Spotlightவிமர்சனங்கள்

அசுரன்; விமர்சனம் 4/5

பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை படங்களுக்குப் பிறகு அசுரன்’ படத்திற்காக இணைந்திருக்கிறது தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி. பூமணியின் ‘வெக்கை’ என்ற நாவலை மையமாக வைத்து இக்கதை உருவாகியுள்ளது.

கதைக்களம்,

1980-களில் இரண்டு மகன் மற்றும் ஒரு மகளோடு திருநெல்வேலி பகுதியில் ஒரு கிராமத்தில் வசித்து வரும் தம்பதி தான் தனுஷ் (சிவ சாமி) – மஞ்சு வாரியர்.

தனது இளைய மகன் சிதம்பரம் (கென் கருணாஸ்) உடன் இரவு நேரத்தில் காட்டுப் பகுதியில் பயணம் செய்கிறார் தனுஷ். இந்த பயணத்தில் இருவருக்கும் நடக்கும் கதைக்களம் படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. இவர்கள் இருவரையும் கொல்ல ரவுடி கும்பல் ஒன்று அந்த காட்டுப்பகுதியில் சுற்றித் திரிகிறது.

ஏன் என்ற காரணம் அறிய கதை பின்னோக்கி நகர்கிறது. எந்த வம்பிற்கும் போகாமல் தனது மகன்களை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக வரும் தனுஷிற்கு அடுத்தடுத்து சோதனைகள் வர, அந்த கொலைகார கும்பலிடம் இருந்து தனது குடும்பத்தை காப்பாற்ற தனுஷ் அசுரனாக மாறினாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை..

தனுஷ், தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்று இவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கு சொல்லிக்கொண்டேயிருக்க தேவையில்லை. ஆடுகளம் படத்திற்காக தனுஷ் தேசிய விருதை தட்டிச் சென்றார், அதே போல் ‘அசுரன்’ படத்திற்காக இந்த வருடத்திறான சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நிச்சயம் தட்டிச் செல்வார். அதில் துளியும் சந்தேகம் இல்லை.

தனது குடும்பத்திற்காக பதுங்கி பதுங்கி செல்லும் காட்சியாக இருக்கட்டும், அதே தனது குடும்பத்திற்காக அசுரனாக பாயும் காட்சிகளாக இருக்கட்டும் தனுஷ் தனது உட்ச நடிப்பை கொடுத்திருக்கிறார். தனது மகனுக்காக ஊரார்களின் காலில் விழுந்து வணங்கும் காட்சிகளில் தனுஷ் ரசிகர்களின் இதயத்தில் கனத்தை கொண்டுவருகிறார்.

தனுஷின் மூத்த மகனாக வரும், டீ ஜே அருணாசலம் மற்றும் இரண்டாவது மகனாக வரும் கென் (நடிகர் கருணாஸின் மகன்) இருவருமே படத்திற்கு மிகப்பெரிய பலம். இப்படத்தில் இருவருமே அறிமுகம் என்பதே தெரியாத அளவிற்கு மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

அதுபோக, மஞ்சு வாரியர், பசுபதி, இவர்களின் நடிப்பை பற்றியும் கூற வேண்டும். மலையாளத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும், தமிழில் அறிமுகம் என்பது கூட தெரியாமல், அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் நடிகை மஞ்சு வாரியர். இயக்குனர் பாலாஜி சக்திவேல், பிரகாஷ்ராஜ் பவன், வெங்கடேசன், ஆடுகளம் நரேன், அம்மு அபிராமி என அனைவரும் படத்தில் கேரக்டராகவே மாறி படத்தின் உடலுக்கு உயிரோட்டம் கொடுத்திருக்கிறார்கள்.

மீண்டும் தான் ஒரு வெற்றி படத்தின் இயக்குனர் என்பதை வெற்றிமாறன் நிரூபத்திருக்கிறார். 1960 களில் உச்சத்தில் இருந்த சா(தீ)திய கொடுமை, 1980 களில் நடைபெற்ற நிலங்களின் உரிமை என இருவேறு கதைகளத்தில் பயணம் புரிந்திருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.

ஜி வி பிரகாஷின் பாடல்கள் மற்றும் பின்னனி இசை மிரட்டல். வேல்ராஜ்ஜின் ஒளிப்பதிவு தென்னாநாட்டு மண்ணின் வாசத்தை நுகர வைத்திருக்கிறது.

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணி எப்போதுமே சரிந்தது இல்லை என்பதை பறைசாற்றும் மற்றுமொரு அசாத்திய படைப்பு தான் இந்த ‘அசுரன்’.

அசுரன் – தமிழ் சினிமாவில் நடிப்பின் அசுரனாக மாறிய ‘தனுஷ்’.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker