
‘பாகுபலி’ படத்தைத் தயாரித்த அர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘ஜான் டோ’ திரைப்படம் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இதனை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகை அனுபமா, “இந்தப் படத்தைப் பார்க்கச் செல்லும்போது ஒரு மனிதராக இருப்பீர்கள். வெளியே வரும்போது வேறு மனிதராக மாறியிருப்பீர்கள்” என்று படத்தின் உளவியல் தாக்கம் குறித்து நம்பிக்கை தெரிவித்தார்.
நடிகர் அர்ஜுன் தாஸ் பேசுகையில், “ஜான் டோ வெறும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மட்டுமல்ல. உணர்வுபூர்வமான அம்சங்களும் நிறைந்த படம். ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும்” என்றார்.
இயக்குநர் மதுமிதா பேசும்போது, கேரளா – தமிழ்நாடு எல்லையில் உள்ள மலைப்பகுதியைப் பின்னணியாகக் கொண்டு கதை நகர்வதாகவும், அர்ஜுன் தாஸ் கேரள காவல்துறை அதிகாரியாகவும், சஞ்சனா நடராஜன் தமிழக காவல்துறை அதிகாரியாகவும் நடித்துள்ளதாகத் தெரிவித்தார்.
சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி, ஜாரா வினீத் சந்தோக், நீரவ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு முஜீப் மஜீத் இசையமைத்துள்ளார். பிரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அர்ஜுன் தாஸ் முதன்முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள ‘ஜான் டோ’ திரைப்படம் நவம்பர் 13ஆம் தேதி வெளியாகவுள்ளது.





