சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “ராயன்”. இப்படத்தை நடிகர் தனுஷ் இயக்கியிருக்கிறார்.
இவரே இப்படத்தில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். மேலும், எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன், திலீபன் உள்ளிட்ட நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.
ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நாளை உலகம் முழுவதும் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.
படத்தினை பார்த்த சென்சார் அதிகாரிகள், படத்தில் அதிகப்படியான ரத்தம் தெறிக்கும் காட்சிகள் பல இருப்பதால் படத்திற்கு “ஏ” தரச் சான்றிதழ் கொடுத்திருக்கின்றனர். A தரச் சான்றிதழால் குடும்பமாக படம் சென்று பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், வசூலில் பெரிதாக இப்படம் பின்வாங்கும் என்றும் கூறுகிறார்கள்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழாவானது சென்னையில் நடைபெற்றது. இவ்வ்விழாவில், தமிழ் சினிமாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் எவர்க்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல், படம் சார்ந்த ப்ரொமோஷன் எதுவும் தமிழ்நாட்டில் தமிழ் பத்திரிகையாளர்களுக்கு நடத்தப்படவில்லை..
ஆந்திராவிற்கு சென்று, தெலுங்கு திரைப்பட பத்திரிகையாளர்களை அழைத்து பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்தியிருக்கிறார் நடிகர் தனுஷ்.
தமிழ் மீடியாக்களை ஒட்டுமொத்தமாக புறக்கணித்திருக்கிறார் நடிகரும் இயக்குனருமான தனுஷ். இந்த படத்திற்கு மட்டுமல்லாது, இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சந்திப்பை தொடர்ச்சியாக தவிர்த்து வருவதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார் நடிகர் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.