
சமுத்திரக்கனி, அபிராமி,லக்ஷ்மி ராமகிருஷ்ணன், மிஷ்கின், ஆடுகளம் நரேன், பாவல் நவநீதன், முல்லையரசி, அஷோக், அனுபமா குமார் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் உருவாகியிருக்கும் படம் தான் ஆர் யூ ஓகே பேபி.
அஷோக்கும் முல்லையரசியும் பல வருடங்களாக திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்விங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த முல்லையரசி கர்ப்பமாகிறார்.
எப்போதும் குடித்து விட்டு பொறுப்பில்லாமல் இருக்கும் அசோக்கை வைத்துக் கொண்டு எப்படி குழந்தையை வளர்ப்பது என்று மருத்துவமனையில் நர்ஸ் ஒருவரின் மூலம் குழந்தையை விற்று விடுகிறார் முல்லையரசி. இதற்காக ஒப்பந்த பத்திரத்திலும் கையெழுத்தும் இடுகிறார்.
பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருக்கும் சமுத்திரக்கனி – அபிராமியின் கைகளுக்கு செல்கிறது அந்த குழந்தை. அந்த குழந்தை மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கின்றனர் சமுத்திரக்கனியும் அபிராமியும்.
ஒருவருடம் கழித்து தன் குழந்தை தனக்கு வேண்டும் என்று, தனியார் சேனல் ஒன்றை நாடுகிறார் முல்லையரசி.அந்த சேனலில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.
முல்லையரசியின் கைக்கு குழந்தை செல்ல முயற்சிக்கிறார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். அதே வேளையில், சிபி சிஐடி-யில் சமுத்திரக்கனி மற்றும் அபிராமி மீது வழக்கும் பதிவு செய்யப்படுகிறது.
அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
மொத்த கதையும் முல்லையரசி மீது பயணப்படுவதால், தனது கதாபாத்திரத்தினை மிகவும் நேர்த்தியாக செய்து முடித்திருக்கிறார். பெற்ற குழந்தையை பார்க்க முடியாமல் ஏங்கும் ஏக்கம், என அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் முல்லையரசி.
சமுத்திரக்கனியும் அபிராமியும் பல வருடமாக குழந்தை இல்லாத ஏக்கமாக ஒரு குழந்தை கிடைத்ததும், அந்த குழந்தை மீது பாசத்தை காட்டுவதிலும் நடிப்பின் உச்சம் தொட்டு விட்டனர்.
டிவி ஷோக்களில் வழக்கமாக நடத்தும் நிகழ்ச்சி போன்றே இப்படத்திலும் அது போன்ற ஒரு நிகழ்ழி நடத்தி நீதி இழந்த பெண்களுக்கு ஆதரவாக நிற்கிறார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.
க்ளைமாக்ஸ் காட்சிகளில் நடக்கும் கோர்ட் விவாதங்கள் மிகவும் விறுவிறுப்பாக இருப்பது படத்திற்கு கூடுதல் பலம்.
ஒரு சில காட்சிகள் வந்தாலும் தனது முத்திரை நடிப்பைக் கொடுத்து விட்டுச் செல்கிறார் மிஷ்கின்.
இளையராஜாவின் இசையில் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை, க்ளைமாக்ஸ் காட்சியைத் தவிர..
ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். மொத்தத்தில்,
ஆர் யூ ஒகே பேபி – பெற்றத் தாயின் பாசப்போராட்டம்…





