
கதைப்படி, சிறுவயதிலேயே தனதுதந்தையை இழந்துவிட்ட காரணத்தினால் வறுமையின் கோரப்பிடிக்கு தள்ளப்படுகிறார் விக்ரம் பிரபுவும் அவரது தாயாரும்.
இதனால், பணத்தை பார்த்தாலே அதை திருடும் ஒரு வித்தியாசமான பழக்கம் விக்ரம்பிரபுவிற்கு ஒட்டிக் கொள்கிறது. இந்த பழக்கம் 10 ரூபாய், 20 ரூபாயில் ஆரம்பித்து கோடியில் சென்று முடிகிறது.
கோடி கோடியாக கொள்ளையடிக்கும் பணத்தை எந்த வித செலவும் செய்யாமல், தனது வீட்டு அறையில் வைத்து அழகு பார்க்கிறார். இதுதன் இவரது வழக்கமாக இருந்து வருகிறது.
கோடி கோடியாக கொள்ளையடிக்கப்பட்ட அந்த பணத்திற்கு சொந்தகாரர்கள் விக்ரம்பிரபுவை கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை…
வழக்கமான அதிரடி ஆக்ஷன் படத்திற்கு தயாராகி களமிறங்கியிருக்கிறார் விக்ரம் பிரபு.
சில வருடங்களுக்கு முன் தென்னிந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இரயிலில் பணம் திருடிச் சென்ற விவகாரத்தை இப்படத்தில் வைத்துள்ளனர். மிகவும் தத்ரூபமாக அந்த காட்சியை அமைத்து கைதட்டல் வாங்குகிறார் இயக்குனர்.
விக்ரம்பிரபுவின் நண்பராக வரும் ஜெகன், அவரின் திருட்டுக்கு இவர் துணை போகிறார். அவ்வப்போது, ஜெகனின் நடிப்பு ஆங்காங்கே ஓவர் ஆக்டிங்காக இருந்தது.
யோகிபாபு எண்ட்ரீ ஆகும் காட்சிகளில், சிரிப்பலைகள் விண்ணை முட்டுகிறது. டைமிங் காமெடியில் அடித்து பட்டையை கிளப்புகிறார் யோகிபாபு.
சிகரெட் பிடிக்கும் டிடக்டெவாக வந்து ரசிகர்களை தன் வசம் இழுத்துக் கொள்கிறார் நாயகி மஹிமா நம்பியார். இளமை துள்ளலாக வந்து அனைவரையும் பரவசப்படுத்துகிறார்.
சரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் மஹிமாவிற்கு இப்படமும் ஒரு வெற்றி மகுடம் தான்.
கணேஷ் ராகவேந்த்ராவின் இசையில் பாடல்கள் பெரிதாக மனதில் இடம் பெறவில்லை. சனஞ்செயாவின் பின்னனி இசை, ஓகே ரகம் தான்.
ராமலிங்கம் அவர்களின் ஒளிப்பதிவு கலர்புல். அதிலும், இரயில் திருட்டு, க்ளைமாக்ஸ் காட்சிகள் என குறிப்பிட்டு ஒரு சில இடங்களில் கைதட்டலும் வாங்கிக் கொள்கிறார் ஒளிப்பதிவாளர்.
நல்லவர்களின் பணம் கெட்டவர்களுக்கு சென்றுவிடக் கூடாது, என சில நல்ல காட்சிகளை வைத்தாலும், வங்கி பணத்தை கொள்ளையடிப்பது ஹீரோவுக்கு அழகல்ல இயக்குனரே, அதை ஏழை, எளிய மக்களுக்கு கொடுத்தாலும் பரவாயில்லை, வீட்டிலே வைத்துக் கொண்டு நானே அதை அழகு பார்ப்பேன் என்பதெல்லாம் எப்படி ஹீரோயிசம் என மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்..??
விக்ரம் பிரபுவின் நடிப்பு அருமை என்றாலும், அவருக்கு இன்னும் சரியான தீணி போடக் கூடிய கதைகள் இதிலும் சிக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.,
அசுரகுரு – வேகம் குறைவு என்றாலும் ரசிக்க வைக்கிறார் இந்த குரு