
‘அயலி’ இணையத் தொடர் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான நடிகை அனுமோல், விஜயதசமியை முன்னிட்டு 50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கௌரவித்தார்.
சென்னை கொளத்தூரில் உள்ள ஸ்ரீ செல்வ லட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனுமோல், குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்காக இரவு பகல் பாராமல் உழைக்கும் பெண் ஆட்டோ ஓட்டுநர்களைப் பாராட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், பெண்கள் பொருளாதார ரீதியாகச் சுதந்திரமாகவும், சுயமரியாதையுடனும் வாழ வேண்டும் என்றும், எந்தவிதப் பாகுபாடுகளுக்கும் இடமளிக்காமல் தன்னம்பிக்கையுடன் முன்னேற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, 50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இன்சுலேட்டட் வாட்டர் பாட்டில், நாப்கின், பவர் பேங்க், முதலுதவிப் பெட்டி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். மேலும், அவர்களுடன் கலந்துரையாடி குடும்பச் சூழல் குறித்தும் கேட்டறிந்தார்.
தங்களின் தேவைகளை உணர்ந்து உதவிகள் வழங்கிய நடிகை அனுமோலுக்கு பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.





