
நடிப்பு: அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், பேபி கிருத்திகா, ஜான் விஜய், காளி வெங்கட், விடிவி கணேஷ்
தயாரிப்பு: எஸ்.ஜி. சரவணன்
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: எம். சுகுமார்
இயக்கம்: கணேஷ் விநாயகன்
“கல்வி” என்பது ஒரு குழந்தையின் உரிமை என்பதை மையமாக வைத்து, மலைவாழ் மக்களின் வாழ்க்கை, அவர்களின் போராட்டம், சமூக அநீதி ஆகியவற்றை உணர்வுபூர்வமாகச் சொல்ல முயற்சித்திருக்கும் படம் தான் ‘அருள்வான்’.
மலைப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்களை ஏமாற்றி, அவர்களின் நிலங்களை அபகரிக்க சில செல்வாக்கு மிக்கவர்கள் திட்டமிடுகிறார்கள். கல்வி என்றால் என்னவென்றே அறியாத அந்த கிராமத்தில், சிறுமி குறிஞ்சி (பேபி கிருத்திகா) மட்டும் பள்ளிக்குச் சென்று படிக்க வேண்டும் என்ற கனவை மனதில் சுமக்கிறாள். அந்த கனவை நிறைவேற்ற மாவட்ட ஆட்சியரை நேரில் சந்திக்க மலைக்கிராமத்தை விட்டு தனியாக புறப்படுகிறாள். அந்தப் பயணம் என்னென்ன சவால்களை சந்திக்கிறது, இறுதியில் அவளது கல்விக் கனவு நனவாகிறதா என்பதுதான் படத்தின் உணர்வுபூர்வமான திரைக்கதை.
படத்தின் மிகப்பெரிய பலம் பேபி கிருத்திகா. குழந்தைத்தனமும், உறுதியும், கல்வி மீது இருக்கும் ஏக்கமும் கலந்த நடிப்பால் மனதை வெகுவாக கவர்கிறார். குறிப்பாக கலெக்டரை பார்க்க வேண்டும் என்ற ஒரே இலக்குடன் பயணிக்கும் காட்சிகளில் அவரது இயல்பான நடிப்பு கண்களில் ஈரத்தை வரவழைக்கிறது.
ஆரவ், மலைவாழ் மக்களின் வாழ்க்கையை வாழ்ந்த மனிதராகவே தெரிகிறார். மகளின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற அப்பாவின் ஏக்கத்தை மிகவும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். ரம்யா பாண்டியனும் அமைதியான ஆனால் வலிமையான தாயாக மனதில் பதிகிறார்.
முதல் பாதியில் அதிகம் தோன்றாத அருள்நிதி, இரண்டாம் பாதியில் கதையின் மையமாக மாறுகிறார். மாவட்ட ஆட்சியர் முத்துவேல் கதாபாத்திரத்தில் அவரது அமைதியான நடிப்பும், மனிதநேயமான அணுகுமுறையும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒரு வாக்குறுதியை காப்பாற்ற தனது பதவியையே துறந்து ஆசிரியராக மாறும் காட்சிகள் கதாபாத்திரத்திற்கு மேலும் உயரம் சேர்க்கின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அருள்நிதியை வித்தியாசமான கதாபாத்திரத்தில் பார்க்கும் ரசிகர்களுக்கு இது நல்ல விருந்தாக அமைகிறது.
விடிவி கணேஷ், ஜான் விஜய், காளி வெங்கட் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை அளவாக செய்து கதைக்கு துணை நிற்கிறார்கள்.
மலைவாழ் மக்களின் மொழி, பழக்கவழக்கம், வாழ்க்கை முறை ஆகியவற்றை எந்தவித செயற்கைத்தனமும் இல்லாமல் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது. அவர்களின் மொழிக்கு தமிழில் சப்டைட்டில் கொடுத்திருப்பது கதையுடன் பார்வையாளர்கள் ஒன்றிப் பயணிக்க உதவுகிறது.
எம். சுகுமாரின் ஒளிப்பதிவு படத்தின் இன்னொரு கதாபாத்திரமாகவே மாறியுள்ளது. பசுமை நிறைந்த மலைகளையும், இயற்கையின் அழகையும் கண்களுக்கு விருந்தாக பதிவு செய்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமாரின் பின்னணி இசை உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
இயக்குநர் கணேஷ் விநாயகன், கல்வி, சமத்துவம், மனிதநேயம் ஆகியவற்றை மையமாக வைத்து அழுத்தமான சமூகக் கருத்தை வணிக அம்சங்களுடன் சொல்ல முயற்சித்திருக்கிறார். “கீழே இருப்பவன் மேலே வர வேண்டும் என்றால், மேலே இருப்பவன் கீழே வர வேண்டும் என்பதல்ல; இருவரும் சமமாக நிற்க வேண்டும்” போன்ற வசனங்கள் சிந்திக்க வைக்கின்றன.
மொத்தத்தில், ‘அருள்வான்’ வெறும் திரைப்படமாக இல்லாமல், கல்வியின் அவசியத்தை உணர்த்தும் சமூக அக்கறை கொண்ட படைப்பாக மனதில் நிற்கிறது.
அருள்வான் – கல்வி என்ற ஒளியால் வாழ்க்கையை மாற்றும் மனதைத் தொடும் சமூகப் பயணம்.




