
இயக்கம்: உன்னி சிவலிங்கம்
நடிகர்கள்: ஷேன் நிகாம், சாந்தணு, செல்வராகவன், அல்போன்ஸ் புத்திரன், ப்ரீத்தி அஸ்ரானி உள்ளிட்ட பலர்
ஒளிப்பதிவு: அலெக்ஸ் புலிக்கல்
இசை: சாய் அபயங்கர்
தயாரிப்பு: சந்தோஷ் டி குருவிலா, பினு ஜார்ஜ் அலெக்ஸாண்டர்
நாயகன் ஷேன் நிகாம் மற்றும் ஷாந்தணு உட்பட சிலர் கபாடி வீரர்கள். இவர்கள் அனைவரும் நண்பர்களாக இருக்கின்றனர். இவர்களில் நான்கு பேர் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். லோக்கலில் நடக்கும் அனைத்து கபாடி போட்டிகளிலும் விளையாடி பரிசுகளை தட்டிச் செல்கின்றனர்.
கந்து வட்டி வேட்டையில் திழைத்து ஓங்கி இருக்கிறது மூன்று ரெளடி கும்பல். அதில், செல்வராகவன், அல்போன்ஸ் புத்திரன் மற்றும் கெளரி என்ற பெண் இவர்கள் மூவரும் மீட்டர் வட்டி, ஜம்போ வட்டி என்று கந்துவட்டி பிஸினஸில் கொடிகட்டிப் பறக்கின்றனர்.
வட்டி கொடுக்காத நபர்களை அடித்தும், அவர்களை நிர்வாணப்படுத்தியும் என பல கொடுமைகளை தனது அடியாட்களை வைத்து செய்து வருகிறார் செல்வராகவன். எப்படியாவது, தனியாக வங்கி ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்பது இவரின் கனவு.
இந்நிலையில், செல்வராகவனின் கபாடி டீம் தொடர்ச்சியாக தோற்றுக் கொண்டே வருவதை அறிந்த செல்வராகவன், விளையாட்டு வீரர்களான சாந்தணு, ஷேன் நிகாம் மற்றும் இருவரை அழைத்து தன் டீமுக்கு வந்து விளையாடினால் அதிகமாக பணம் தருவதாக கூறுகிறார்.
பணத்திற்காக ஆசைப்பட்டு, சாந்தணு உடனே ஓகே சொல்ல எதிர் அணியாக அல்போன்ஸ் புத்திரன் டீம் களமிறங்குகிறது.
அல்போன்ஸ் புத்திரனின் டீமை அடித்து ஓட விடுகிறார்கள் செல்வராகவன் டீம்.
இதனால், அல்போன்ஸ் புத்திரனின் நேரடி பகையை சம்பாதித்துக் கொள்கிறார்கள் ஷேன் நிகாம் & ப்ரண்ட்ஸ். செல்வராகவன் இவர்களை பயன்படுத்தி தனது தொழிலை பெருக்க திட்டம் போட்டு, அவர்களை பயன்படுத்த ஆரம்பிக்கிறார். இவர்களுக்கு நடுவே தனது ஆடுபுலி ஆட்டத்தையும் நடத்துகிறார் கெளரி.
கபாடி வீரர்களாக ஆரம்பித்த இவர்களின் வாழ்க்கை இந்த கும்பலில் சிக்கி என்னவானது என்பதே படத்தின் மீதிக் கதை.
கதையின் நாயகன் ஷேன் நிகாம் என்று தனிமைப்படுத்த முடியாது. இப்படத்தில் நடித்து நான்கு பேரும் ஹீரோக்கள் தான். இவர்களில் குறிப்பாக ஷேன் நிகாம் மற்றும் சாந்தணு இருவருமே தங்களது பெஸ்ட் நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
அதிலும், இவர்களின் சண்டைக் காட்சி படத்தில் அதிரடி காட்டியிருக்கிறது. எமோஷன்ஸ், ஆக்ஷன்ஸ் என கிடைக்கும் காட்சிகளிலெல்லாம் தனது நடிப்பின் திறமையை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்கள் இருவரும். சாந்தனு கேரியரில் ஒன் ஆஃப் தி பெஸ்ட் என்றே கூறலாம் இப்படத்தை.
ஹோட்டல் பைட், சோடா பேக்டரி பைட், க்ளைமாக்ஸ் லாட்ஜ் பைட் என படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகள் அனைத்தும் படத்திற்கு மிகப்பெரும் பலம் என்றே கூறலாம்.
யாருப்பா அந்த சண்டை இயக்குனர், என வியந்து பார்க்கும்படியான ஒரு ஸ்பெஷல் சண்டைக் காட்சியை கொடுத்து மிரள வைத்திருக்கிறார் சண்டை இயக்குனர்.
வில்லத்தனத்தை தனக்கே உரித்தான உடல் மொழியில் மிரட்டியிருக்கிறார் செல்வராகவன். வில்லத்தனத்தை வித்தியாசமாக கொடுத்து தன் பக்கத்திற்கு கவனத்தை ஈர்த்திருக்கிறார் அல்போன்ஸ் புத்திரன்.
வில்லியாக நடித்த கெளரி என்ற கதாபாத்திரத்தில் நடித்த பெண்ணும் நடிப்பில் அசத்தியிருக்கிறார். நாயகி, ப்ரீத்தி அஸ்ரானி, தனக்குக் கொடுக்கப்பட்டதை அளவாக செய்து முடித்திருக்கிறார்.
பாடல்கள் ரசிக்கும்படியாக இருந்தது. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் சாய் அபயங்கர். ஒவ்வொரு வில்லனுக்குமான தீம் மியூசில் வெறித்தனம்.
ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம் என்றே கூறலாம். ஆரம்பத்தில் கபாடி போட்டியில் ஆரம்பித்த அந்த பிரம்மிக்க வைக்கும் ஒளிப்பதிவானது படம் இறுதி வரையிலும் இருந்தது.
அதிலும், கபாடி போட்டி, சண்டைக் காட்சி, (சோடோ பேக்டரி குகை பைட்), க்ளைமாக்ஸ் பைட் சீன் என அனைத்தும் படத்திற்கு பக்கபலம் தான்.
முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தினை இயக்கியிருக்கிறார் இயக்குனர். நம்பிக்கை, துரோகம், பழிவாங்குதல் என ஒரு ஆக்ஷன் படத்திற்குத் தேவையான அனைத்தும் இப்படத்தில் உள்ளது. இயக்குனரின் திறமை நன்றாகவே வெளிப்பட்டுள்ளது.
க்ளைமாக்ஸ் பைட் கொஞ்சம் ட்ரிம் செய்திருக்கலாம்…
பல்டி – ஆக்ஷன் சரவெடி..