
தமிழில் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தனியார் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்குகிறார்.
தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் வரும் 21ந்தேதி துவங்க உள்ளது. முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆரும், இரண்டாவது சீசனை நானியும் தொகுத்து வழங்கினார்கள். இந்நிலையில் மூன்றாவது சீசனை மூத்த நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்க உள்ளார். இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. தெலுங்கில் பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான ஸ்வேதா ரெட்டியை பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைத்துள்ளனர். அவரும் உடனே சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:- ‘பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்த பிறகு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் எனக்கு போன் செய்து பேசினார். உங்களை ஒரு போட்டியாளராக தேர்வு செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்? என்று கேட்டார். அவர் எதை மனதில் வைத்துக் கொண்டு பேசுகிறார் என்பது எனக்கு புரிந்துவிட்டது. இதை அடுத்து நான் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுத்துவிட்டேன்’. இவ்வாறு ஸ்வேதா ரெட்டி தெரிவித்துள்ளார்.
’பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி என்னிடம் கேட்காதீர்கள். நான் ஏதாவது மோசமாக சொல்லிவிடப் போகிறேன். பிக் பாஸ் நிகழ்ச்சியின் கான்செப்டே எனக்கு பிடிக்கவில்லை. போட்டியாளர்கள் மோசமாக நடந்து கொள்கிறார்கள்’ என்று நாகர்ஜுனா முன்பு தெரிவித்தார்.
தற்போது பணத்திற்காக பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்த ஒப்புக் கொண்டுள்ளார் என்று கூறி ரசிகர்கள் அவரை திட்டுகிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி மோசம் என்று கருத்து கூறிய நாகர்ஜுனாவை எதற்காக அதை தொகுத்து வழங்க வைக்கிறீர்கள் என்று ரசிகர்கள் கேட்டு கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஸ்வேதா ரெட்டி தெரிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.