
தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த், சமுத்திரக்கனி, சிம்ரன், யோகிபாபு, ப்ரியா ஆனந்த், ஊர்வசி, கே எஸ் ரவிக்குமார், வனிதா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் அந்தகன்..
இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ரவி யாதவ். இசையமைத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.
சாந்தி தியாகராஜன் படத்தினை தயாரித்திருக்கிறார். மிக நீண்ட காலமாகவே இப்படம் வெளிவரும் வெளிவரும் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக இன்று இப்படம் திரை கண்டிருக்கிறது.
ரசிகர்களை மனதை இந்த அந்தகன் வென்றதா இல்லையா என்பதை இந்த விமர்சனம் மூலம் பார்த்துவிடலாம்.
கதைக்குள் பயணிக்கலாம்…
நாயகன் பிரசாந்த் பாண்டிச்சேரியில் வசித்து வருபவர். இவர் ஒரு பியானோ வாசிப்பாளர். தனக்கு கண் தெரியாது என்று மக்கள் மத்தியில் வாழ்ந்து வருபவர். கண் தெரியாமல் இருந்தால் மட்டுமே தனது இசையை அனைவரும் ரசிக்கிறார்கள் என்று நினைப்பில் இருப்பவர்.
இந்த சமயத்தில் ப்ரியா ஆனந்த் உடன் நட்பு கிடைக்கிறது. இந்த நட்பு ஊடலாக மாறுகிறது. இந்நிலையில், நடிகராக வரும் கார்த்திக் தனது மனைவி சிம்ரனை சர்ப்ரைஸ் செய்வதற்காக பிரசாந்தை தனது வீட்டில் வந்து பியானோ வாசிக்குமாறு அழைக்கிறார்.
அடுத்தநாள் கார்த்திக்கின் வீட்டிற்கு செல்கிறார் பிரசாந்த். அங்கு, சிம்ரன் அவரை வீட்டிற்குள் வரவழைக்கிறார். அங்கு கார்த்திக் கொல்லப்பட்டு கிடக்கிறார். பிரசாந்திற்கு கண் தெரியாது என்று நினைத்து அவர் முன்னே அவரது உடலை பேக் செய்கின்றனர் சிம்ரனும் அவரது கள்ளக்காதலனுமான சமுத்திரக்கனியும்.
அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஒரு கதையின் நாயகனாக பிரசாந்தை திரையில் காண்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தருணமாக இருந்தது. அதே நடிப்பை மீண்டும் திரையில் கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார் பிரசாந்த்.
கண் தெரியாமல் போன்று நடிக்கும் காட்சிகளில் எல்லாம் மிகவும் தத்ரூபமான நடிப்பைக் கொடுத்து அசரடித்திருக்கிறார் பிரசாந்த். மேலும், ப்ரியா ஆனந்த் உடனான காதல் காட்சிகளிலும் ஜொலித்திருக்கிறார் பிரசாந்த்.
வில்லத்தனத்தை வேறு கோணத்தில் காட்டி அனைவரையும் மிரள வைத்திருக்கிறார் சிம்ரன். கண்களில் அப்படியொரு வெறிகொண்ட நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார்.
சமுத்திரக்கனி, யோகிபாபு, ஊர்வசி என படத்தில் நடித்த அனைவரும் தங்களுக்கான கதாபாத்திரங்களை அளவாக செய்து முடித்திருக்கிறார். பின்னணி இசையில் இன்னும் சற்று மெனக்கெடல் செய்திருக்கலாம் சந்தோஷ் நாராயணன். ஆங்காங்கே எட்டிப் பார்த்த இளையராஜாவின் இசை நமக்கு சற்று ஆறுதல்.
ஒளிப்பதிவு நச் ரகம் தான். எந்த இடத்திலும் யாரும் யூகிக்க முடியா வண்ணம் திரைக்கதையை பரபரவென நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர் தியாகராஜன்.
ஆங்காங்கே சின்ன சின்ன தொய்வு எட்டிப் பார்த்தாலும், திரைக்கதை வேகமாக இருப்பதால் நம்மை கதைக்குள் இழுத்துச் சென்று விடுகிறது. க்ளைமாக்ஸ் மிகப்பெரும் அளவிற்கு ட்விஸ்ட் காட்சிகளை வைத்து பரபரப்பை உச்சிக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.
அந்தகன் – வேகம்.