Spotlightசினிமா

கல்வியைப் பற்றிய தரமான படைப்பு “சார்” – சீமான் புகழாரம்

SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர்  விமல் நடிப்பில்,  கல்வியின் அவசியத்தை உணர்த்தும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம்  “சார்”.  இப்படத்தைப் பார்த்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், படக்குழுவினரை வெகுவாக பாராட்டி, படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்கள் படம் குறித்துக் கூறியதாவது..
என் அன்புக்குரிய தம்பி நடிகர் போஸ் வெங்கட் அவர்கள், அவரை நடிகராகத் தான் பார்த்திருக்கிறோம். என்னுடைய அப்பா பாரதிராஜாவின் ஈரநிலம் திரைப்படத்தில் நன்றாக  நடித்திருந்தார், ஆனால் இயக்குநராக அவரது இரண்டாவது படம் “சார்”.  SSS Pictures நிறுவனத்தின் சார்பில் இளைஞர்கள் இணைந்து, இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்கள்.  கல்வி மறுக்கப்பட்ட சமூகத்திலிருந்து நாங்கள் எல்லாம் கற்று,  இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம்.  பல கிராமங்களில் எங்களது பெற்றோர்கள், எல்லாம் 50 கிலோமீட்டர் தாண்டி, பயணித்ததே இல்லை. அப்படி இருக்கும் இந்த வேளையில் பழமைவாத நம்பிக்கைகள், அறிவை வளர்க்கும் இந்த கல்வியை, உள்ளே விடாமல் தடுக்கிறது, எவ்வளவு இடையூறாக இருக்கிறது, முட்டுக்கட்டை போடுகிறது, என்பதை மிக ஆழமாக, அழுத்தமாகத் தம்பி இந்த திரைப்படத்தில் எடுத்துக் காட்டி இருக்கிறார். இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர் விமல், தம்பி சரவணன், எல்லோரும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். பள்ளி மாணவர்களாக நடித்திருக்கும் அந்த சிறுவர்கள், இத்தனை சின்ன வயதில், எப்படி இத்தனை அழகான நடிப்பைத் தந்தார்கள், என்பதும் எப்படி நடிக்க வைத்தார் என்பதும் ஆச்சரியமாக இருக்கிறது.

பழமை வாதத்தை உடைத்து, கல்வியை நம் மக்களிடம் சொல்லிக் கொண்டு செல்ல, நம் முன்னோர்கள் எவ்வளவு உழைத்திருக்கிறார்கள் என்பதை, இந்த திரைப்படம் வெகு அழகாக எடுத்துக்காட்டுகிறது. மருத்துவம் போய்ச் சேராத மக்களுக்கு எப்படி சேகுவாரா மருத்துவத்தைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைத்தாரோ,  அதேபோல் கல்வி அறியாத மக்களுக்குக் கல்வியைக் கொண்டு சேர்க்க நினைக்கும், ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர், அவருடைய மகன், அவருடைய பேரன் என மூன்று தலைமுறை செய்த சேவை தான் இந்த திரைப்படம். இறுதியாகத் திரைப்படத்தை ஆசிரியர்களுக்குச் சமர்ப்பணம் செய்யும் அவருடைய குரலே  நமக்கு  சிலிர்ப்பூட்டுகிறது. நம் தாய் பத்து மாதம், நம்மைக் கருவறையில் சுமந்தாள் ஆனால் ஆசிரியர் பெருமக்கள் 20 ஆண்டுகள் கல்விக் கருவறையில் நம்மை சுமக்கிறார்கள், என்பதைப்  போஸ் வெங்கட் இப்படத்தில் மிக அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார். ஒரு நடிகராக அவரை நமக்குத் தெரியும், ஒரு மிகச்சிறந்த படைப்பை உருவாக்கும் படைப்பாளனாக, இந்த திரைப்படம், அவரை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்.  தம்பி போஸ் வெங்கட் அவர்களுக்கும், படத்தில் நடித்த கலைஞர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள் அனைவருக்கும் இப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்கள் அனைவருக்கும், என்னுடைய வாழ்த்துக்கள். தெரிவித்துக் கொள்கிறேன் இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற என் இனிய வாழ்த்துக்கள், நன்றி.

போஸ் வெங்கட் இயக்கியுள்ள  இப்படத்திற்கு ஒளிப்பதிவு இனியன், போர்த்தொழில் படப்புகழ்  ஶ்ரீஜித் சாரங் எடிட்டிங், இசையமைப்பு சித்து குமார், மற்றும் கலை இயக்கம் பாரதி ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

இயக்குநர் வெற்றிமாறனின் திரைப்பட  நிறுவனமான கிராஸ்ரூட் நிறுவனம் இப்படத்தை பெருமையுடன் வழங்குகிறது.  ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படங்களை வெளியிட்டு வரும்  ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கோட் படத்திற்குப் பிறகு சார் படத்தை தமிழகமெங்கும்  வெளியிடுகிறது. வரும் அக்டோபர் 18 ஆம் தேதி உலகமெங்கும் இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button