல்லும் கராத்தே ராஜா, வழியில் மர்ம நபரால் கொலை செய்யப்படுகிறார். எம் எல் ஏ-வை கொலை செய்தது யார்.? இந்த சம்பவத்தில் ஹீரோ எப்படி வந்தார் .? என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் ராகுல், கதைக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்திருக்கிறார். ஆக்ஷன் காட்சியிலும் அனல் பறக்க சண்டை செய்திருக்கிறார்.
இன்னும் சற்று கூடுதலான பயிற்சி எடுத்தால், தமிழ் சினிமாவில் நல்ல இடம் ஒன்று அவருக்கென்று நிச்சயம உருவாகும்.
நாயகி அனிதா, தனது முதல் படம் போல் அல்லாமல், அனுபவ நடிகை போன்ற ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார். யாருக்கும் அடங்காமல் ரெளடி போன்று கெத்தான கதாபாத்திரத்தை சற்றும் சறுக்காமல் கொடுத்திருக்கிறார் நாயகி.
ஒருசில காட்சிகள் மட்டுமே வந்தாலும், மனதில் நீங்கா கதாபாத்திரமாக நிற்கிறார் நளினி.
வில்லனாக வந்த கராத்தே ராஜா, தனது வில்லத்தனத்தை நேர்த்தியாக செய்து மிரட்டியிருக்கிறார். வையாபுரி மற்றும் செளந்தர்ராஜன் தனது அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
ஆங்காங்கே வயிறு குலுங்க வைக்கும் காமெடி காட்சிகளை சிதறவிட்டிருக்கிறார் இயக்குனர் பகவதி பாலா. காமெடி என்ற லைனில் நிற்காமல் படத்தில் ஒரு சமுதாய கருத்தையும் பதிவு செய்திருக்கிறார்.
ஆங்காங்கே அரசியல் கலந்த விமர்சன வசனங்களையும் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
தேவாவின் இசையில் ”லஞ்சம் லஞ்சம் உரெல்லாம் லஞ்சம்” என்ற பாடலை தவிர மற்ற பாடல்கள் பெரிதாக மனதில் நிற்கவில்லை.
பகவதி பாலாவே ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம்.
நன்றான ஒரு மூலக்கதையை எடுத்திருந்தாலும், அதில் சற்று சுவாரஸ்யத்தை கலந்து கொடுத்திருந்தால் படம் சற்று சுவை ஏற்றியிருந்திருக்கும்.
ஆள் இல்லாத ஊர்ல அண்ணன் தான் எம் எல் ஏ – ஈர்ப்பில்லை.
Rating 2.5/5





