
அதுல் இந்தியா மூவீஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் BP 180 படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு படத்தின் நாயகி தன்யா ரவிச்சந்திரன், நடிகர்கள் பாக்யராஜ், டேனியல் பாலாஜி, அருள்தாஸ் மற்றும் இசையமைப்பாளர் ஜிப்ரான் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பூஜை நிகழ்வு முடிந்ததும் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர் படக்குழுவினர்.
விழாவில் பேசிய இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான், “ராட்சசன் படத்தினை பார்த்தபிறகு அதுல் என்னை அழைத்து தமிழில் படம் செய்ய வேண்டும் என்று கூறினார். மிஷ்கின் உதவி இயக்குனர் என்று சொன்னதும் உடனே ஓகே சொல்லிவிட்டேன். இந்த படத்திற்கான ஏற்ற டைட்டில் “BP 180”. பெரிய நம்பிக்கையுடன் படத்தினை ஆரம்பிக்கிறோம். அனைவரது ஆதரவும் தேவை.” என்று கூறினார்.
தன்யா ரவிச்சந்திரன் பேசும் போது, “வாழ்த்த வந்திருந்த அனைவருக்கும் நன்றி. புதுமையான ரோலில் நடிக்க இருக்கிறேன். இது ஒரு க்ரைம் த்ரில்லர்.இந்த படத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி. பாக்யராஜ் சார் இந்த படத்தில் இருப்பது கூடுதல் மகிழ்ச்சி.” என்று கூறினார்.
இயக்குனர் ஜேபி பேசும் போது, “இது எனக்கு முதல் மேடை. இந்த மேடையில் என் குருநாதர் மிஷ்கின் சார் இல்லாதது சற்று வருத்தம் தான் எனக்கு. ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வருவதாக கூறியிருக்கிறார். வந்திருந்து வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.” என்று கூறினார்.