மாடலிங் துறையிலிருந்து சினிமாவில் நடிக்க வந்திருக்கிறார் ஒருவர் .பெயர் ஷெரினா .இயற் பெயர் ஷெரின் சாம்.
5 அடி 7 அங்குல தாஜ் மஹால் போலத் தோற்றம் .
கலகலப்பான சுபாவம் , கண்களில் மின்னும் நம்பிக்கை எனத் தெரிகிற ஷெரினாவுக்கு பூர்வீகம் கேரளாவின் கொச்சி, குழந்தைப் பருவம் பெங்களூரில் , பள்ளிப் பருவம் குவைத்தில் என்று கழிந்திருக்கிறது. பால்யகால மே பல பிரதேசங்கள் என்று போயிருக்கிறார். சேர நன்னாட்டிளம் பெண்ணான இவருக்கு விமானம் ஓட்ட வே கனவு இருந்ததாம்.
கனவு என்னவோ விமானம் ஓட்ட வேண்டும் என்றுதான் இருந்ததாம்.எனவே முதலில் மாடலிங் பற்றி அவநம்பிக்கையுடன் இருந்தவருக்கு நண்பர் மூலம் திடுதிப்பென வந்ததாம் ஒரு வாய்ப்பு..இத்துறையில் ஈடுபட பிள்ளையார் சுழி போட்டது டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம்தான், மும்பை போய்த் தங்க வேண்டும் என்று தவிர்த்துப் பார்த்தார். மும்பையில் உள்ள தங்கள் விருந்தினர் மாளிகையிலேயே தங்கலாம் என்று கூறியுள்ளனர் . சரி பார்க்கலாம் என்று அரை மனதுடன் தான் போயிருக்கிறார். ஆனால் ஆரம்ப மே நல்ல அறிகுறியாக வரவேற்பு கிடைத்திருக்கிற து. மாடலிங் வாய்ப்பு பெமினா மிஸ் ஆந்திரா போட்டிக்கு வந்தது. ஹைதராபாத் போனார் தேர்வு செய்யப்பட்டார். ஏழு நாட்கள் பயிற்சிக்குப் பின் நம்பிக்கை வந்தது. சர்வதேச ராம்ப்பில் அழகு நடை பயிலும் அளவுக்குக் கொண்டு போனது. ஒரு விபத்தைப் போல் மாடலிங்கில் இறங்கியவர் , பிறகு பிஸியாகி விட்டார்.மும்பையில் தங்கி , அமெரிக்க நியூயார்க் .,ஐரோப்பிய மாண்டினிக் ரோ என்று பறந்து போயிருக்கிறார். இவர் எந்த ஊர் என்றவரே இருந்த ஊரைச் . சொல்லவா என்று பாடாத குறையாகப் பல ஊர் வாசம் செய்திருக்கிறார்.
ஏழு நாட்களில் ஏராள நம்பிக்கை தந்த பயிற்சியுடன் இந்திய அளவில் போர்டு சூப்பர் மாடல் போட்டிக்குச் சென்றார். பிறகு நியூயார்க்கில் நடந்த சர்வதேசப் போட்டிக்குச் சென்றார். 40 நாடுகள் ஏராளமான போட்டியாளர்கள் , அவர்களில் டாப் டென்னில் ஒருவராக வந்தார் .அங்கு ஏராளமான வெள்ளை வெளேர் ஆங்கிலேயப் பெண்கள் வந்த போதும் ஷெரினாவின் இந்திய நிறம் பலரையும் கவர்ந்து மதிப் பெண்ணை அள்ளியிருக்கிறது
பிறகு வில்ஸ் இந்தியா பேஷன் ஷோ , லக்மே பேஷன் ஷோ உள்ளிட்ட பல்வேறு வகையில் 500 ஷோக்களில் கலந்து கொண்டு பூனை நடை நடந்துள்ளார் ஷெரினா
பேஷன் ஷோக்களில் பிஸியாக இருந்தவரை விளம்பரப்பட உலகம் இருகரம் நீட்டி வரவேற்றிருக்கிறது. விளைவு? ஏராளமான விளம்பரங்களில் தோன்றினார். தி சென்னை சில்க்ஸ் , மலபார் கோல்டு ,கன்கடாலா , விஜயா மில்க்,சிஸ்லி, ஜிவி மால் உள்ளிட்ட ஏராளமான நிறுவன விளம்பரங்களில் தோன்றினார்.
இதற்கிடையே சமர்த்தாகப்ஃபடித்து வணிக மேலாண்மையில் ஒரு பட்டம் பெற்றிருக்கிறார். அப்பாவின் சா யரா மோட்டார் நிறுவனத்தில் நிர்வாகத்தில் மேற்பார்வை செய்யும் அளவுக்கு தெளிவு உண்டு இவருக்கு .
முகம் தெரிந்த ஒரு விளம்பர மாடலை திரையுலகம் விட்டு வைக்குமா ? இவரைக் கன்னடத் திரையுலகம் கரம் பற்றி இழுக்க ,ஆர்.பி. பட்நாயக் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்து விட்டார். படம் பெயர் மற்ற விவரங்கள் அவர்கள் மூலமே வரட்டும் என்று மெளனம் காக்கிறார். தமிழில் இரண்டு புதிய படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
பேஷன் ஷோக்கள் மாடலிங் விளம்பரங்கள் என்றிருந்தவர் தமிழ் சினிமாப் பக்கம் வந்ததைப் பற்றி என்ன உணர்கிறார்?
“புதியவர்கள் புதிய சிந்தனைகளுக்கு தமிழ் திரையுலகம் வரவேற்பு தரும். ரசிகர்களும் புதியவர்களை ஆராதிக்கத் தயங்குவதில்லை, அந்த நம்பிக்கையில் தமிழில் நான் அறிமுகமாகிறேன். தமிழில் எனக்குப் பிடித்த நட்சத்திரங்கள் கமல் சார் , ரஜினி சார் . சினிமா என்று வந்த பின் சும்மா இருக்க முடியுமா? நடனப்பயிற்சி செய்கிறேன்.
நிறைய படங்கள் பார்த்துக் கற்றுக் கொள்கிறேன். தினமும் மூன்று படங்களாவது பார்க்கிறேன். ” என்கிறார் .
ஷெரினாவுக்கு காரோட்டுவது மட்டுமல்ல கவிதை எழுவதும் பிடிக்கும் .ஆங்கிலத்தில் இவர் எழுதிய கவிதைகள் சில இதழ்களில் பிரசுரமாகியிருக்கின்றன.
இவருக்கு தமிழ் , மலையாளம் , தெலுங்கு , கன்னடம் ,இந்தி , ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகள் தெரியும். நடிப்பார்வத்தில் மொழிகளைக் கற்றதாகக் கூறுகிறார் .
படை திரட்டிக் கொண்டு போருக்குச் செல்வது போல தன்னைத் தகுதியாக்கிக் கொண்டு திரைக் களம் வந்துள்ள ஷெரினாவுக்கு வெற்றி வாசல் திறக்காமலா போய்விடும்?